மக்களின் ஒத்துழைப்பே அபாயத்தை தணிக்கும்

கொவிட் 19 தொற்று பரவுதல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் நேற்று திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, புறக்கோட்டை மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ராகம பொலிஸ் பிரிவுகளும் அடங்கியுள்ளன. அதேநேரம் மட்டக்குளி பொலிஸ் பிரிவிலுள்ள ரந்திக உயன வீடமைப்பு திட்டம், பேர்குஷன் வீதியின் தெற்கு பிரதேசம், வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிலுள்ள லக்சந்த செவன குடியிருப்பு, சாலமுல்ல, விஜயபுர கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் என்பன நேற்று முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இவை இவ்வாறிருக்க, அட்டுலுகம, பண்டாரகம பிரதேசங்களிலுள்ள சில கிராமங்களும், கண்டி மாவட்டத்திலுள்ள சில கிராமங்களும், சிலாபத்தில் சில கிராமங்களும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கல்முனை, தம்புள்ள பிரதேசங்களின் பாடசாலைகளும் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு இத்தொற்று பரவுதல் அச்சுறுத்தல் நிலவும் நிலைமைக்கு ஏற்ப கொவிட் 19 தொற்று பரவதலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர, 'கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கொவிட் 19 தொற்று எதிர்வரும் நாட்களில் குறைவடையக் கூடிய சாத்தியமுள்ளது. தற்போது மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்களாக இனம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதோடு இத்தொற்றாளர்களாக இனம் காணப்படுபவர்களின் மாதிரிகளில் இவ்வைரஸின் செறிவு குறைவாகக் காணப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

தற்போது நாட்டில் நீடித்து வரும் இத்தொற்றின் இரண்டாம் அலையைப் பெருவீழ்ச்சி நிலைக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் அர்ப்பணிப்பு மிக்க நடவடிக்கைகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ள பிரதிபலன் என இந்த அறிவிப்பை நோக்க முடியும். என்றாலும் இந்த அடைவில் உச்ச பிரதிபலனை அடைய மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிக அவசியமானதாக விளங்குகின்றன. அதனால் மக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், முனனெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டும். இது இலவுவாகப் பரவும் வைரஸ் நோயாக இருப்பதால் அதன் பரவுதலைத் தவிர்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். மருத்துவ நிபுணர்களின் கருத்தும் அதுவேயாகும்.

ஏனெனில் இத்தொற்றைக் கட்டுப்படுத்தவென இற்றை வரையும் தடுப்பு மருந்தோ சிகிச்சை முறையோ புழக்கத்திற்கு வராதுள்ளன.

இதேவேளை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், 'களுத்துறை மாவட்டம் மற்றும் மத்திய மாகாணம் போன்ற பிரதேசங்களில் கொவிட் 19 தொற்றின் உப கொத்தணிகள் தோற்றம் பெறக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டிருக்கின்றனர். இது தொடர்பில் கவனயீனமாகவோ அலட்சியப் போக்குடனோ நடந்து கொள்ள முடியாது.

ஆகவே கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்காக சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல், ஆலோசனைகளின்படி முகக்கவசம் அணிவதிலும் சமூக இடைவௌியைப் பேணுவதிலும் கைகழுவுதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்நாட்டில் காணப்படும் கொவிட் 19 தொற்று வைரஸ் தொற்றியுள்ள அநேகருக்கு அதற்கான அறிகுறி வௌிப்படாதிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறானவர்கள் ஊடாகவும் இவ்வைரஸ் பரவ முடியும். இது அதிக அச்சுறுத்தல் மிக்க நிலைமையாகும். அதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வதே பாதுகாப்பானது.

அத்தோடு தற்போதைய சூழலில் உணவு வகைகளை நன்கு வேக வைத்து சமைத்து உண்பதிலும், இளஞ்சூட்டுடன் ஆகாரங்களை உட்கொள்வதிலும் குடிநீரைப் பருகுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். வேக வைக்காது பச்சையாக உணவுப் பொருட்களை உண்பதை தவிர்த்து கொள்வதிலும் சிரத்தை காட்ட வேண்டும்.

இவ்வாறான விடங்களில் அதிக அக்கறையுடன் கவனம் செலுத்தி செயற்படும் போது இத்தொற்று பரவலின் தொடரை விரைவாக முறித்து விடமுடியும். அதன் மூலம் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலில் இருந்து விரைவாக மீட்சி பெறக் கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...