திருமண நிகழ்வில் கலந்து கொள்வோர் 150 இலிருந்து 50 ஆக குறைப்பு

திருமண நிகழ்வில் கலந்து கொள்வோர் 150 இலிருந்து 50 ஆக குறைப்பு-Wedding Guests Limited from 150 to 50

- மாகாண எல்லை தொடர்பில் இன்று முதல் இறுக்கமான கட்டுப்பாடு

திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் விருந்தினர்களின் எண்ணிக்கை 150 இலிருந்து 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமை தொடர்பிலான கொவிட்-19 செயலணியின் மீளாய்வு கூட்ட கலந்துரையாடல்களை அடுத்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் விருந்தினர்களின் எண்ணிக்கை 50 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 500 பேர் கலந்து கொள்ளும் இடவசதி கொண்ட திருமண மண்டபங்களில் உச்சபட்சம் 150 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக, கடந்த வெள்ளிக்கிழமை (06) இராணுவத் தளபதி அறிவித்திருந்த நிலையில், அது தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

500 இற்கும் குறைவான கொள்ளவைக் கொண்ட மண்டபங்களில் 100 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது, அமரக்கூடிய இடத்தைப் பொருட்படுத்தாமல், திருமணமொன்றில் உச்சபட்சம் 50 விருந்தினர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளின் பொருட்டு கடமைகளுக்காக பயணிப்பவர்கள் மற்றும் சுகாதார பிரிவினர் தவிர்ந்த ஏனையோர் தொடர்பான மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு, இன்று முதல் மேலும் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுமென இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...