கொவிட் மத்தியில் வசதிகளில்லை; புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் பகிஷ்கரிப்பு

கொவிட் மத்தியில் வசதிகளில்லை; புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் பகிஷ்கரிப்பு-Station Master 24 Hour Token Strike
கல்பொட எனும் இடத்தில் புகையிரத பொறுப்பதிகாரி ஒருவர் சிரேஷ்ட பிரஜை ஒருவருக்கு உதவும் போது எடுக்கப்பட்ட படம் (Twitter)

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவல் நிலையில், பாதுகாப்பாக சேவைகளை முன்னெடுக்கும் வகையிலான உரிய வசதிகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கமைய இன்று (13) நள்ளிரவு வரை அவர்களது போராட்டம் தொடருமென, இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர், சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கனிஷ்ட ஊழியர்கள், மிக வேகமாக கொவிட் தொற்றுக்குள்ளாகி வருவதாக தெரிவித்த அவர், தற்போது வரை இவ்வாறு 70 இற்கும் அதிகமா கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புடைய பலர் உள்ளதாகவும் தெரிவித்தார்.

வசதிகளை வழங்க அமைச்சிடம் நிதி இல்லை எனக் கூறமுடியாது என தமது தொழிற்சங்கம் நம்புவதாக தெரிவித்த அவர், பொலிஸாருக்கு சுகாதார உபகரணங்களை கொள்வனவு செய்ய போக்குவரத்து அமைச்சரினால் சில நாட்களுக்கு முன்பு ரூ. 10 மில்லியன் நன்கொடை வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் தமது போராட்டம் தொடர்பில் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டதாக தெரிவித்த அவர், இன்று நள்ளிரவுடன் அடையாள வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுமெனவும் அவர் கூறினார்.

முறையான தனிமைப்படுத்தல் திட்டம் இல்லாமை காரணமாக உயிராபத்து, சுகாதார பாதுகாப்பு தொடர்பான பொருட்களை உடனடியாக வழங்காமை, அவற்றின் தரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை, கொழும்பில் உள்ள இடைநிலை தனிமைப்படுத்தல் மையம் மற்றும் இடமாற்றங்களில் வெளி தொழிற்சங்கங்களின் இடையீடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளே தங்களது ஒரு நாள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பிற்கு காரணமென அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...