அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோருக்கு கடும் தண்டனை அவசியம்

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கெதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிர்ணய விலையைவிட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விபாபாரிகளுக்கு வழங்கப்படும் தண்டப்பணம் அதிகரித்திருப்பது நல்ல விடயமாகும். அதேபோன்று அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் வியாபாரிகளுக்கு கடன் எல்லை தற்போது நடைமுறையில் இல்லை. அதனால் அந்த வியாபாரிகள் போதுமானளவு அத்தியாவசிய பொருட்களை சேர்த்து வைப்பதற்கு அச்சப்படுகின்றனர். ஏனெனில் பொருட்களின் விலை குறைக்கப்பட்டால் வியாபாரிகளுக்கு அந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாது. அதனால் இன்று கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இரண்டு தரப்பினரையும் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்காமல் அரசாங்கம் மதுபான சாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். அதேபோன்று ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்த்துவைத்து அவர்களின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

ஆசிரியர்களின் பிரச்சினையை தீர்த்தால்தான் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்து மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடங்கலாம்.

அத்துடன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் கூட்டத்துக்கு சென்று, புலம்பெயர் தமிழ் மக்களுகடன் பேசுவதற்கு தயாரென தெரிவித்திருக்கின்றார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்