முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக 863 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி குற்றப்பத்திரத்தை சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் கிடைத்திருந்த நிலையிலும் அதனை தடுப்பதற்கு முறையான நடவடிக்கையை மேற் கொள்ள தவறிய குற்றத்திற்காக முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக 863 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 2 தனித்தனி வழக்குகளை தொடுக்க சட்ட மாஅதிபர் நேற்றைய தினம் தீர்மானித்துள்ளார்.
மேற்படி வழக்குகளை விசாரணை செய்வதற்காக தனித்தனியாக மேல் நீதிபதிகள் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இரண்டை நியமிக்குமாறு சட்ட மாஅதிபர் நேற்றைய தினம் பிரதம நீதியரசரிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தகவலை சட்ட
மாஅதிபரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன நேற்று தெரிவித்தார்.
அதற்கிணங்க புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமை, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவின் புலனாய்வுத் தகவல்களை அலட்சியப்படுத்தியமை உள்ளிட்ட 863 குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேற்படி வழக்கு சட்ட மாஅதிபரினால் தொடரப்பட்டுள்ளது.
அதற்கிணங்க மேற்படி பிரதிவாதிகளுக்கு எதிராக மனிதப்படுகொலை மற்றும் மனித படுகொலைக்கு சந்தர்ப்பம் அளித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment