இலங்கைக்கு எழில் சேர்க்கும் கொழும்பு துறைமுக நகரம்

உல்லாசப் பயணத்துறைக்கு  பெயர்போன இலங்கை அண்மைக் காலமாக எத்தனையோ விதமான சம்பவங்களை எதிர்கொண்டிருந்தாலும் தன் இயற்கை அழகாலும், வரலாற்றுப் பெருமையாலும் வெளிநாட்டவர்களை கவர்ந்திழுக்கத்  தவறியதில்லை. அத்தகு இலங்கையின் தலைநகர் கொழும்பானது சர்வதேச அளவில் பெயர்பெற்று வரும் நவீன நகரமாக மாற்றமடைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. தாமரைத் தடாகம், தாமரைக் கோபுரம், வானுயர் கட்டடங்கள் மற்றும் வரலாற்றுக் கட்டடங்கள் என தன் எழிலினை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த ஹைடெக் சிட்டியினை மேலும் அலங்கரிக்கும் விதமாக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தொகுதிகளைக் கொண்டது தான் கொழும்புத் துறைமுக நகரம் (Colombo Port City) ஆகும்.

கொழும்புத் துறைமுகப் பகுதியில் சர்வதேச வசதிகள் நிறைந்த கட்டடத்தொகுதிகளை அமைக்கும் நோக்கில் தான் இத்துறைமுக நகரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் மேற்குபுறத்தில் அமைந்திருக்கும் கொழும்பு துறைமுகத்தின் தென்பகுதியில் மணல் கொண்டு கடலை நிரப்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கியே இந்நகர் உருவாக்கப்படுகின்றது. இலங்கை வரலாற்றில் இவ்வாறான ஒரு  வரலாற்று சிறப்பு மிக்க பாரிய அபிவிருத்தித் திட்டத்திற்கு அடித்தளமிட்டவர்  தற்போதைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப வைபவத்தில்   சீன ஜனாதிபதி ஜின் பிங்கினால்  நிர்மாணப்பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது. என்றாலும் இத்திட்டம் 2011மார்ச்சில் ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும் பலவிதமான தடங்கல்களால் இத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் தாமதமாகியமை தெரிந்ததே. 

1.5பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமைக்கப்படும் இந்நகரின் அமைவிடமானது கொழும்பு துறைமுகத்தின் தென்முனையிலுள்ள அலைதாங்கியுடன் கூடிய இடமாகும். இப்பிரதேசத்தின் கடலை மணல் கொண்டு நிரப்பி 269ஹெக்டேயர் பரப்பில் இந்நகர் உருவாக்கப்படுகின்றது. இதன் நிமித்தம் கடலை நிரப்பும் பணிகள் 2018ஆம் ஆண்டில் நிறைவுற்றுள்ளன. இவ்விடத்தில் நவீன நகரமொன்று அமைக்கப்படுவதால் கொழும்பு நகரின் மத்திய வர்த்தக பிரதேசமாக இது எதிர்வரும் காலங்களில் மாற்றமடையும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள வர்த்தக கேத்திரங்களின் தரத்திற்கு இலங்கையின் இந்த துறைமுக நகர் உருவாகும். இதனை நோக்காகக் கொண்டு தான்  இந்த இடம் தேர்வு செய்யப்பட்டன.

இலங்கைக்கு இது ஒரு புதிய திட்டம் என்பதால் கடல் பகுதியை மணல் கொண்டு நிரப்பி இவ்விடம் உருவாக்கப்படுவது தொடர்பில்  ஆரம்ப காலப்பகுதியில் பலர்  விமர்சனங்களைத் தெரிவித்தனர். ஆனாலும் இத்திட்டத்தின் பெறுமதியும் அதன் ஊடாக இலங்கை அடைந்து கொள்ளக்கூடிய நன்மைகள் குறித்தும் பகிரங்கப்படுத்தப்பட்டதும் விமர்சனங்கள் முற்றுப்பெற்று விட்டன.  தற்போது இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்களவிலான வேலைபாடுகள் நிறைவடைந்துள்ளதுடன் மீதமுள்ள வேலைகளை  முழுமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2.69கிலோமீட்டர்கள் பரப்பளவில் உருவாகின்ற இந்நகரத்தினுள் வர்த்தக நிலையங்கள், பாரிய கோபுரங்கள், உல்லாச ஹோட்டல்கள், கடைத்தொகுதிகள், பூங்காக்கள், கொல்ப் விளையாட்டு மைதானம் என அனைத்து வசதிகளும் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகின்றன.  கண்கவர் எழில்மிக்க வகையில் அமைக்கப்படும் இந்நகர் உலகிலுள்ள முக்கியத்துவம் மிக்க நகர்களில் ஒன்றாக திகழும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

சீனாவின் CCC எனப்படும் China Communications Construction மற்றும் CHEC எனப்படும் இலங்கையின் துறைமுக நகர நிறுவனங்கள் இணைந்து தான் இதன் கட்டுமான வேலைப்பாடுகளை மேற்கொள்கின்றன. கொழும்பு துறைமுகத்தை ஒரு புறமாகவும் பிரபலமான காலிமுகத்திடலை மறு புறமாகவும் கொண்டதாக இந்த ஹைடெக் நகரம் உருவாகி வருகின்றது. 

ஆகவே இந்நகரின் நிர்மாணப் பணி கள் நிறைவுற்றதும் தெற்காசியாவில் இல ங்கையின் புகழ் மேலோங்கும் அதே நேரம் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் முதலீடுகளையும் கவர்ந்திழுக்கும் இடமாக இது அமையும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.


Add new comment

Or log in with...