கிரிக்கெட் போட்டிகளில் இது 7ஆவது நிகழ்வு

- ஹெட்ரிக் பெற்ற 15ஆவது வீரர் தனஞ்சய

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

மேற்கிந்தியத் தீவு அணி ஆடியபோது 6ஆவது ஓவரை தனஞ்சய வீசினார். இந்த ஓவரில்தான் பொல்லார்ட் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்தார்.

20 ஓவர் சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றார். இதற்கு முன்பு 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் புரோட் வீசிய ஓவரில், இந்திய வீரர் யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து இருந்தார்.

சர்வதேச போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிப்பது 3ஆவது நிகழ்வாகும். நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (2007-ம் ஆண்டு) தென் ஆபிரிக்காவை சேர்ந்த கிப்ஸ் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து இருந்தார்.

கிரிக்கெட் போட்டிகளில் இது 7ஆவது நிகழ்வாகும். மேற்கிந்திய தீவைச் சேர்ந்த கேரி சோபர்ஸ் 1968-ம் ஆண்டு முதல் முறையாக முதல் தர போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்தார்.

ரவி சாஸ்திரி (இந்தியா), அலெக்ஸ் ஹால்ஸ் (இங்கிலாந்து), ஹசரத்துல்லா (ஆப்கானிஸ்தான்) ஆகியோரும் இந்த சாதனை நிகழ்வை செய்திருந்தனர்.

இந்த ஆட்டத்தில் தனஞ்சய 4ஆவது ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை படைத்தார். 2ஆவது பந்தில் லீவிசையும், 3ஆவது பந்தில் கிறிஸ் கெய்லையும், 4ஆவது பந்தில் நிக்கோலஸ் பூரனையும் ஆட்டமிழக்கச் செய்தார்.

20 ஓவர் சர்வதேச போட்டியில் ஹெட்ரிக் சாதனை படைத்த 15ஆவது வீரர் தனஞ்சய ஆவார். 4ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தனஞ்சயவின் அடுத்த ஓவரில்தான் பொல்லார்ட் 6 சிக்சர் அடித்து சாதித்தார். இதனால் அவர் தனது சாதனையை கொண்டாட முடியாமல் வேதனை படும் சூழ்நிலை ஏற்பட்டது.


Add new comment

Or log in with...