பாதுகாப்பு கருதியே உரையாடல்களை பதிவு செய்தேன்

 ஜனாதிபதியுடன் எந்த தொலைபேசி தொடர்பும் இல்லை

சகலரிடமும் மன்னிப்பு கோருவதாக ரஞ்சன் சபையில் அறிவிப்பு

தனது பாதுகாப்பு கருதியே தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததாகவும் குரல் பதிவுகள் வெளியானது தொடர்பாக தன்னுடன் தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சபையில் தெரிவித்தார்.

மிக முக்கியமான குரல் பதிவுகள் பல தன்னிடம் இருப்பதாகவும் அவற்றை ஹாட் டிஸ்களில் இட்டு நாட்டுக்கு வெளியே பாதுகாப்பு பெட்டகங்களில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடற்றொழில் அமைச்சின் ஒழுங்குவிதிகள் முன்மொழிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில், நான் நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த பல விடயங்கள் உள்ளன. என்னுடன் கதைத்தவர்கள் என கூறப்படும் உளவாளிகள், தகவல்களை வழங்குபவர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், மதத் தலைவர்கள், நீதிபதிகள், நீதிமன்றதுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பாக மக்கள் கேட்டிருப்பார்கள்.

எனது தொலைபேசி, மடிக்கணனி மற்றும் தரவு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறி கடந்த 4ஆம் திகதி பொலிஸார் எனது வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்றுள்ளனர். எனது வீட்டிலிருந்து இவை அனைத்தையும் எடுத்துச் சென்று அனுமதியின்றி வெளியிட்டுள்ளனர்.

ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டம் தொடர்பான இந்த குரல் பதிவுகள் வெளியாகியுள்ள அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். நான் வேண்டுமென்றே இதனை செய்யவில்லை. இதனை வெளியிட்டு யாருடையதேனும் குடும்ப வாழ்க்கையை, யாருடையதேனும் அமைதியை கொடுப்பதற்கு நான் அதனை செய்யவில்லை. அத்துடன் என்னிடமிருக்கும் நாட்டுக்கு வெளிவராத , அரசாங்கத்தினால் மறைக்கப்படும் உரையாடல் பதிவுகளையும் நான் இந்த சபையில் சமர்பிக்கின்றேன். என்னுடன் கதைத்த நீதிபதிகள், பிரதம நீதியரசர்கள், அரச தலைவர்கள் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதனை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அத்துடன் அமைச்சர்கள், அவர்களின் மனைவிகள், பிள்ளைகளும் அதற்குள் அடங்குவர்.

இவர்களின் குரல் பதிவுகளை சபையில் சமர்பிக்கின்றேன்.

சொன்னதை இல்லையென்று கூறிபவர்கள் இருப்பதால் நான் அதற்கான ஆதரங்களை வைத்திருந்தேன். எனது கருத்துக்களுக்கு சாட்சி கேட்பதால் தேவையான சாட்சிகளை வைத்திருந்தேன். எனக்கு யாரிடமிருந்தும் நற்சான்று தேவையில்லை.

கடந்த காலங்களில் திருட்டை பிடிக்க நாங்கள் செயற்படுகையில் திருட்டை பிடிப்பவர்களும் திருடர்களும் ஒன்றாக இணைந்து வழக்குகளை மாற்றினர். இதனால்தான் நான் நீதிபதிகள் , வழக்கு தொடர்ந்தவர்கள், பிரதிவாதிகள் உள்ளிட்டோரின் குரல் பதிவுகளை பதிவு செய்தேன்.

சில நீதிபதிகளுக்கு வழக்கு தீர்ப்புகளை வழங்குவதில் அச்சம் இருந்தது. சரத் அம்பேபிட்டியவுக்கு நடந்ததை போன்று தமக்கும் நடந்துவிடுமோ என அஞ்சினர்.

இதனால் இந்த விடயங்கள் தொடர்பாகவே கதைத்தோம். வேறு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை. நான் எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திலேயே இருந்து செயற்படுகின்றேன். செல்வந்தர்களின் பக்கம் இன்றி அப்பாவி மக்களின் பக்கமே இருந்து செயற்பட்டேன். அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்ற பக்கத்தில் இருந்தே நான் செயற்பட்டேன். நான் எதனையும் வாக்குகளை எதிர்பார்த்து செய்யவில்லை.

நான் சுயாதீனமாக போட்டிடுவேன். என்னை வீட்டுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை. சிறையில் இருந்தாலும் பரவாயில்லை. நியாயத்தின் பக்கத்தில் உண்மையாக இருந்தவன் என்ற திருப்தியுடன் இருப்பேன்.

குரல் பதிவுகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென பிரதமர் கூறுகின்றார். இதனை வரவேற்கின்றேன். அந்த ஆணைக்குழுவுக்கு தேவையான கோப்புகளை தருவேன்.இது தொடர்பாக ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோருகிறேன்.

நானும் மஹிந்த ராஜபக்ஷவும் மருதான சினிசிற்றியில் வன்சொட் திரைப்படம் பார்த்தவிட்டு வரும் நாளில் தான் லக்ஷமன் கதிர்காமரும் கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் குரல்பதிவுகள் சில இருக்கின்றன. இவற்றையும் சபையில் சமர்பிப்பதாக குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...