அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளம் கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு

அமைச்சர்களின் ஓகஸ்ட் மாத சம்பளம் கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு-Cabinet Ministers August Salary Will be Sent to Itukama COVID19 Healthcare Fund

- இதுவரை ரூ. 182 கோடிக்கும் அதிக நிதி திரட்டல்
- மேலும் ரூ. 117 கோடிக்கும் அதிக நிதி அவசியம்

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தையும், 'இட்டுகம' (செய்கடமை) கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க அமைச்சரவையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (23) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை இணங்கியுள்ளதாக, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், கொவிட் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கு பெருமளவான நிதியை செலவிடவுள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த பிரதமர், குறித்த யோசனையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முன்னுதாரணமாக செயற்பட்டு இப்பணியை மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, அனைத்து அமைச்சரவை அமைச்சர்களினதும் ஓகஸ்ட் மாத சம்பளத்தையும் ஜனாதிபதியின் கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 300 கோடி எனும் இலக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்நிதியத்த்தில் தற்போது வரை ரூபா 182 கோடி 73 இலட்சத்து 14 ஆயிரத்து 924 (ரூ. 1,827,314,924) நிதி சேகரிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் ரூ. 117 கோடி 26 இலட்சத்து 85 ஆயிரத்து 76 நிதி அவசியமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (தகவல்: www.ikukama.lk - ஓகஸ்ட் 23, 2021, 8.35pm)


Add new comment

Or log in with...