தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்

- காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக் கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில், நேற்று காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்ற அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளை போட்டு பாதையை மறித்திருந்தனர்.

எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...