கொரோனா சவால்களை முறியடித்து மாணவர் கல்வியில் விசேட கரிசனை

இலங்கையின்  கல்வித்துறை  கடந்த மூன்று வருட காலத்தில் பல மாற்றங்களை கண்டு வருகிறது. குறிப்பாக கொரோனா தீநுண்மியின் தாக்கத்தினால் கல்வித்துறையில் பாரிய பாதிப்பு ஏற்படவிருந்த வேளை, அரசாங்கம் அவ்வப்போது அறிமுகப்படுத்திய சாதுரியமான செயற்பாடுகளினால் இன்று சுமுகநிலைமைக்கு வந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில்  எதிர்வரும் ஜந்து(5)வருட காலத்திற்கு அமுல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி அபிவிருத்தித் திட்டமொன்றை கல்வியமைச்சு இவ்வாரம் வெளியிட்டுள்ளது. எனவே சமகாலத்தில் முன்மொழியப்பட்டுள்ள எதிர்வரும் 5வருட காலத்திற்கான கல்வி அபிவிருத்திச் செயற்றிட்டம் பற்றி முதலில் பார்ப்பது பொருத்தமாகவிருக்கும்.

புதிய கல்வி அபிவிருத்திச்செயற்றிட்டம்:

நாட்டில் அமுலாகவுள்ள கல்வித்துறை அபிவிருத்திச் செயற்றிட்டம் (2020_ - 2025) புதிய கல்விச்சீர்திருத்த அமுலாக்கங்களுடன் இணைந்ததாக இருக்கும். அது 2020ஆம் ஆண்டு  தொடக்கம் 2025ஆம் ஆண்டு வரையான பொதுக்கல்வித்துறை அபிவிருத்திச் செயற்றிட்டம் தொடர்பானதாகும்.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள இத்திட்டத்தில் உள்ள பிரதான விடயங்களை சுருக்கமாக இங்கு அவதானித்தல் நலம்.

 இரண்டு வகையான பாடசாலைகள் மாத்திரமே இருக்கும்.

1. ஆரம்ப நிலை பாடசாலைகள்                      (தரம்1-- தரம்5)- அதிகூடியதாக 600மாணவர்கள் 

2. உயர்நிலை பாடசாலைகள்     (தரம் 6 -தரம் 13)-   அதிகூடியதாக 3000மாணவர்கள்.

 பாடசாலைகள் ஒரு வலையமைப்பில் இணைக்கப்படல்

 1000தேசிய பாடசாலைகள்

 ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 20மாதிரி உயர்நிலை தேசிய பாடசாலைகள்

 ஒரு வகுப்பில் அதிகூடியதாக 40மாணவர்கள்

 வாண்மைத்துவ அனுமதிப் பத்திரம்

 தேசிய - மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரிய இடமாற்ற வசதி

 தரம் 4 ,8இல் தேசிய மதிப்பீடு

 மாணவர்களுக்கான சர்வதேச மதிப்பீடு

 க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்கைள் ஒரே சந்தர்ப்பத்தில்

 தரம் 6மாணவர்களுக்கான நுண்ணறிவுப் பரிசோதனை

 சாதாரண தர பரீட்சைக்கு 8பாடங்கள் (கட்டாய பாடம் 6தெரிவுப் பாடம்)

அதிபர் ஆசிரியர்களது சம்பளபிரச்சினைக்கு அதிரடித் தீர்வு:

நாட்டில் கடந்த 24வருடங்களாக புரையோடிப்போயிருந்த அதிபர், ஆசிரியர்களது சம்பள முரண்பாடு தொடர்பான நீண்ட கால பிரச்சினையொன்று இந்த அரசாங்கத்தால் கடந்த வாரம் அதிரடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்காக கடந்த 3மாதங்களுக்கும் மேலாக போர்க்கொடி தூக்கி கொரோனாவுக்கு மத்தியில் போராடி வந்த இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள்  அரசாங்கத்தை வாழ்த்தியுள்ளன.  ஒருநாட்டின் கல்வித்தரம் என்பது அங்குள்ள ஆசிரியர்களின் தரத்தை விஞ்சாது என்று கல்வியியலாளர் கூறுவர்.

மனிதனை மனிதனாக உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்களைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மைப் படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது. தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

ஒரு குழந்தை தனது தாய் தந்தையருக்கு அடுத்து நல்லொழுக்கம் பண்பாடு அறிவு மரியாதை கல்வி என அனைத்தையும் ஆசிரியரிடமிருந்து தான் கற்றுக் கொள்கிறது. இத்தகைய சிறப்பு மிகுந்தவர் ஆசிரியர்.

ஒரு குழந்தையை முதன் முதலில் இந்த பூமிக்கு கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்த குழந்தையை சான்றோன் ஆக்குபவர் தந்தை. மூன்றாவதாக அந்த குழந்தையை தன் சொல்லாலும் எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவேதான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர் நம் மூதாதையர்.

மனித வரலாற்றில் பிரிக்க முடியாத மனித சமுதாயத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். வாழ்க்கை என்ற பாடத்தை கற்பித்து மாணவர்களுக்கு ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

ஒரு சமூகம் அதி உன்னத நிலை அடைந்து இருந்தால்நிச்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால் ஆசிரியர் சமூகம் தனக்கான பணியை சரிவர செய்யவில்லை என்றுதான் அர்த்தம்.

