- இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பொதுமக்களுக்கு விளக்கம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற LLB சட்டமாணி நுழைவுக்கான தெரிவு பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஒரு சில ஊடகங்களில் நேற்றும் (14) இன்றும் (15) வெளியிடப்பப்பட்டுள்ள செய்தி தொடர்பில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் (OUSL) பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் (OUSL) பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MOU) இணங்க, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கூறப்பட்ட நுழைவுப் பரீட்சை நடாத்தப்பட்டது என்பதை பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளின்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களமானது, வினாத்தாள்களை அமைப்பதற்கும், குறித்த பரீட்சையை நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்கான முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளதாக அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இவ்விடயம் தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திடம் தாம் வினவிய போது, இது தொடர்பில் முழு அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக, இலங்கை திறந்த பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.
குறித்த விடயத்தை பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (15) இராசமாணிக்கம் சாணக்கியனும் குறிப்பிட்டிருந்ததோடு, நீதியமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு அதனை கொண்டு வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலம், தமிழ், நுண்ணறிவு (IQ) வினாக்கள் குறித்தவொரு கல்வி நிறுவனத்தால் முன்கூட்டியே வெளியிடப்பட்டுளள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.