ETF, EPF இற்கு மிகைவரி கிடையாது; அமைச்சரவைக்கு நிதியமைச்சர் விளக்கம்

ETF, EPF இற்கு மிகைவரி கிடையாது; அமைச்சரவைக்கு நிதியமைச்சர் விளக்கம்-13 Cabinet Decisions-14-02-2022

- கிராம அலுவலர் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் 40 குடும்பங்களுக்கு ரூ. 2,000 பெறுமதியான பொருட்கள்
- 115,867 தோட்டக் குடும்பங்களுக்கு மாதாந்தம் சலுகை விலையில் 15 கி.கி. கோதுமை மா
- வீதிகளில் துவிச்சக்கரவண்டிப் பாதை, நடைபாதைகள்
- அத்தியாவசிய பொருட்களை சந்தைக்கு விநியோகிக்க நிதியமைச்சர் தலைமையில் 4 அமைச்சர்கள், 3 இராஜாங்க அமைச்சர்கள் கொண்ட குழு
- பல்வேறு விடயங்கள் தொடர்பான இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை உப குழுக்கள்

இவ்வார (14) அமைச்சரவைக் கூட்டத்தில் 13 முடிவுகள்

2021 ஆம் ஆண்டில், ரூ. 2,000 மில்லியன் இற்கு அதிக நிகர இலாபம் ஈட்டும் தனியாட்கள் மற்றும் கம்பனிகளிடமிருந்து 25% வீதமான மிகைவரி தொடர்பாக தன்னால் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையின் கீழ் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) உள்ளிட்ட 9 நிதியங்கள் உட்படுத்தப்படாதென நிதி அமைச்சர் அமைச்சரவைக்குத் தெளிவூட்டியுள்ளார். அதற்கமைய, ஒருசில தரப்பினரால் அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புக்கள் அடிப்படையற்றதெனவும் நிதி அமைச்சர் மேலும் அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இவ்வார அமைச்சரவைக் கூட்டத்தில் 13 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

2. வீட்டுமட்ட பொருளாதாரப் பாதுகாப்பு (நிவாரணப் பொதி) வேலைத்திட்டம்
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட விரிவான பொருளாதார அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் ஒரு வேலைத்திட்டமாக வீட்டுமட்ட பொருளாதாரப் பாதுகாப்பு (நிவாரணப் பொதி) வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைப்பதற்காக ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் குறைந்த வருமானங் கொண்ட 40 குடும்பங்களை விசேடமான அளவுகோல்களைப் பயன்படுத்தி குறித்த பிரதேச செயலாளரின் பரிந்தரைக்கமைய தெரிவு செய்து, அக்குடும்பங்களுக்கு 2,000 ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடிய வகையில் பயனாளிக் குடும்பங்களுக்கு டிஜிட்டல் அட்டையை வழங்குவதுடன், அவ்வட்டையைப் பயன்படுத்தி வீட்டுமட்டப் பொருளாதார அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களை அடிப்படையாகக் கொண்ட சிறியளவிலான பல்பொருள் விற்பனை நிலையங்கள் மூலமாக உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும். அதற்கமைய, குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. தோட்டத் தொழிலாளர்களுக்கான கோதுமை மா நிவாரணம் வழங்கல்
நிதி அமைச்சர் அவர்களால் “பொதுமக்கள் முகங்கொடுப்பதற்கு நேரிட்டுள்ள பொருளாதார சிரமங்களைக் குறைப்பதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல்” எனும் தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்திற்கான முன்மொழிவுகள் 2022 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முன்மொழிவுகளில் தோட்டத் தொழிலாளர்களின் குழும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்குதல் தொடர்பான யோசனை வர்த்தக அமைச்சரின் தலைமையிலான குழு கவனத்தில் கொண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது. அப்பரிந்துரைகளின் பிரகாரம் அடையாளங் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்புடன் மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்தல்
இலங்கையில் தற்போது இயங்குநிலையிலுள்ள வாகனங்கள் 05 மில்லியன்களுக்கு அதிகமாகக் காணப்படுவதுடன், அது 2000 ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது. குறிப்பாக முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் போன்ற தனியார் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்தமையே அதற்கான காரணமாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வருமானம் அதிகரிப்பு மற்றும் நிலவுகின்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதிலுள்ள சிரமங்களாலும் தனியார் மோட்டார் வாகனங்களின் பாவனை அதிககரித்துள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளதுடன், தனியார் மோட்டார் வாகனப் பாவனை துரிதமாக அதிகரித்துள்ளமை, மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளின் பங்களிப்பு குறைவடைந்தமைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வளிமண்டலம் மாசடைவது குறைக்கப்படுவதுடன், உடல் ஆரோக்கியம், வளியின் தரம், சுற்றடல், காலநிலை மாற்றங்கள் மற்றும் தனிநபர் நிதிநிலைமை போன்ற விடயங்களில் நேர்மய விளைவுகளை ஏற்படுத்தும்.

