பிறந்து 6 வாரங்களில் கொரோனாவுக்கு பலியான சிசு

அமெரிக்காவில் பிறந்து 06 வாரங்களேயான குழந்தையொன்று  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளது.

சுகவீனமடைந்த இக்குழந்தை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இக்குழுந்தை  சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. உலக அளவில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் தற்போது அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அந்நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 12 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்து 759 பேர் உயிரிழந்துள்ளனர்.  

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 805 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான்  நகரில் கடந்த டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதுமாக 203 நாடுகளுக்கு பரவியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 9.5 இலட்சத்தை நெருங்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 


Add new comment

Or log in with...