பிரகீத் எக்னலிகொட வழக்கு; பிணையிலிருந்த 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கும் விளக்கமறியல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 09 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (03) நீதியரசர்கள் மூவரடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

வழக்கு இன்றையதினம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது,

குறித்த வழக்கில் சாட்சியமளிக்க சுமதிபால சுரேஷ் என்பவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஏற்கனவே அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்வதற்கு, நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பித்திருந்ததாக, வழக்கில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் கோர்கை விடுத்தார்.

குறித்த சாட்சியாளர் மீது ஏதோவொரு வகையில் அழுத்தம் செலுத்தப்படுவதாகத் தோன்றுவதால், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, வழக்கின் சாட்சிகள் மீது அழுத்தம் செலுத்தப்படுவதாக தானும் கருதுவதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார்.

அதற்கமைய, பிணையில் விடுவிக்கப்பட்ட 09 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றையதினம் மன்றில் ஆஜராகியிருந்த குறித்த சாட்சியாளரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதோடு, மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடந்த 2010 ஜனவரி 24ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...