100 வைத்தியசாலைகளில் கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள 100 வைத்தியசாலைகளில் நேற்றும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை மேலும் 25 லட்சம் எஸ்ட்ரோ ஷெனிகா தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு மாத காலத்திற்குள் அந்த 25 லட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் மேற்படி அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவர் அமல் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 5 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவிடமிருந்து பெறப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு துறையினருக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 25 லட்சம் தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அந்த அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் மூலமாக அதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஒரு மாத காலத்தில் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் மேலும் 3.5 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஏற்கனவே இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட 5 லட்சம் தடுப்பூசிகள் வைரஸ் தொற்று கட்டுப்பாடு தொடர்பில் செயற்படும் மருத்துவத் துறையினர் மற்றும் முப்படையினருக்கும் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை விலைக்கு கொள்வனவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)


Add new comment

Or log in with...