எமது மக்களின் மீள் குடியேற்றம் முழுமைப்படுத்தப்படவில்லை

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது வட பகுதி முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமையிலான சிறப்புப் படைப் பிரிவினரால் முறைப்படி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அச்செயற்பாடுகள் முழுமைப்படுத்த முடியாமற் போய்விட்டது. அதனால் வடக்கில் உள்ள தமது சொந்த நிலங்களில் மீள்குடியமர்வதற்கு பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தினகரன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கே: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2020 தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது?

ப: இலங்கையைப் போன்ற அழகான நாட்டில் பிறந்தது எமது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு இணக்கமாக உள்ளனர். எமது பிரதான நோக்கம் அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் ஐக்கியமாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.

வன்னி மாவட்டத்தில் உள்ள எனது தொகுதியில் சிங்களவர்கள் சிறுபான்மையாகவே உள்ளனர். ஆனால் எனது அரசியல் வாழ்க்கையில் நான் எந்தவொரு இனத்துக்கும் அல்லது மதத்தினருக்கும் வேறுபாடு காட்டியதில்லை. நான் அனைவரையும் சமமாக மதிப்பவன் எனது தொகுதியில் உள்ள சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவருக்கும் நான் உதவி செய்திருக்கிறேன். மக்களை மீளக்குடியமரச் செய்து அவர்களுக்கு வீடுகளையும் கட்டிக் கொடுக்கின்றேன். பௌத்த பன்சலங்களையும், இந்துக் கோவில்களைகயும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் முஸ்லிம் பள்ளிவாசல்களையும் நான் புனரமைத்துக் கொடுத்திருக்கிறேன். எனது எதிர்காலத்திலும் இனங்களுக்கிடையிலான இந்த ஐக்கியம் தொடரும். எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதற்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

கே: உங்கள் அரசியல் அனுபவத்தில் எந்த அரசாங்கம் வட பகுதி முஸ்லிம்களுக்கு பெரிதும் உதவியுள்ளதாக நினைக்கிறீர்கள்?

ப:எங்கள் அனைவருக்கும் தெரிந்த வகையில் வட பகுதி முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் பலவந்தமாக அங்கிருந்து விரட்டியடித்தனர். அவர்களை அங்குள்ள அவர்களது சொந்தக் காணிகளில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்பதே எமது விருப்பம். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது வட பகுதி முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமையிலான சிறப்பு படைப் பிரிவினரால் முறைப்படி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அச் செயற்பாடுகள் முழுமை பெறவில்லை. வடக்கில் உள்ள தமது சொந்த நிலங்களில் மீளக் குடியமர்வதற்கு பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும்.

ஏனெனில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே அவர்கள் அங்கு குடியிருந்தவர்கள் ஆவர்.

கே: அப்படியானால் நல்லாட்சி அரசாங்கம் வட பகுதி முஸ்லிம்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறீர்களா?

ப:வட பகுதி முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்திருந்தாலும் ஆக்கபூர்வமாக எதுவும் நடக்கவில்லை. அவர்களது அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே அவர்களால் முடிந்தது.எனினும் வட பகுதி முஸ்லிம்களுக்கு காணிகளை பெற்றுத்தர நல்லாட்சி அரசாங்கத்தால் முடியாது போனது. இதனால்  நல்லாட்சி அரசாங்கம் வட பகுதி முஸ்லிம்களுக்கு திருப்தியைத் தரவில்லை.

கே: வில்பத்து காட்டை அழித்துவிட்டு அங்கு மக்களை மீளக்குடியமர்த்தியதாக உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: இது வெறும் வதந்தி, இதில் எந்த உண்மையும் இல்லை. என் மீது குற்றம் சுமத்துவோர் எனது மீள்குடியேற்ற நடைமுறையை தவறாகப் பார்க்கின்றனர். எமது மீள் குடியேற்ற திட்டமானது முழுமையாக மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தியதாகும். அந்த வரம்பை நான் மீறவில்லை. வில்பத்து வனப் பிரதேசம் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் உள்ளது. இந்த நிலையில் என் மீது வீணாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை வேண்டுமென்றே செய்கின்றனர்.

