அரசாங்க காணியை தனியாருக்கு விற்கும் குற்றச்சாட்டு தவறானது

250 மில்.டொலர் முதலீடு

2014 இல் ஆராயப்பட்ட திட்டமே மீண்டும் முன்னெடுப்பு

புதிய அரசாங்கத்தின் முதலாவது முதலீட்டுத்திட்டத்திற்காக அரசாங்கம் 3 ஏக்கர் காணியை தனியாருக்கு விற்கப் போவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த கலப்பு முதலீட்டுத் திட்டத்திற்காக 99 வருட குத்தகைக்கு காணி வழங்கப்பட்டுள்ளதோடு அரச மதிப்பீட்டுக்கமையவே காணி வழங்கப்பட்டுள்ளது என அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். ஐ.தே.க தெரிவிப்பது போல இது அவர்களது ஆட்சியில் கிடைத்த வெளிநாட்டு முதலீடல்ல. 2014 இல் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் கிடைத்த முதலீடு ஆட்சி மாற்றம் காரணமாக தடைப்பட்டது.இதனை கடந்த அரசு சரிவர கையாளாததால் இந்த திட்டம் இழுத்தடிக்கப்பட்டது. அதுவும் 200 மில்லியன் டொலர் கொண்டுவரவே முயற்சி நடந்தது.அதனை 250 மில்லியன் டொலர்களாக அதிகரித்து நாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் ஆட்சியில் ஒரு அங்குலம் காணி கூட தனியாருக்கு விற்கப்பட மாட்டாது.

மக்களால் நிராகரிக்கப்பட்ட எதிரணி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.எந்த ஒரு அரச நிறுவனத்தையும் எமது அரசு தனியார்மயப்படுத்தாது.

கடந்த ஆட்சியில் முதலீடுகளுக்கு உகந்த சூழல் காணப்படவில்லை.துறைமுக நகர திட்டத்தின் கிழ் உகந்த முதலீடுகளுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு முதலீடுகளை அதிகரிப்பதினூடாக தீர்வு காணப்படும்.

250 மில்லியன் கலப்பு முதலீட்டு திட்டத்தின் கீழ் 600-700 வீடமைப்பு திட்டம்,தொலைத்தொடர்பு கோபுரம், என்பனவும் அடங்கும். முதலீட்டு சபை தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது என்றார்.

நாட்டுக்கு பாதகமான எந்த ஒப்பந்தத்திலும் எமது அரசாங்கம் கைச்சாத்திடாது.எம்.சீ.சி.சோபா,சிங்கப்பூர் ஒப்பந்தம் என்பவற்றை எதிரணியில் இருந்தபோது எதிர்த்தோம்.ஆளும் தரப்பிற்கு வந்ததும் எமது நிலைப்பாடு மாறாது.எம்.சீ.சி ஒப்பந்தத்திற்கு கடந்த அரசு அனுமதி வழங்கினாலும் அதில் பாதகமான பல விடயங்கள் உள்ளன.அதனை ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்த்தில் எமது அரசு கைச்சாத்திடாது.இந்த ஒப்பந்தம் பற்றி சஜித் பிரேமதாஸ தற்பொழுத்து சவால் விட்டாலும் அவர் அமைச்சரவையில் இருக்கையில் ஏன் பேசவில்லை.சோபா ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு எந்த பயனும் கிடையாது. என்றும் அவர் குறிப்பிட்டார்.(பா)

 

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...