இஸ்லாத்தில் பெற்றோரின் மகிமை

முஹம்மத் (ஸல்) அவர்கள்,  மரணித்த  தம் பெற்றோருக்காகப் பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டிய பணிகளையும் கூட சொல்லி வைத்துள்ளார்கள். இதன்படி பெற்றோர் விவகாரத்தில் இஸ்லாம் எவ்வளவு தூரம் கரிசனை காட்டி இருக்கின்றது என்பது நன்கு தெளிவாகின்றது.

ஒருமுறை மனிதர் ஒருவர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘எனது பெற்றோர் இறந்து விட்டால் அவர்களுக்கு உபகாரம் செய்தல் என்று ஒரு விடயம் உள்ளதா?’ எனக் கேட்டார். அதற்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘ஆம்’ எனக் கூறிவிட்டு பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்கள்.

* ‘அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல்.

* அவர்களுக்காகப் பாவமன்னிப்பு கோருதல்.

* அவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றுதல்.

* அவர்கள் மூலமான உறவுகளைச் சேர்த்து நடத்தல்.

* அவர்களது நண்பர்களைக் கௌரவப்படுத்தல்

என்றும் கூறினார்கள்.

(ஆதாரம் : அபூதாவுத்)

இன்றைய நிலைமை

என்றாலும் அல்-குர் ஆனும், ஸுன்னாவும் பெற்றோருக்கு அளித்து இருக்கின்ற இந்த மகத்துவத்தையும், சிறப்பையும் இன்றைய கால கட்டத்தில் அறியாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அறிந்திருக்கும் சிலரோ அவற்றைப் பொருட்படுத்தாது நடந்து கொள்கின்றனர். இதனை அவர்களது நடத்தைகளும், செயற்பாடுகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதேவேளை,  யமன் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்தார். அவரை முஹம்மத் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். ‘யமன் நாட்டில் உமக்கு உறவினர்கள் எவராவது இருக்கின்றாரா?’ என வினவினார்கள். அப்போது அந்நபர் ‘ஆம் என் பெற்றோர் இருக்கின்றனர்’ என்றார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘நீர் இங்கு வருவதற்கு அவர்கள் அனுமதி வழங்கினாரா?’ எனக்கேட்டார். அச்சமயம் அந்நபர், ‘இல்லை. நான் அனுமதி கேட்கவில்லையே!’ என்றார். அப்படியென்றால் நீர் திரும்பிச் செல்லும். இங்கு வரவென அவர்களிடம் (பெற்றோர்) அனுமதி கேளும். அவர்கள் அனுமதி அளித்தால் இங்கு வந்து ஜிஹாதில் கலந்துகொள்ளலாம். இல்லையெனில் அவர்களுக்குச் சேவை புரிந்த வண்ணம் இருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வீராக! எனக் கூறி அனுப்பியதாக அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(ஆதாரம் : அபூதாவூத்)

மேற்சொன்ன நபி மொழிகளைப் பொதுவாக எடுத்து பார்த்தால் பெற்றோருக்கு பணிவிடை செய்வதானது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல்களில் ஒன்றாக விளங்குவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதேநேரம் அது இறைவழியில் போராடுதல் (ஜிஹாத்) ஹிஜ்ரத் செய்தல் போன்ற நற்காரியங்களை விடவும் மேலான ஒன்றாகவும் விளங்குகின்றது.


Add new comment

Or log in with...