திண்மக் கழிவு முகாமைத்துவம் உரியபடி செயற்படுத்தப்பட வேண்டும்

உலகின் பல நாடுகளுக்கும் திண்மக்கழிவுப் பொருட்கள் பெரும் பிரச்சினையாக வளர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக வளர்முக நாடுகள் இப்பிரச்சினைக்கு பெரிதும் முகம்கொடுத்துள்ளன. அவற்றில் இலங்கையும் அடங்கும்.

என்றாலும் இப்பொருட்கள் பெரும் பிரச்சினையாக மாறுவதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. குறிப்பாக திண்மக் கழிவுப் பொருட்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் போதிய தெளிவு, விழிப்புணர்வு இன்மை, ஒழுங்கு முறையான முகாமைத்துவம் மற்றும் திட்டமிடல் இன்மை என்பன அவற்றில் சுட்டிக்காட்டத்தக்க காரணங்களாகும்.

இதனால் வீட்டிலோ அல்லது சுற்றுச் சூழலிலோ அல்லது பிரதேசத்திலோ சேரும் திண்மக் கழிவுப் பொருட்களை எங்காவது அப்பறப்படுத்தினால் போதும் என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் இது முற்றிலும் தவறானதும் பிழையானதுமான மனப்பான்மையாகும். இதன் விளைவாக ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் குறித்து கவனம் செலுத்தப்படுமாயின் இவ்வாறான மனப்பான்மை ஒருபோதும் ஏற்படாது. அதன் பயனாக இக்கழிவுப் பொருட்கள் ஒழுங்குமுறையாக முகாமைத்துவம் செய்யப்படும். அப்போது அவை பெறுமதிமிக்க செல்வமாகவும் சொத்தாகவும் விளங்கும்.

திண்மக் கழிவுப் பொருட்களை ஒழுங்குமுறையாக முகாமைத்துவம் செய்யும் போது அவற்றைப் பசளையாகப் பயன்படுத்தலாம். பிளாஸ்ரிக், பொலித்தீன் பொருட்களைக் கொண்டு நீண்ட காலத்துக்கு நீடித்து நிலைக்கக் கூடிய வகையில் வீதிகளைச் செப்பனிடலாம். அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இக்கழிவுப் பொருட்களைக் கொண்டு ரயில் தண்டவாளத்துக்குரிய சிலிப்பர் கட்டைகள், வீடுகளுக்குத் தேவையான தடிகள், உயிரியல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்குரிய அறிவும், அனுபவமும், தொழில்நுட்பமும் புழக்கத்தில் உள்ளன.

இந்தப் நிலையில்தான் உலகின் பல நாடுகள் திண்மக் கழிவுப் பொருட்களை பெறுமதிமிக்க பொருட்களாக மாற்றி பயன்படுத்தி வருகின்றன. அந்நாடுகளுக்கு திண்மக் கழிவுப் பொருட்கள் ஒரு பிரச்சினையே கிடையாது. அந்த வகையில்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில், 'அந்தந்த பிரதேசத்தின் திண்மக் கழிவுப் பொருட்களை அந்தந்த பிரதேச உள்ளூராட்சி மன்றங்கள் முதலீடாகப் பயன்படுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.

அதுதான் உண்மை. திண்மக் கழிவுப் பொருட்களை திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்கு முறையாகப் பயன்படுத்தினால் அது முற்றிலும் முதலீடாகவே அமையும். இதில் எவ்வித ஐயமும் இல்லை.

இருந்தும் கூட கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பு திண்மக் கழிவுப் பொருட்களே ஒரு பெரும் பேசுபொருளாக்கப்பட்டது. மீதொட்டமுல்ல குப்பமேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து கொழும்புக் குப்பையை வத்தளை பிரதேசத்திற்குக் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட போது பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்தோடு அத்திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் பிலியந்தலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட போது அங்கும் எதிர்ப்பு- தெரிவிக்கப்பட்டது.

அதனால் கொழும்பு குப்பையை புத்தளம், அறுவைக்காட்டு சேரக்குழி பிரதேசத்திற்குக் கொண்டு செல்லும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது வத்தளை, பிலியந்தலை மக்களைப் போன்று புத்தளம் பிரதேச மக்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் புத்தளம் மக்களின் எதிர்ப்பு தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை. சுமார் 120 நாட்களுக்கு மேல் புத்தளம் மக்கள் இத்திட்டத்துக்கு ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டங்கள், சத்தியாக்கிரகங்களை மேற்கொண்ட போதிலும், ஜனநாயகத்தை நாட்டு மக்களுக்குப் பெற்றுக் கொடுத்ததாகக் கூறிய அரசாங்கத்தின் தலைவர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. திட்டத்தை முன்னெடுப்பதில் குறியாக இருந்தனர்.

ஆனால் கொழும்பிலிருந்து 340 கிலோ மீற்றருக்கு அப்பால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து செலவு, நேர விரயம், உள்ளிட்ட எந்த விடயங்களும் கவனம் செலுத்தப்படவில்லை. கொழும்புப் பிரதேசத்திலிருந்து கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தப்படுவதே அவர்களது பிரதான நோக்காக இருந்தது. இருப்பினும் கடந்த ஆட்சியாளர்கள் மேற்கொண்ட இச்செயற்பாட்டினால் ஒரு வளமான தூய பூமி அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் வேதனைக்குரிய விடயம்.

என்றாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்ததும் திண்மக் கழிவுப் பொருட்களை ஒழுங்கு முறையாக அப்புறப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுப்படுவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக நாட்டைச் சூழவுள்ள கரையோரப் பிரதேசங்களை சுத்தப்படுத்தும் வேலைத் திட்டம் கடந்த ஒருவாரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் கரையோரப் பிரதேசங்களிலிருந்து 3,92,697 கழிவுப் பொருட்கள் மீட்கப்பட்டன. அவை 36,459 கிலோ கிராம் நிறை கொண்டவை' என்று கரையோரப் பாதுகாப்பு சபையின் பணிப்பாளர் டொக்டர் டேர்னி பிரதீப்குமார தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை பிளாஸ்ரிக் போத்தல்கள், கோப்பைகள், மூடிகள், பொலித்தீன்கள் என்பனவாகும். இப்பணியில் முப்படையினரும் பாடசாலை மாணவர்களும் அடங்கலாக 9,067 பேர் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதன்படி ஒரு வாரகாலப் பகுதியில் இவ்வளவு தொகை கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டிக்கின்றது என்றால் நிலைமை என்னவாகும்?

ஆகவே ஒழுங்கு முறையாக திண்மக் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதை ஒரு முக்கிய பொறுப்பாகவும் கடமையாகவும் கருதி செயற்படும் நிலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அவற்றை ஒழுங்கு முறையாக முகாமைத்துவம் செய்து பெறுமதிமிக்க பொருட்களாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அப்போது திண்மக்கழிவுப் பொருட்கள் இலங்கைக்கு ஒரு பிரச்சினையாகவே அமையாது.


Add new comment

Or log in with...