அதனால், பொருளாதார மற்றும் சுற்றாடல் ரீதியான நன்மைகளை அடைவதற்காக, மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை நிலவுகின்ற போக்குவரத்துக் கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பது பொருத்தமாக அமையுமென கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த விடயங்களை கருத்தில் கொண்டு ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறைகமைய கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.
• தற்போதுள்ள வீதிகளுக்குப் பொருத்தமான வகையில் துவிச்சக்கரவண்டிப் பாதையை புள்ளடியிட்டு வேறாக்குதல் மற்றும் பாதசாரிகளுக்காக தற்போதுள்ள நடைபாதைகளை மேம்படுத்தல்
• எதிர்வரும் காலங்களில் நிர்மாணிக்கப்படும் வீதிகளுக்கு துவிச்சக்கரவண்டி மற்றும் நடைபாதைகளை உள்ளடக்குவதற்கான நடவடிக்கை எடுத்தல்
• அரச அலுவலகர்களுக்க துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், மற்றும்
• அலுவலகங்களில் துவிச்சக்கரவண்டிப் பாவனையாளர்களுக்கு அவற்றைத் தரித்து வைப்பதற்கான இடங்கள் மற்றும் அவற்றின் அணுகலக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்

5. அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை சந்தைக்கு விநியோகிப்பதை முறைமைப்படுத்தல்
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான கொள்கை ரீதியான பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை முன்வைப்பதற்காக கீழ்வரும் உறுப்பினர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
• நிதி அமைச்சர் - தலைவர்
• வர்த்தக அமைச்சர்
• விவசாய அமைச்சர்
• துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்
• கூட்டுறவு சேவைகள், விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
• அலங்கார வளர்ப்பு மீன்கள், நன்னீர் மீன்பிடி மற்றும் இறால் வளர்ப்பு, மீன்பிடித் துறைமுகங்கள், பலநாள் கடற்கலன்கள் நடவடிக்கைகள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர்
• கால்நடை வளங்கள், பண்ணைகள் ஊக்குவிப்பு மற்றும் பால் மற்றும் முட்டை சார்ந்த தொழிற்றுறை இராஜாங்க அமைச்சர்

6. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் ஏற்றுமதி முன்னுரிமை தொழிற்றுறைக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தொழில் உபகரணங்கள் இறக்குமதி செய்தல்
கௌரவ நிதி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “2022 பொருளாதாரம் மற்றும் முன்னோக்கிய பயணம்” எனும் பெயரிலான அமைச்சரவைப் பத்திரத்தை 2022 ஜனவரி மாதம் 03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுக்கப்பட்ட வேளையில், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் ஏற்றுமதி முன்னுரிமை தொழிற்றுறைக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தொழில் உபகரணங்கள் இறக்குமதி செய்வதற்காக மாற்று வழிமுறையைக் கண்டறிவதற்கான தேவை அமைச்சரவையால் கருவனம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அவ்வாறான உபகரணங்கள் நாட்டிற்கு இறக்கமதி செய்யும் நாடுகளுடன் கலந்துரையாடுவதற்காக கீழ்வரும் அமைச்சரவை உபகுழுக்களை நியமிப்பதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
(i) சீனக் குடியரசுடன் கலந்துரையாடுவதற்காக
• வெளிவிவகார அமைச்சர் - தலைவர்
• வர்த்தக அமைச்சர்
• கைத்தொழில் அமைச்சர்
• பெருந்தோட்டத்துறை அமைச்சர்
(ii) ஜப்பான் நாட்டுடன் கலந்துரையாடுவதற்காக :
• வெளிவிவகார அமைச்சர் - தலைவர்
• சுகாதார அமைச்சர்
• வெகுசன ஊடக அமைச்சர்
• நெடுஞ்சாலைகள் அமைச்சர்
(iii) மத்தியகிழக்கு அரசுகளுடன் கலந்துரையாடுவதற்காக :
• வெளிவிவகார அமைச்சர் - தலைவர்
• இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர்
• நீதி அமைச்சர்

