பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்

பாடசாலைகள் இம்மாத இறுதிப் பகுதியில் மீண்டும் ஆரம்பமாகப் போகின்றன. அதற்கான திகதி அறிவிக்கப்பட்டு விட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் விடயத்தில் மிகுந்த அவதானத்தைப் பேணியவாறு படிப்படியாக வகுப்புகள் ஆரம்பமாகப் போகின்றன. மாணவர்களிடையே சமூக இடைவெளியைப் பேணியவாறு, கொரோனா பாதுகாப்பு அறிவுறுத்தல்களை உரிய முறையில் கடைப்பிடித்தபடி எவ்வாறு பாடசாலைகளை நடத்திச் செல்வதென்ற விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பாடசாலையினதும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கைகளிலும் பெற்றோரின் மிகுந்த அவதானத்திலும்தான் இனிமேல் மாணவர்களின் பாதுகாப்பு தங்கியிருக்கின்றது. பாடசாலை நலன்விரும்பிகளுக்கும் இந்த விடயத்தில் முக்கிய கடமைப் பொறுப்பு இருக்கின்றது. இவ்வாறு அனைத்து தரப்பினரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினாலேயே கொரோனா ஆபத்தில் இருந்து மாணவர்களை முழுமையாகப் பாதுகாத்தபடி பாடசாலைகளை இடையூறின்றி சீராக நடத்திச் செல்ல முடியும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடையப் போகின்றது. மாணவர்களின் கல்வியைப் பொறுத்தவரை இந்த நீண்ட விடுமுறையை துரதிருஷ்டமான காலப் பகுதியென்றுதான் கூற வேண்டும். பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களில் பலர் தத்தமக்குரிய பாடங்களை மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர். ஆசிரியர்கள் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி பாடங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ரியூசன் ஆசிரியர்களும் இணையவழி ஊடாக வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கொழும்பு உட்பட பல இடங்களில் ரியூசன் ஆசிரியர்களில் ஏராளமானோர் முன்னைய கட்டணத்தை அறவிட்டபடியே இணையவழியிலும் இப்போது கற்பித்துக் கொண்டிருப்பதாக பெற்றோர் வேதனைப்படுவதைக் காண முடிகின்றது. அதேசமயம் ஒருசில ரியூசன் ஆசிரியர்கள் பணத்தைப் பொருட்படுத்தாமல் மாணவர்களின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு இணையவழியில் இலவசமாக வகுப்புகளை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பலர் வெறுமனே சுயநலப் போக்கிலேயே தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஒருசிலரோ பொதுநல சுபாவத்தைக் கடைப்பிடித்தபடி அர்ப்பணிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று நோயினால் மக்கள் இத்தனை அவலங்களை சந்தித்த பின்னரும் கூட பலரது அடிப்படை சுபாவம் இன்னுமே மாற்றமடையவில்லை என்பதுதான் இங்குள்ள வேதனை.

இதுஒருபுறமிருக்க, என்னதான் இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டாலும் மாணவர்களுக்கு அவற்றால் முழுமையான பலன் கிடைப்பதாக இல்லையென்பதுதான் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கவலையாக இருக்கின்றது. இணையவழிக் கற்பித்தலை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதுதான் அனைவரினதும் கருத்தாக இருக்கின்றது. மாணவர்கள் இப்போது கல்விப் புலத்தில் இருந்து அந்நியப்பட்டுப் போயிருக்கின்றனர். எனவே பாடசாலைகளை மீள ஆரம்பித்த பின்னர்தான் அவர்களை மீண்டும் கல்வியின்பால் ஈர்க்க முடியும் என்பதே பொதுவான அபிப்பிராயம் ஆகும்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கின்ற போது கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது சம்பந்தமான சுகாதார அறிவுறுத்தல்கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பாடசாலை எல்லைக்குள் பிரவேசிக்கும் போது மாணவர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பழக்க வழக்கங்கள் அனைத்தும் விபரமாக வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் முறையாக கடைப்பிடிப்பதுதான் முக்கியமான பொறுப்பாகும்.

சமூக இடைவெளி பேணுவது, முகக்கவசம் அணிந்து கொள்வது, கைகளை சவர்க்காரம் இட்டு கழுவிக் கொள்வது, சுத்திகரிக்கப்படாத கையினால் முகத்தை தொடுவதை தவிர்த்தல் போன்றன உட்பட பிரதானமான அறிவுறுத்தல்கள் கல்விப் பகுதியைச் சேர்ந்தவர்களால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அறிவுறுத்தல்களில் ஒன்றையேனும் அலட்சியம் செய்வது கூடாது.

அதேசமயம் கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாப்பது பாடசாலை ஆசிரியர்களினதும் அதிபரினதும் பொறுப்பாகும் என்று பெற்றோர் கருதி விடுவது தவறாகும். பாடசாலை நுழைவாயில் வரை மாணவர்கள் பாதுகாப்பாக சென்றடைவதில் முழுப்பொறுப்பும் பெற்றோரை சார்ந்ததாகும். அதேபோன்று பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலை நுழைவாயிலில் இருந்து மாணவர்கள் வீடு போய்ச் சேரும் வரை முழுப்பொறுப்பும் பெற்றோரை சார்ந்ததாகும். மாணவர் வீட்டைச் சென்றடைந்ததும் அம்மாணவனுக்கான பாதுகாப்பை மேற்கொள்வதும் பெற்றோரின் பொறுப்பாகும்.

இவ்வாறு அனைத்து தரப்பினரும் சுகாதார அறிவுறுத்தல்களை முறையாகப் பேணுவதன் மூலமே பாடசாலைகளை சீராக இயங்க வைக்க முடியும். மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.


Add new comment

Or log in with...