கொவிட்-19: முகக் கவசம் அணிவதற்கு உலக சுகாதார அமைப்பு வழிகாட்டல்

உயிரிழப்பு 400,000ஐ தாண்டியது

பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய ஊக்குவிக்க வேண்டும் என்று நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

பொது இடங்களில் கொவிட்-19 வைரஸ் தொற்றும் அபாயமுள்ளதால் முகக்கவசம் அணிவது அந்த நோய்ப் பரவலைக் குறைக்க உதவும் என சுகாதார அமைப்பு தனது புதிய வழிகாட்டி நெறிமுறையில் குறிப்பிட்டுள்ளது.

அண்மைய வாரங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்க உதவும் பலவிதமான சாதனங்களில் முகக்கவசமும் ஒன்று என்றும் அது தவறான பாதுகாப்பு உணர்வைத் தருவதில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், “முகக்கவசங்கள் மட்டுமே ஒருவரை கொரோனா வைரஸ் தொற்றுவதில் இருந்து பாதுகாத்துவிடாது” என்று அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் கொவிட்-19 தொழில்நுட்பத் தலைமை நிபுணர் மரியா வான் கெர்கோவ், “பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லும்படி ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். அதிலும் குறிப்பாக, மருத்துவ முகக்கவசம் அல்லாது, துணியாலான முகக்கவசத்தை அணியுமாறு பரிந்துரைக்கிறோம். முகக்கவசத்தை முறையாக அணிவது ஒரு தடுப்பரணாக விளங்கும். வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் சிறு துளிகள் நம்மை அண்ட விடாமல் அது பாதுகாக்கும் என்பதைப் புதிய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன,” என்று  விளக்கினார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400,000ஐ தாண்டியுள்ளது. ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்படும் தரவுகளின்படி 400,013 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்திருப்பதோடு 6.9 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...