வீதி விபத்துகளை கட்டுப்படுத்தும் வழிவகைகளை காண்பது அவசியம்

வீதிவிபத்துகள் நாட்டில் அதிகரித்துச் செல்கின்றன. கடந்த வருடத்தில் நாளாந்தம் வாகன விபத்துகளால் இடம்பெற்ற உயிரிழப்புகளின் எண்ணிக்ைகயானது சராசரியாக 7 ஆக இருந்தது. ஆனால் இன்று வாகன விபத்துகளால் சம்பவிக்கின்ற நாளாந்த சராசரி மரணங்களின் எண்ணிக்ைக 8 ஐயும் தாண்டி விட்டது.

வருடாந்தம் வீதிவிபத்துகளால் சம்பவிக்கின்ற மொத்த மரணங்களின் நாளாந்த சராசரி எண்ணிக்ைகயானது ஒன்பதை நெருங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறியதொரு நாடான இலங்கையைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்ைகயானது உண்மையிலேயே அதிகமானதாகும். நாட்டில் வீதிவிபத்துகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்ைக மேற்கொள்ளப்படாவிடின் அன்றாட மரணங்களும், பயணிகள் படுகாயமடைவதும் அதிகரித்துக் கொண்டே செல்லுமென்பது மட்டும் நிச்சயம்.

பதுளை-_ செங்கலடி வீதியில் பசறை 13ஆவது மைல் கல் பகுதியில் கடந்த வாரம் காலை வேளையில் இடம்பெற்ற கோரமான விபத்து முழு நாட்டையுமே அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியது. பதினாறு பேரின் உயிரைப் பலி கொண்டு, 31 பேரை படுகாயத்துக்கு உள்ளாக்கிய பயங்கரமான விபத்து அது. பேருந்துகளில் பயணம் செய்கின்ற மக்களின் உயிர்ப் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ள விபத்து அதுவாகும்.

வீதிவிபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிரமான நடவடிக்ைககளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், விபத்துகளின் எண்ணிக்ைகயோ, உயிரிழப்புகளின் எண்ணிக்ைகயோ குறைந்தபாடாக இல்லை. அதேபோன்று வாகன சாரதிகளின் அலட்சியமும் தொடரவே செய்கின்றது. ஆகவே இவ்வாறான அநியாய உயிரிழப்புகள் மேலும் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது.

வாகன விபத்துகளைப் பொறுத்தவரை மோட்டார் சைக்கிள் விபத்துகளே அன்றாடம் அதிகளவில் இடம்பெறுகின்றன. தினமும் ஊடகங்களில் இது பற்றிய பரிதாபமான செய்திகள் வெளியாகின்றன. மோட்டார் சைக்கிள் விபத்துகளில் மரணமடைவோரில் பெரும்பாலானோர் இளைஞர்களாகவே உள்ளனர். கட்டுப்படுத்த முடியாத அதிகரித்த வேகமே இதற்கான காரணமாக உள்ளது. வாலிப வயதில் பயஉணர்வு இல்லாததன் காரணமாக அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி அநியாயமாக இளைஞர்கள் பலியாகிப் போகின்றார்கள்.

இதற்கு அடுத்ததாக அதிகளவான விபத்துகளுக்கு முச்சக்கரவண்டிகள் காரணமாக அமைகின்றன. தொழில் போட்டி காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகளில் ஏராளமானோர் வீதிப் போக்குவரத்து விதிகளை பேணி நடந்து கொள்வதில்லை. வீதியில் நடமாடும் மக்களின் உயிர்ப் பாதுகாப்பை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. குறுகிய நேரத்தினுள் கூடுதல் பணத்தை உழைக்க வேண்டுமென்பது மட்டுமே முச்சக்கர வண்டி சாரதிகளில் பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது.

இதன் காரணமாக முச்சக்கர வண்டிகளில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு இன்று உத்தரவாதமில்லாமல் போயுள்ளது. வீதியில் நடமாடும் பாதசாரிகளின் உயிருக்கும் உத்தரவாதமின்றிப் போயுள்ளது.

இதேவேளை தனியார் பஸ்கள் அதிகரித்த வேகத்தில் செல்வதாக மக்களிடமிருந்து பரவலாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. தனியார் பேருந்துகள் விபத்துக்கு உள்ளாவதால் சம்பவிக்கின்ற மரணங்களும் அதிகரித்தபடியே செல்கின்றன. அதிகரித்த வேகத்துக்கு தொழில் போட்டியும் காரணமாகின்றது. நாட்டில் பெருந்தெருக்கள் அனைத்துமே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள காரணத்தினால் பேருந்துகள் அசுர வேகத்திலேயே செல்கின்றன. பேருந்துகள் விபத்துக்கு உள்ளாவதால் ஏற்படுகின்ற உயிரிழப்புகள் அதிகமாகும்.

வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனாலும் அவற்றால் உரிய பலன் கிடைப்பதாக இல்லை. விபத்துகளும் பாதிப்புகளும் தொடர்ந்தபடியே செல்கின்றன. வீதிகளில் அதிகரித்த வேகத்துடனும், போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியம் செய்தபடியும் வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

மோட்டார் சைக்கிளின் 'சைலன்ஸர்' முனையை அகற்றி விட்டு, காதைப் பிளக்கும் பாரிய சத்தத்துடன் வீதிகளில் அசுர வேகத்தில் செல்கின்ற மோட்டார் சைக்கிள்களை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று அவ்வாகனமோட்டிகள் மீது சட்டநடவடிக்கை மேற்கொண்டதை எம்மால் காண முடியவில்லை. போக்குவரத்து பொலிஸாரின் பணிக்கென இராட்சத மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. நவீன 'வயர்லெஸ்' தொடர்புசாதனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் வீதிகளில் இரைச்சலை ஏற்படுத்திய வண்ணம் அசுர கதியில் செல்வோர் மீது அவர்கள் நடவடிக்ைக எடுக்க வேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள் ஆகும்.

வாகன சாரதிகள் தாமாகவே உணர்ந்து, போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்வரென ஒருபோதுமே எதிர்பார்த்து விட முடியாது. போக்குவரத்து பொலிஸார் தங்களது நடவடிக்கைககளை கடுமையாக்கி, குற்றம் இழைப்போரை சட்டத்தின் முன்னால் நிறுத்தும் பணியை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் சட்டத்தின் மீதான பயமும் விழிப்புணர்வும் வாகனமோட்டிகளிடம் உருவாகுமென்பதே உண்மை.


Add new comment

Or log in with...