4 ஆவது போட்டி இன்று கொழும்பில்

ஆஸியுடனான 3 ஆவது போட்டியில் இலங்கைக்கு இலகு வெற்றி

இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பில் நடைபெறவுள்ளது.

அவுஸ்திரேலியா --இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில், இலங்கை குசல் மெண்டிஸ் - பெதும் நிஸ்ஸங்கவின் சாதனை இணைப்பாட்டத்தோடு 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியுடன் இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 2-1 என முன்னிலை அடைந்துள்ளது.

இந்த ஒருநாள் தொடரில் கண்டியில் இடம்பெற்ற முதல் இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச அரங்கில் கடந்த (19) இடம்பெற்றது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய இலங்கை அணியை முதலில் களத்தடுப்பை மேற்கொள்ளுமாறு பணித்தது. இப் போட்டிக்கான இலங்கை அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் இருந்து ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்குப் பதிலாக மற்றொரு இடதுகை துடுப்பாட்ட வீரரான விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல அணியில் இணைக்கப்பட்டார்.

சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க உபாதையில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் அவர் இப் போட்டியிலும் அணியில் இணைக்கப்பட்டிருக்கவில்லை.

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்படி அனுபவ துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், சகலதுறை வீரர் பெட் கம்மின்ஸ் மற்றும் மிஷெல் வெப்சன் ஆகியோர் நீக்கப்பட்டு மிச்செல் மார்ஷ், கமருன் கிரீன் - ஜை றிச்சர்ட்சன் ஆகியோர் இப் போட்டிக்காக அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து நாணயச் சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீர நெருக்கடியினை உருவாக்கினார். அதன்படி அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டாக டேவிட் வோர்னர் துஷ்மந்த சமீரவின் பந்துவீச்சில் 9 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

இதனையடுத்து புதிய வீரராக வந்த மிச்சல் மார்ஷின் விக்கெட்டும் அவர் 10 ஓட்டங்களை எடுத்த நிலையில், துனித் வெல்லாலகேவின் பந்துவீச்சில் பறிபோனது.

மூன்றாம் விக்கெட்டுக்காக ஆரோன் பின்ஞ் – மார்னஸ் லபுஷேன் ஜோடி சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்க முயன்றது. 67 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டம் மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது. மார்னஸ் லபுஷேன் 29 ஓட்டங்களுடன் ஜெப்ரி வென்டர்செயின் முதல் விக்கெட்டாக மாறினார்.

அவுஸ்திரேலிய அணியின் நான்காம் விக்கெட்டாக ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 30ஆவது அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்த ஆரோன் பின்ச் 85 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 62 ஓட்டங்கள் பெற்று ஜெப்ரி வென்டர்சேயின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

ஆரோன் பின்ஞ்சின் விக்கெட்டின் பின்னர் அவுஸ்திரேலிய அணிக்கு அலெக்ஸ் கேரி, ட்ராவிஸ் ஹெட் மற்றும் கிளன் மெக்ஸ்வெல் ஆகியோர் பெறுமதி சேர்க்க அவ்வணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்கள் எடுத்தது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் ட்ராவிஸ் ஹெட் தன்னுடைய 12ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 65 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்றார். அலெக்ஸ் கேரி 49 ஓட்டங்களை எடுக்க, கிளன் மெக்ஸ்வெல் 18 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வன்டர்செய் 3 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர, துனித் வெல்லாலகே - தனன்ஞய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 292 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக நிரோஷன் டிக்வெல்ல மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் களம் வந்தனர்.

இந்த வீரர்களில் இலங்கை அணிக்காக சிறந்த ஆரம்பத்தினை நிரோஷன் டிக்வெல்ல வழங்கிய போதும் அவரினால் அதனை பெரிய இன்னிங்ஸ் ஆக மாற்ற முடியாமல் போனது.

தொடர்ந்து கிளன் மெக்ஸ்வெலினால் போல்ட் செய்யப்பட்ட நிரோஷன் டிக்வெல்ல 5 பௌண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்கள் பெற்று இலங்கையின் முதல் விக்கெட்டாக மாறினார்.

இரண்டாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க ஜோடி பொறுமையான முறையில் இணைப்பாட்டம் ஒன்றுக்கு வித்திட்டனர். தொடர்ந்து இரண்டு வீரர்களும் தங்களது அரைச்சதங்களைப் பூர்த்தி செய்ய இந்த இணைப்பாட்டம் வலுப்பெறத் தொடங்கியது.

தொடர்ந்து இந்த இரண்டு வீரர்களினதும் விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவது அவுஸ்திரேலிய வீரர்களுக்கு கடினமாக, இலங்கை சார்பில் ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பெறப்பட்ட அதிகூடிய இரண்டாம் விக்கெட் இணைப்பாட்டத்தினை குசல் மெண்டிஸ் – பெதும் நிஸ்ஸங்க ஜோடி பதிவு செய்தது. 170 ஓட்டங்கள் வரை நீடித்த அந்த சாதனை இணைப்பாட்டம் குசல் மெண்டிஸின் கால் உபாதை காரணமாக அவர் மைதானத்தினை விட்டு வெளியேற நிறைவுக்கு வந்தது.

குசல் மெண்டிஸ் மைதானத்தினை விட்டு வெளியேறும் போது தன்னுடைய 19ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 85 பந்துகளுக்கு 8 பௌண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

குசல் மெண்டிஸின் பின்னர் பெதும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற கன்னி சதத்தின் உதவியோடு இலங்கை அணி போட்டியின் வெற்றி இலக்கினை 48.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 292 ஓட்டங்களுடன் அடைந்தது.

அத்துடன் இது இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக துரத்திய அதிகூடிய வெற்றி இலக்காகவும் மாறியது.

இலங்கை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பெதும் நிஸ்ஸங்க 147 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 137 ஓட்டங்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய சிறந்த இன்னிங்ஸை பதிவு செய்தார்.

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் ஜை ரிச்சர்ட்ஸன் 2 விக்கெட்டுக்களையும், ஜோஸ் ஹேசல்வூட் மற்றும் கிளன் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பதம்பார்த்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக பெதும் நிஸ்ஸங்க தெரிவானார்.


Add new comment

Or log in with...