எண்ணெய்க் கப்பல் தீயணைப்பு பணி தீவிரம்

மீட்புப்பணியில் இலங்கை கடற்படை

அம்பாறை, சங்கமன்கண்டியிலிருந்து 31 கடல் மைல் தொலைவில் பனாமா தேசிய கொடியுடன் இந்தியா நோக்கி பயணித்த MT New Diamond என்ற எண்ணெய் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்து நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் கடற்பிராந்தியத்திலிருந்து 31 கடல் மைல் தொலைவில், இந்தியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கப்பல் விபத்திற்குள்ளானதாகவும் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் பணியாளர்களை மீட்கவும் கடற்படையும் விமானப் படையும் இணைந்துபணியாற்றி வருவதாகவும் இராணுவத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் சந்தன விக்கிரமசிங்கவிடம் வினவிய போது,

அம்பாறை, சங்கமன்கண்டியிலிருந்து 31 கடல் மைல் தொலைவில் பனாமா நாட்டு கொடியுடன் பயணித்த கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இக் கப்பல் இந்தியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலின் என்ஜினில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடுமென விசாரணைகளில் தெரியவருவதுடன், இது குறித்து மேலதிக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகப்டர்களும், கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

காயங்களுக்குள்ளான ஒருவர் கப்பலிலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன், ஏனையவர்கள் மாற்று கப்பலொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றார்.

கப்பலில் பாதிப்புக்குள்ளான பணியாளர்களை மீட்கும் பணிக்காக திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து 02 கப்பல்களும், ஹம்பாந்தோட்டை கடற்படை முகாமிலிருந்து ஒரு கப்பலும் சம்பந்தப்பட்ட கடற்பிரதேசத்திற்கு சென்றிருப்பதாக கடற்படை பேச்சாளர் துஷான் விஜயசிங்க தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...