ஜூன் 20 தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

ஜூன் 20 தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு-FR Petition Against General Election

- கலைந்த பாராளுமன்றம் 3 மாதங்களுக்குள் கூட்டப்படாமை அரசியலமைப்பு மீறலாகும்
- பலரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியதால் அவர்களின் மனித உரிமை மீறலாகும்

ஜூன் 20 ம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக உத்தரவிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் (FR) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவிப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது எனத் தெரிவித்து சட்டத்தரணி சரித்த குணரத்னவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான  பேராசிரியர் எஸ். ரத்னஜீவன் எச். ஹூல், ஜனாதிபதி சட்டத்தரணி என்.ஜே. அபேசேகர, ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சட்டமா அதிபர் ஆகியோர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியலமைப்பின் பிரிவு 70 (5) (அ), 70 (5) (ஆ) மற்றும் 70 (5) (இ) இல் கூறப்பட்டுள்ளதற்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அல்லது பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான  திகதி அல்லது திகதிகள் தொடர்பில் கட்டாய விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்டப்பட வேண்டும். எனவே, தேர்தல் திகதியானது ஜூன் 02 ஆம் திகதிக்கு பின்னர் அமையக் கூடாது என்று மனுதாரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜூன் 02 இற்கு பின்னர் தேர்தலை நடாத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதோடு, தேர்தலுக்கான திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியிலிருந்து, 5 வாரங்களுக்கு குறையாமலும், 7 வாரங்களுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும் எனும் கட்டாய விதிகள் காணப்படுவதே அதற்கான காரணம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

அதற்கமைய, ஜூன் 13 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு கடப்பாடுடையதாக மனுதாரர் தெரிவிக்கின்றார்.

அது தவிர, COVID-19 வைரஸ் பரவல் காரணமாக, நாட்டில் சுகாதார பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது, அத்துடன், நோய் தொற்று காரணமாக பல்வேறு மட்டத்திலுள்ளவர்கள் 14 தொடக்கம் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் செயன்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், நாட்டில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்த முடியாது என்று மனுதாரர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக, தேர்தல் ஆணைக்குழுவினால் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயங்களின் அடிப்படையில், இம்மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் வரை பொதுத் தேர்தல் நடைபெறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் உச்சநீதிமன்றத்தை கோரியுள்ளார்.


Add new comment

Or log in with...