நம் சகோதர அன்பு வார்த்தையில் மட்டும்தானா ?

"காயினைப்போல் நீங்கள் இராதீர்கள்"(1யோவா 3,12).   நாம் சகோதர அன்பையும், கொலையின் இன்னொரு வடிவையும் இந்த வாசகம் மூலம்  தியானிக்கின்றோம்.

சிறு வயது முதல் எமக்கு காயின் ஆபேல் கதை நன்றாகத் தெரியும். இது உலகில் முதலாவது கொலை என்று எமக்கு சொல்லப்பட்டதற்குப் பதிலாக சகோதர அன்புக்கு எதிரான பாவம் என்று கூறுவதே மிகப் பொருத்தம்.

பத்துக்கட்டளைகளை இரண்டு கட்டளைகளுக்குள் அடக்கலாம் என்பது எமக்குத் தெரியும். முதலாவது இறைவனை அன்புசெய்தல் அதற்கு எதிராக ஆதாம், ஏவாள் பாவம் செய்தனர். அவர்கள் இறைவனின் கட்டளையை மதிக்கவில்லை. இரண்டாவது அயலவரை அன்புசெய்தல்.

பொறாமையால் காயின் தனது சகோதரன் ஆபேலை கொலை செய்கின்றான். காயின் தனது சகோதரனை வெளிப்படையாய்த் தாக்கி கொலை செய்வதற்குமுன் உள்ளத்தினால் கொலை செய்துவிட்டான். அதுவே செயலாக வெளிப்பட்டது. யோவானின் முதலாவது திருமுகத்தின்படி "தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்"(3,15).

நாம் வெளிப்படையாய் நமது உறவுகளைக் கொலை செய்யாவிட்டாலும் உள்ளத்திலே அவர்கள் மட்டில் வெறுப்பினை வளர்ப்போமானால் நாம் ஒவ்வொருவரும் கொலைகாரரே. எனவேதான் நாம் காயினைப்போல இருக்கக் கூடாது என்று இறைவார்த்தை கூறுகின்றது.

திருமுழுக்கினால் நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சகோதரர் சகோதரிகளாகின்றோம். அப்படியென்றால் திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் காயினைப்போல இருக்கக்கூடாது. உடலினால் பிறக்கும் உறவை விட ஆவியின் அருட்பொழிவால் கிடைக்கும் உறவு மேன்மையானது.

எமது பங்கில் நாம் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு அவர்களுக்கெதிராக பிரச்சினைகளைத் தூண்டி விடுவோமானால் நாமும் நிச்சயமாகக் "காயினே".

குருக்கள் மற்றும் துறவிகள் தங்களது அபிஷேகத்தாலும் அர்ப்பணத்தாலும் ஒருவரையொருவர் சகோதர குருக்கள் என்றும் சகோதரன், சகோதரி என்றும் அழைத்துக் கொள்கின்றார்கள்.

இது வார்த்தையில் மட்டும்தான் என்றால் அதில் அர்த்தமில்லை.

மறைமாவட்டத்தில், மடத்தில் சிலர் ஒருவருக்கெதிராக மற்றவர் பொறாமை கொள்வதும், தம்மைவிட மேலே அடுத்த பணியாளர் உயர்ந்து விடக்கூடாது என்று மனநோய் பிடித்ததுபோல வாழ்வதும் பதவி ஆசைக்காக நற்பெயரைக் களங்கப்படுத்துவதும் இறைமக்களைப் பிரித்து ஆள்வதும் மனவுளைச்சலை ஏற்படுத்துவதும் காயீனின் வடிவங்களும் கொலையுமாகும். இறைவார்த்தையின் சவாலுக்கு முன் எவரும் விதிவிலக்கல்ல. எனவே,  நற்செய்தியில் கூறப்படுவதுபோல இயேசுவைப் பின்பற்றுவதே எம் எல்லோரதும் இலக்காக அமைய வேண்டும்.

அருட்சகோதரர் றீகன் லோகு


Add new comment

Or log in with...