அக்கரைப்பற்றில் பி.சீ.ஆர் சோதனைக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் அழைப்பு

அட்டாளைச்சேனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை பிரதேசங்களைச் சேர்ந்த 150 பேருக்கு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பீ.சீ.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்கரைப்பற்று சந்தைக்கு சென்று மொத்த பொருட் கொள்வனவில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சுகாதார சேவைகள் பணிமனை இதற்கான அறிவித்தலை விடுத்திருந்தன. அக்கரைப்பற்று சந்தைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சென்றவர்கள் தங்களது பிரதேச கிராம சேவகர் ஊடாக விபரங்களை அறியத் தருமாறு பள்ளிவாசல் ஒலிபெருக்கியின் ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக சந்தைக்குச் சென்று பொருட்களை கொள்வனவு செய்த சுமார் 150 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இனங்காணப்பட்டவர்களுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டொக்டர் எஸ்.அகிலனின் கண்காணிப்பின் கீழ் பொதுச்சுகாதார பரிசோதகர்களான எம்.பி.மிஹியார், எம்.எம்.ஜெசிர்,எம்.ஏ.அப்துல் ஜப்பார் மற்றும் சுகாதார உதவியாளர்களின் உதவியுடன் கொரோனாவை கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்கரைப்பற்று சந்தை உபகொத்தணியில் 45 பேரும், ஏனைய பிரதேசங்களிலிருந்து 27 பேருமாக மொத்தம் 72 பேர் கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றுமுன்தினம் வரை அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அக்கரைப்பற்று கொத்தணியுடன் தொடர்புடைய 76 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்ப ட்டுள்ளதோடு, இவர்களுடன் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் வரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 1819 பேர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றுடை யவர்களென இனங்காணப்ப ட்டவர்கள் பாலமுனை மற்றும் பதியத்தலாவை கொரோனா சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 80 பேரும், பாலமுனை கொரோனா சிகிச்சை நிலையத்தில் 79 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

-ஐ.ஏ.ஸிறாஜ்
(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...