வறிய குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்கும் செயற்திட்டம் இம்மாதம் முதல் ஆரம்பம்

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 14ஆயிரத்து 22வறிய குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைதிட்டத்தை அரசாங்கம் இம் மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் 14ஆயிரத்து 22கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு வீடு வீதம் அமைப்பதே அரசாங்கத்தின் முதற்கட்ட இலக்காகவுள்ளது. இதனடிப்படையில் இவ் வருட இறுதிக்குள் 14ஆயிரத்து 22வீடுகள் நிர்மாணிக்கப்படும். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் நாட்டை மேம்படுத்தும் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்தில் இலங்கையின் அனைத்து குடும்பங்களுக்கும் சிறந்த வசதிகளுடன்கூடிய வீடுகளில் வாழும் வகையில் 'கமட்ட கெயக்- ரட்டட்ட ஹெடக்' எனும் திட்டம் 2020இல் ஆரம்பிக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமரும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய கிராமசேவகர் பிரிவு தோறுமுள்ள ஒரு வறிய குடும்பத்தவருக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு அரசாங்கம் 06 இலட்சம் ரூபா நிதியுதவியை நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் தவணைக் கொடுப்பனவாக வழங்கும் என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்

 


Add new comment

Or log in with...