பிரதமர் மஹிந்தவுடன் சீன தூதுவர் சந்திப்பு

சீனாவின் வூஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷேங் சியுவான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீன தூதுவருக்குமிடையில் நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சீன அரசு தீவிரமாக முன்னெடுத்து வருவதுடன், வூஹான் உட்பட கொரோனா வைரஸ் பரவியுள்ள அனைத்து நகரங்களினதும் நிலைமைகள் விரைவில் வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் சீன தூதுவர் பிரதமரிடம் குறிப்பிட்டார்.

சீனாவில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட சென்றுள்ள மாணவர்கள் குறித்து அவர்களின் பெற்றோர் அச்சமடைந்துள்ளதாக சீன தூதுவருக்கு விளக்கமளித்த பிரதமர், இலங்கையில் உள்ள சீனர்களின் அன்றாட செயற்பாடுகளை நடத்தி செல்ல எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லையெனவும் கூறியுள்ளார்.

வூஹான் நகரத்தில் உள்ள இலங்கை மாணவர்களை விசேட விமானமொன்றின் மூலம் அழைத்துவர இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...