மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் விரிவுபடுத்தப்படும்

10,000 தொழில்நுட்ப பட்டதாரிகளை உருவாக்குவதே அரசின் திட்டம்

அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடருவதற்காக வட்டியின்றி வழங்கப்படும் மாணவர் கடன் தொகை மூலம் தற்போது அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயனடைய முடியுமென உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறையமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மேற்படி மாணவர்களுக்கான கடன் திட்டம், தொழில்நுட்ப அறிவைக் கொண்ட 10,000பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை தொடருவதற்காக மாணவர்களுக்கு வட்டியின்றி கடன் வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

எனினும் இக் கடன் வழங்கும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள கற்கை நெறிகளுக்கு தொழில் சந்தையில் போதிய கேள்வி இல்லாமையினால் மாணவர்கள் அத்திட்டத்தை பெரிதும் நாட முன்வரவில்லை.

எனவே அத் திட்டத்தை மீண்டும் திருத்தியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.  இதனடிப்படையில் தொழில்நுட்ப அறிவைக் கொண்ட 10 ஆயிரம் மாணவர்களை உருவாக்கும் நோக்கில் அதற்குரிய பாடத்திட்டங்கள் இக்கடன் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...