7. பசுமை இலங்கை: “ஒருவருக்கு - ஒரு மரக்கன்று” தேசிய வேலைத்திட்டம்
இலங்கையில் தற்போது காணப்படும் காடுகளைப் பாதுகாத்து 2025 ஆம் ஆண்டளவில் வன அடர்த்தியை 30% வீதம் வரை அதிகரிப்பதற்கும், நீரேந்துப் பிரதேசங்களைப் பாதுகாத்து ஊடுருவல் தாவரங்களை அகற்றி சூழல் நேயம்மிக்க தாவரங்களின் பரம்பலை அதிகரிப்பதற்கும் பொருத்தமான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 2000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பசுமை இலங்கை – “ஒருவருக்கு – ஒரு மரக்கன்று” தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு தேவையான நடவடிக்கைளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய கீழ்வரும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

  • 200 வனக் கிராமங்களை உருவாக்கல்
  • பாடசாலைகள் மற்றும் தேசிய கல்வி நிறுவனங்களில் மரநடுகை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
  • நாடளாவிய ரீதியில் மூலிகைப் பூங்காக்களை அமைத்தல்
  • வணக்கத்தலங்களில் மரநடுகைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
  • குளக்கரை, நீர்ப்பாசன பாதுகாப்பு வனங்கள் மற்றும் நீரேந்துப் பிரதேசங்களில் மரநடுகை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
  • அரச நிறுவனங்கள், பகுதி அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளில் மரநடுகை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
  • தோட்டக் கம்பனிகளால் முகாமைத்துவப்படுத்தப்படும் காணிகளிலும் தனியாருக்குச் சொந்தமான காணிகளிலும் மரநடுகை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
  • நாடளாவிய ரீதியில் நாற்றுப் பண்ணைகளை அமைத்தல்
  • வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூகத்தவர்களை விழிப்புணர்வூட்டல் மற்றும் பரப்புரை நிகழ்ச்சித்திட்ட தொடரை நடாத்துதல்
  • வனமாக்கலுக்குப் பொருத்தமான தாவரங்களை அடையாளங் காண்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆய்வு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

குறித்த கருத்திட்டங்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகளுக்கமைய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.

8. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் Texas A & M University இடையிலான ஆய்வு ஒத்துழைப்பு
மன இறுக்க (Autism) நோயின் சிகிச்சைநிலை அறிகுறிகள் மற்றும் உயிரியல் இரசாயனப் போக்குகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி கற்றறிந்து கொள்வதற்கான ஆய்வுக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஏ மற்றும் எம் பல்கலைக்கழகத்திற்கும் (Texas A & M University) இடையில் பரிமாற்று ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. மன இறுக்க (Autism) நோயின் சிகிச்சைநிலை அறிகுறிகள் மற்றும் குருதி மற்றும் சிறுநீரில் காணப்படும் வளர்சிதைவுக் கூறுகளின் சதவீதத்திற்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ளல் மற்றும் ஒவ்வொரு தரப்பினரதும் திட்டவட்டமான தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை நோக்கமாகக் கொண்டு ஆய்வு ஒத்துழைப்புக்களை நிறுவிக்கொள்வதே இவ் ஒப்பந்தத்தின் நோக்கமாகும். அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அஙடகீகாரம் வழங்கியுள்ளது.

9. பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் (Home Shop) வலையமைப்பை நிறுவுதல்
கிராமிய மட்டத்திலான குடும்ப அலகுகளில் தொழில் முயற்சிகளுக்கு ஆர்வம் காட்டும் பெண்களை அடையாளங் கண்டு, தொழில் முனைவுகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஆரம்ப மூலதனத்தை வழங்குவதன் மூலம் “ஒரு கிராமத்தில் ஒரு பெண் தொழில் முயற்சியாளரை” உருவாக்கும் நோக்கில், பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் (Home Shop) வலையமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 15,000 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கிடப்பட்டுள்ளது.

குறித்த தொழில் முயற்சியாளர்கள் வறுமையொழிப்பு தொடர்பான செயலணியின் ஆலோசனையின் பிரகாரம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டலின் கீழ் பிரதேச யெலாளர்களால் அடையாளங் காணப்படுவார்கள். முன்மொழியப்பட்டுள்ள சிறியளவிலான பல்பொருள் நிலையங்களுக்காக 200 – 400 சதுர அடிகள் கொண்ட வீட்டின் ஒருபகுதியையோ அல்லது அவ்வீட்டைத் திருத்தியமைத்தல் அல்லது வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் புதிதாக நிர்மாணித்துக் கொள்ளல் அல்லது தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் புதிதாக நிர்மாணித்துக் கொள்ளல் போன்ற மேற்படி ஏதெனுமொரு முறையின் கீழ் தெரிவு செய்யப்படும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு இயலுமை கிட்டும்.

