நீருக்கடியிலான முதலாவது அருங்காட்சியகம் காலியில்

இலங்கையில் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருகோணமலை மற்றும் தங்காலை பகுதிகளில் மேலும் இரண்டு நீருக்கடியிலான அருங்காட்சியகங்களை  அமைக்க கடற்படை திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகத்தை காலியில், கடந்த ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி கடற்படைத் தளபதி பியல் டி சில்வா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

கடற்படையினரால் உருவாக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டு இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட குறித்த அருங்காட்சியகம், காலி கடற்கரையை அண்டியதாக அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை குறித்த அருட்காட்சியகம் கவர்ந்துள்ளதாகவும், கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த அருங்காட்சியகத்தின் அனைத்து கட்டுமானங்களும் கடற்படையினரால் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, சீமெந்து மற்றும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களினால் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  கடற்படை தெரிவித்துள்ளது.

கடலுக்கடியில் 50 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அருட்காட்சியகத்தை, நீந்தக்கூடியவர்களும் சுழியோடிகளும்  இலகுவில் அடையாளம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த அருட்காட்சியகத்தில் மீன்பிடிப் படகுகளையும், புகையிரதப் பெட்டிகளையும் காட்சிக்காக பயன்படுத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்ட போதிலும், குறுகிய காலத்திற்குள் புகையிரதப் பெட்டிகளையும், படகுகளையும் சேகரிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதால், பல்வேறு வகையான சிலைகளையும் நினைப்பொருட்களையும் குறித்த அருங்காட்சியகத்தில் கடற்படையினர் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இத்திட்டம் தொடங்கப்பட்ட காலப்பகுதியில், குறித்த இடத்தில் மீன்பிடி நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டார்கள். எவ்வாறாயினும், மீன் இனப்பெருக்கப் பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டவுடன், மீனவர்களுக்கு உச்சபட்ச நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் எனவும், கடற்படை தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...