அப்பாவி மக்களின் உயிர்களை பலியெடுத்த செப்டம்பர் 11 தாக்குதல் குறித்து இலங்கை அறிக்கை

20 ஆண்டு நிறைவையொட்டி வெளிநாட்டு அமைச்சு

அமெரிக்கா மீது செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமெரிக்க அரசாங்கத்துடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பல அப்பாவி மக்களின் உயிர் மற்றும் உடலுறுப்புக்களின் இழப்புக்கு வழிவகுத்த பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று 20 ஆண்டுகள் நிறைவு 2021 செப்டம்பர் 11ஆந் திகதியாகும்.

ஐக்கிய அமெரிக்காவின் சமகால வரலாற்றில் மிகவும் வேதனையான நிகழ்வை அவர்கள் நினைவுகூரும் தருணத்தில், அமெரிக்க மக்கள் மற்றும் அரசாங்கத்துடனான தனது ஒற்றுமையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது. கொடூரமான இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்த அனைவருக்கும் இலங்கை வருத்தம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. நீண்ட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதன் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.