எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சையில் விவேக்

ஆரோக்கிய உடல் நிலையில் இருந்தவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு

நடிகர் விவேக்கிற்கு நேற்றுக் காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சென்னை சாலி கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விவேக்கின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்யும் வகையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விவேக்கின் உடல் நிலையை பின்னடைவில் இருந்து மீட்க எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இதுபோன்று எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே மயக்க நிலையில் இருந்ததாகவும் இதயத் துடிப்பு குறைந்து இருந்ததாகவும் தெரிவித்துள்ள மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணர்கள் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக்கின் உதவியாளர் நிகில் முருகன், விவேக்கிற்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறினார்.

நடிகர் விவேக் நேற்றுமுன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன் பின் பேசிய அவர், ‘பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை' என்றார்.

நகைச்சுவை நடிகர் விவேக், 'சின்ன கலைவாணர்' என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர். இவர் சினிமாவில் தனது நகைச்சுவை மூலம் மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கும் கருத்துகளை மையமாக வைத்து நடித்துள்ளார்.

அப்துல் கலாம் மீது அதிக பற்றுக் கொண்ட அவர், மரம் நடுதலை ஊக்குவித்து வருகிறார். இவர் தனது மகனின் பெயரில் 'சாய் பிரசன்னா பவுண்டேஷனை' தொடங்கி மரநடுதலை செய்து வருகிறார்.

மரம் நடுதலை ஊக்குவிக்கும் அவர், சமூக பொறுப்புணர்வு கொண்டவர். இந்த நிலையில் நேற்று காலையில் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மயங்கி விழுந்த அவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அனுமதிக்கப்பட்ட போதே அவரது இதய துடிப்பு குறைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விவேக் சுயநினைவுடன் இருக்கிறார். அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கான் பரிசோதனை எடுக்கப்படவுள்ளது.கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு, விவேக் நன்றாகத்தான் இருந்தார். அவர் விரைவில் நலமுடன் திரும்புவார்" என்றார். இந்த நிலையில் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை கொடுக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதய செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ கருவி கொடுக்கப்படுகிறது.

விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டி வருகின்றனர்.

"சகோதரர் நடிகர் விவேக் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

கவிஞர் வைரமுத்து டிவிட்டில், சின்னக் கலைவாணர் தம்பி விவேக் விரைந்து நலமுற்று மீள வேண்டும்; மனிதர்களின் மாரடைப்பைத் தடுக்கின்ற நகைச்சுவைக் கலைப்பணியை வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும். வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிபிராஜ் தனது டிவிட்டில், "நடிகர் விவேக் சார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். விரைவில் நலம் பெற வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...