அரச ஊழியர்கள் அனைவரும் ஓகஸ்ட் 02 முதல் கடமைக்கு

அரச ஊழியர்கள் அனைவரும் ஓகஸ்ட் 02 முதல் கடமைக்கு-All Government Staff to Back to Work From August 02-Presidential Secretariat

- வீட்டிலிருந்து பணி; சுழற்சி முறை பணி சுற்றுநிரூபங்கள் இரத்து
- நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தல்

சுகாதார வழிகாட்டல்களை பேணி, ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளரினால், அரச சேவை, மாகாண சபை, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,

இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய மக்கள் தொகையில் அதிக சதவீதமானவர்களுக்கு, இது வரையில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. பெரும்பான்மையான அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமையினால், அரச சேவைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு முன்னுரிமையளிக்க வேண்டியுள்ளது.

எனவே, கொவிட் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களின் கீழ், 2021 ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி  (திங்கட்கிழமை) முதல், அனைத்து அரச ஊழியர்களையும் வழமைபோன்று கடமைகளுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால், அரச சேவைகள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதை இலகுபடுத்தும் நோக்குடன், மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை சுழற்சி முறையில் சேவைக்கு அழைத்தல் மற்றும் வீடுகளில் இருந்தவாறு சேவைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றுநிரூபங்களையும் இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

PDF File: 

Add new comment

Or log in with...