குறித்த சிறியளவிலான பல்பொருள் நிலையங்கள் கணணித் தொகுதி மூலம் இணைப்புச் செய்யப்படுவதுடன், அவ்வியாபார நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் அரசாங்கத்ததால் பெற்றுக் கொடுக்கப்படும். விற்பனைக்கான பொருட்களை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விசேட அளவுகோல்களின் பிரகாரம் தெரிவுசெய்யப்படும் குறைந்த வருமானங் கொண்டவர்களுக்கு டிஜிட்டல் அட்டை மூலம் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ள நிவாரணப் பொதி வேலைத்திட்டத்தின் கீழ் 2,000 ரூபா பெறுமதியான உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருட்களைப் பயனாளிகள் இப்பல்பொருள் நிலையத்தின் ஊடாக நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்கு இயலுமை கிட்டும். அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை காலநிலை மாற்றங்களுக்கான நிதியம் (தனியார்) கம்பனியின் நடவடிக்கைகளைப் பலப்படுத்தல்
2,050 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையை காபனற்ற நாடாக மாற்றுவதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானம் மேற்கொண்டுள்ளமையை, தேசிய ரீதியில் திட்டமிட்டுள்ள ஒத்துழைப்புகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான சட்டக சாசனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காபன் வெளியேற்றத்தைக் குறைக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை காலநிலை மாற்றங்களுக்கான நிதியம் (தனியார்) கம்பனி உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையைக் காபனற்ற நாடாக உருவாக்குவதற்குத் தேவையான உயர்ந்தபட்ச ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு இயலுமான வகையில் அக்கம்பனியின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்களை சமகாலத்திற்கு தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் கட்டமைப்பு ரீதியாகப் பலப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை காபன் நிகர பூச்சிய நிலை (Carbon Net Zero) நாடாக உருவாக்குவதற்குத் தேவையான திட்ட வரைபு (Road Map) மற்றும் மூலோபாயங்கள் தொடர்பான திட்டத்தைத் தயாரித்தல்
இலங்கை காபன் நிகர பூச்சிய நிலையை (Carbon Net Zero) அடைவதற்காக முக்கியமாக வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் பச்சைவீட்டு விளைவு வாயுக்களின் அளவுகளைக் குறைக்க வேண்டியதுடன், வளிமண்டலத்திலிருந்து காபனீரொட்சைட் வாயுவை உறிஞ்சுகின்ற சுற்றாடல் தொகுதியை அதிகரித்தல் வேண்டும். 2050 ஆம் ஆண்டளவில் இலங்கை காபன் நிகரப் பூச்சிய நிலை கொண்ட நாடாக உருவாக்கும் இலக்கை அடைவதற்கான திட்டவரைபை (Road Map) மற்றும் மூலோபாயங்களைத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 05 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வு மேற்கொண்டு திருத்தியமைக்கப்படும் திட்டவரைபு மற்றும் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அதற்கபக விசேட நிபுணத்துவத்துவதுடன் கூடிய நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கும் சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் நுகர்வோர் விற்பனை நிலையங்களுக்கான விற்பனை முனைய தொகுதி (POS) பெறுகைக்கான விலைமனுக்கோரல்
பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் நுகர்வோர் விற்பனை நிலையங்களுக்கான விற்பனை முனைய தொகுதிக்கான (POS) பெறுகைக்கு தேசிய போட்டி விலைமுறிக் கோரல் பொறிமுறையைப் பின்பற்றி பின்பற்றி விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்காக 05 விலைமனுக்கள் கிடைத்துள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்தரைக்கமைய குறித்த பெறுகைக்கான விலைமனுவை, ஈ-விஸ் சொலூசன்ஸ் பிரைவெட் லிமிட்டட் இற்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. முடிச்சு வகை சிகிச்சை முகக்கவசம் விநியோகிப்பதற்கான பெறுகைக் கோரல்
89 மில்லியன் முடிச்சு வகை சிகிச்சை முகக்கவசங்களை விநியோகிப்பதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்தரைக்கமைய அடிப்படையாக விபரங்களுடன் கூடிய வகையில் பதிலளிக்கும் குறைந்த விலைமனுதாரரான சிசிலி புரெஜெக்ட்ஸ் கொன்சோட்டியம் கம்பனிக்க குறித்த பெறுகையை வழங்குவதற்கும், பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய ஆரம்பத்தில் 30 மில்லியன் முகக்கவசங்களை விநியோகிப்பதற்கும் சுகாதார அமைச்சர் அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...