எந்த விசாரணையும் நடத்தாது ரிஷாட் பதியுதீன் தடுத்து வைப்பு

- மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனிடம், இன்று வரை அது தொடர்பில், எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை.அவரது தனிப்பட்ட விடயங்கள் குறித்தே அவ்வப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கட்சியின் சட்ட விவகாரப் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனிடம் விசாரணைகள் மிகவும் மந்தகதியிலேயே இடம்பெறுவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் கருத்து தெரிவிக்கையில், சபாநாயகரின் அனுமதி பெறப்படாமலும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் இல்லாமலும் குற்றப்புலனாய்வு பிரிவினர் வேறு தேவைக்காகவே அவரை கைது செய்துள்ளனர்.

தடுத்துவைக்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்துக்கோ சட்டமா அதிபருக்கோ எந்தவிதமான அறிக்கைகளையும் சமர்ப்பிக்காமல் காலம்கடத்தி வருகின்றனர்.

அவ்வாறெனில் ஏன் ரிஷாட் பதியுதீனின் விசாரணை தொடர்பில், சட்டமா அதிபரிடமோ நீதிமன்றிடமோ இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை? கடந்த இரண்டு வருடங்களாக அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இராணுவத் தளபதி உட்பட பல சாட்சியாளர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், அவருக்கும் குறித்த தாக்குதலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென நிரூபிக்கப்பட்டு, நிரபராதி என அறிவிக்கப்பட்டார்.

பாராளுமன்ற அமர்வுகளுக்கு கடந்த இரண்டு தினங்களாக அவர் அனுமதிக்கப்படாமை அவரது சிறப்புரிமையை முற்றிலும் மீறுவதுடன், அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மறுப்பதுமாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எந்த தீவிரவாதிகளுடனும் சம்பந்தமில்லை என ஏற்கனவே விசாரணைகளிலிருந்து வெளிப்பட்டிருக்கின்றது. எனவே, எந்தவிதமான காரணமும் இன்றி, வெறுமனே அரசியல் பழிவாங்கலுக்காக அவரை தடுத்து வைத்திருக்காமல், உடனடியாக விடுதலை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கின்றது” என்றார்.


Add new comment

Or log in with...