20 நாள் குழந்தையின் பெற்றோர் உச்சமன்றில் மனு

20 நாள் குழந்தையின் பெற்றோர் உச்சமன்றில் மனு-FR Petition Filed at the Supreme Court-By 20-Day-Old COVID19 Victim Baby's Parents

கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தங்களது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பில் வைத்திய அறிக்கையை பெற்று விசாரணைக்கு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் தங்களது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு 13ஐச் சேர்ந்த மொஹமட் மஹ்றூப் மொஹம்மட் பாஹிம் மற்றும் பாத்திமா ஸப்னாஸ் ஆகியோருக்கு பிறந்த, 20 நாட்களேயான குழந்தையொன்று, இலங்கையில் 143ஆவது கொரோனா மரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த குழந்தை நியூமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, அவையவங்கள் செயலிழந்த நிலையில், கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

தங்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென அறிக்கை கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் குறித்த குழந்தையின் பெற்றோர், தங்களுக்கு கொரோனா தொற்று பீடிக்கப்படாத நிலையில் குழந்தைக்கு மாத்திரம் கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என கேள்வி எழுப்புகின்றனர்.

இம்மனுவின் பிரதிவாதிகளாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, லேடி ரிஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் டி விஜேசூரிய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஆரம்ப நிலை சுகாதார சேவைகள், கொவிட் ஒழிப்பு விவகார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, சுகாதார அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நாயகம் அமல் ஹர்ஷ டி சில்வா, சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் 19 உடல்கள் பிரேத அறைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென மரணித்த சிசுவை தகனம் செய்ய எவ்வித தேவையும் இருக்கவில்லை என, மனுதாரர்கள் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த குழந்தையின் தகனத்தை அடுத்து, நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு இடங்களிலும் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளியிடு வருவதோடு, முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளிட்ட ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பொதுத் தளங்களில் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொவிட்-19  தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடலை அவர்களது மத அனுஷ்டானங்களுக்கு அமைய, இறுக்கமான சுகாதார விதிமுறைகளைப் பேணி நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களால், வெள்ளைக் கொடி கட்டுதல் உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலான பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இன்றையதினம் (23) பொரளை பொது மயானத்திற்கு முன்பாக அமைதியான போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

அதனை எதிர்க்கும் வகையில் குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த 'சிங்ஹ லே' அமைப்பின் தலைவர் டான் பிரியசாத் உள்ளிட்ட குழுவினர், உரிய அனுமதியின்றி அவ்விடத்திற்கு வந்ததாக தெரிவித்து அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொவிட்-19 தொற்றினால் மரணிப்போரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்குழு, இன்று (23) முற்பகல், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் கூடிய கலந்துரையாடியிருந்ததோடு, அதன் பின்னர் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்களை அக்குழு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கூட்டத்தின் முடிவுக்கு அமைய, இறுதி அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...