கே: ஐக்கிய தேசிய கட்சி தற்போது இரண்டாக பிரிந்துள்ளது. இந்நிலையில் சஜித் பிரேமதாச பிரிவினரை நீங்கள் தெரிவு செய்த காரணம் என்ன?

ப: கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு 5.5 மில்லியன் வாக்குகள் கிடைத்தன. அத்துடன் அவரது கொள்கை எமது கட்சியின் கொள்கையுடன் ஒத்துப்போகிறது. இந்துக்கள், பௌத்தர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்ற அனைத்து மதத்தினரும் நாட்டில் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று அவர் விரும்புகிறார். தற்போதைய நிலையில் அனைத்து மதத்தினரிடையிலும் ஒற்றுமை நிலவ வேண்டும். அதற்காக நாம் முக்கியத்துவம் தர வேண்டும். கடந்த 35 வருடங்களாக நாம் மிகுந்த சிரமங்களை அனுபவித்துள்ளேம். எனவே நடந்தது போதும் இனியும் அதுபோல நடக்கவேண்டாம். எமக்கு ஒரு அழகிய நாடு உள்ளது. அதில் வசிக்கும் பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்களிடையே நாம் இனி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதுவே தேவையானதாகும்.

கே: அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பிரசாரத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப:கொரோனா வைரஸை ஒழிப்பதில் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது செயற்பாடுகள் சிறப்பாக உள்ளன. அது மிகப் பெரிய சாதனையாகும். எமது சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் மற்றும் அரச அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

கே: உங்கள் சகோதரர் ரியாஜ் பதியுதீன் 2019 ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு சி.ஐ.டி. யினரின் தடுப்புக் காவலில் இருக்கிறாரே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய இன்ஸாப் இப்ராஹிம் எனது சகோதரரை எனது முன்னைய அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார். அதிகாரபூர்வமாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு விடயமாக இப்ராஹிம் 6 முறை எனது சகோதரருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இது தொடர்பாக எனது சகோதரர் பேசியிருக்கமாட்டார். அப்படி தெரிந்திருந்தால் சந்தித்தே இருக்கமாட்டார்.

விசாரணைகளில் எனது சகோதரர் ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புபட்டவர் எனத் தெரியவந்தால் அவரை அதிகாரிகள் தாராளமாக நீதிமன்றத்தில் நிறுத்தி மரண தண்டனையைக் கூட பெற்றுத்தரலாம். ஆனால் அவர் குற்றமற்றவர் என்று தெரியவந்தால் அவரை விடுதலை செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். கடந்த இரண்டரை மாத காலமாக அவர் தடுப்புக்காவலில் இருந்து வருகிறார். ஆனால் இதுவரை அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை. நான் அரசியல்வாதியாக இருந்தாலும் எனது சகோதரர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் மயப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. எனது சகோதரர் தொடர்பாக அதிகாரிகள் விரைவிலேயே தீர்மானம் எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

கே: நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளதாக பொதுக் கருத்தொன்று நிலவியது. அப்படியானால் தங்கள் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும்  போட்டியிடாமல் உள்ளது?

ப: இரு கட்சிகளும் நீண்டகாலமாகவே பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்து வந்துள்ளன. எனவே எமது கட்சியின் செல்வாக்கு, எதிர்வரும் பாராளுமன்றத்தில் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் ஆகியவற்றை கணக்கிலெடுத்து நாம் சில மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுகிறோம். ஆனால் ஒரு சில மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுகிறோம். தனித்துப் போட்டியிடுவதால் எங்களிடையே ஒற்றுமை இல்லை என்றாகாது.

லக்ஷ்மி பரசுராமன்
தமிழில்: என். ராமலிங்கம்


Add new comment

Or log in with...