​ஹைதராபாத் அணி 'ஹெட்ரிக்' தோல்வி

'ஹிட்' விக்கெட்டான 13ஆவது ஐ.பி.எல். வீரர் பேர்ஸ்டோவ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் ​ஹைதராபாத்

அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். போட்டியில் ​ஹைதராபாத் அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

சென்னையில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் ​ஹைதராபாத்துக்கு 151 ஓட்டங்கள் இலக்காக இருந்தது.

தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டிகொக் 39 பந்தில் 40 ஓட்டங்களும் (5 பவுண்டரி), பொல்லார்ட் 22 பந்தில் 35 ஓட்டங்களும் (ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முஜிபூர் ரகுமான், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ​ஹைதராபாத் அணியால் 151 ஓட்டங்கள் இலக்கை எடுக்க முடியவில்லை. அந்த அணி 19.4 ஓவர்களில் 137 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் ​ஹைதராபாத் 13 ஓட்டங்களில் தோல்வியை தழுவியது.

தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 22 பந்தில் 43 ஓட்டங்களும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), தலைவர் வோர்னர் 34 பந்தில் 36 ஓட்டங்களும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். மும்பை அணி தரப்பில் டிரெண்ட் போல்ட், ராகுல் சாகர் தலா 3 விக்கெட்டும், பும்ரா, குர்னால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

​ஹைதராபாத் அணியின் சோகம் தொடர்கிறது. அந்த அணி ஹெட்ரிக் தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே கொல்கத்தாவிடம் 10 ஓட்டங்களிலும், பெங்களூரிடம் 6 ஓட்டங்களிலும், தோற்று இருந்தது.

​ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான ஜானி பேர்ஸ்டோவ் ‘ஹிட்’ விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.

ஐ.பி.எல். போட்டியில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்த 13-வது வீரர் பேர்ஸ்டோவ் ஆவார். இந்த சீசனில் முதல் வீரராக அவர் ஹிட் விக்கெட் முறையில் வெளியேறி இருக்கிறார்.


Add new comment

Or log in with...