அந்த வகையில் ஆசிரியர்கள் தன்னிறைவு அடைந்தவர்ளாகவிருக்க வேண்டும். அதற்காக அவர்களது வேதனத்தை உயர்த்த வேண்டியதவசியமாகும். அதனை விட கடந்த 28வருட காலமாக சம்பள முரண்பாடு காரணமாக வழங்கப்படாதிருக்கும் நிலுவையை வழங்க வேண்டியதும் அவசியமாகிறது. அதனை உண்மையிலே ஆசிரியர்க்காக, மாணவர்களுக்காக செயற்படும் உயிர்ப்புள்ள தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் பேசித் தீர்த்து கொண்டுள்ளதில் கல்விப்புலம் மகிழ்வடைகிறது.

ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு 30ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 2021ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார். ஆசிரியர், - அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டினை நீக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அரசாங்கத்தின் மூலம் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2021.8.30ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தினை விரைவாக செயற்படுத்துவதற்காக மேலும் ரூபா 30000மில்லியனை சம்பளமாக உட்சேர்ப்பதற்கு முன்மொழியப்படுகிறது.

இது ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளம் தொடர்பாக தற்பொழுது செலவிடப்படுகின்ற ரூபா 109,000மில்லியனுக்கு அதிக தொகையினை விட மேலதிக ஒதுக்கீடாகும். தற்பொழுது பயிலுநராக அரசாங்க சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட 53000இற்கு அதிக பட்டதாரிகளுக்கு 2022ஜனவரி மாதம் முதல் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக ரூபா 27,600மில்லியன் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, குறித்த முழுத் தொகையினையும் இவ்வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபா 20,000மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 7,600மில்லியன் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்க பணியாளர்களின் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக 500மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

இழந்தகல்வியை மீட்க அரசின் திட்டம்:

கொவிட் காரணமாக பாடசாலைகள் 2020மார்ச் மாதம் மூடப்பட்டன. இடையிடையே பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் அவை வெற்றியளிக்கவில்லை. கொவிட் மூன்றாம் அலைக்குப் பின்னர் பாடசாலைகள் மீள திறக்கப்பட்டது ஒக்டோபர் 21ஆம் திகதியாகும்.

அதேவேளை கொரோனாவால் இழந்த கல்வியை மீட்க அரசாங்கம் பல வகையான வேலைத் திட்டங்களை அமுல்படுத்தி படிப்படியாக நான்குகட்டங்களாக பாடசாலைகளை திறந்துவருகிறது.

அதன்படி, ஏலவே ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான சகல பாடசாலைகளும் திறக்கப்பட்டு எவ்வித விக்கினமுமின்றி வெற்றிகரமாக பூரண அதிபர் ஆசிரியர் மாணவர் வரவுகளுடன் நடைபெற்று வருகின்றன. மூன்றாம் கட்டமாக கடந்த   8ஆம் திகதி தரம் 10, 11, 12, 13ஆகிய வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டிருந்தது.

நான்காம் கட்டமாக தரம் 6முதல் தரம் 9வரையான மாணவர்களை   எப்போது அழைப்பது என்பதை இன்னும் கல்வியமைச்சு வெளியிடவில்லை. எனினும் அதுவும் அடுத்தவாரம் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

அதேவேளை கொரோனாவால் இழந்த கல்வியை மீட்க சில வேலைத் திட்டங்களை தேசிய கல்வி நிறுவகம் கல்வியமைச்சுக்கு முன்மொழிந்துள்ளதை அறிவோம்.

கொரோனாவால்  தவற விடப்பட்ட விடயங்கள் அனைத்து வகுப்புகளிலும் ஏற்பட்டுள்ளன. எனவே தேசிய கல்வி நிறுவகமானது மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்லும் முன்னர் தவற விடப்பட்ட கல்விக்குரிய காலம் ஈடு செய்யப்படல் வேண்டும் என குறிப்பிடுகின்றது. இதற்காக 20வாரங்களில் நிறைவு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ள கற்றல் கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் பாடசாலை மூன்றாம் தவணையானது 20வாரங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என தேசிய கல்வி நிறுவகம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.இதனடிப்படையில் மார்ச் மாதம் இறுதி வரை மூன்றாம் தவணை தொடரப்படும் எனவும் ஏப்ரல் மாத விடுமுறைக்குப் பின்னர் 2022மே மாதமளவில் புதிய வருடத்துக்கான முதலாம் தவணை ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்றும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.    அதனடிப்படையில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வித் தவணை மே மாதம் தொடக்கம் டிசம்பர் வரை எட்டு மாதங்களை கொண்டிருக்கும்.ஒக்டோபர் 25முதல் 2022மார்ச் 31வரை ஒவ்வொரு பாடங்களுக்குமான அத்தியாவசிய கற்றல் பகுதிகளை பூரணப்படுத்துவதற்காக 800பாடவேளைகள் ஒதுக்கப்படும்.

அனைத்து பாடங்களும் 2022. மார்ச் 31ஆம் திகதிக்கு நிறைவு செய்யப்பட்டு புதிய வருடத்திற்கான முதலாம் தவணைக்கு அவர்களை தயார்படுத்தல் வேண்டும். 20வார அத்தியாவசிய கற்றல் திட்டமானது உயர்தரத்திற்குப் பொருந்தாது.

ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் அடுத்த வருடம் (2022) வரை பிற்போடப்பட்டுள்ளன. தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 2022.01.22சனிக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அதேவேளை உயர்தர பரீட்சை 2022.02.07ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 2022.05.23ஆரம்பிக்கப்படவுள்ளதும் தெரிந்ததே.

இவ்வாறு கல்வித்துறை எதிர்நோக்கும் சவால்களை இன்றைய அரசாங்கம் நிதானமாகக் கையாண்டு பாடசாலை நடவடிக்கைகளை மீள சுமுக நிலைமைக்கு கொண்டு வந்திருப்பதும் வியத்தகு மாற்றமேயாகும்.

வி.ரி.சகாதேவராஜா
உதவிக் கல்விப் பணிப்பாளர்
(காரைதீவு குறூப் நிருபர்)