கூடுதல் அதிகாரங்களுடன் ஜனாதிபதி ஆணைக்குழு

அரசியல் பழிவாங்கல் நோக்குடன் அரச அதிகாரிகளுக்கெதிராக விசாரணை நடத்தியவர்களை விசாரணைக்குட்படுத்த

கடந்த அரசாங்கத்தில், அரசியல் பழிவாங்கல் நோக்குடன் விசாரணைக்குட்படுத்தப்பட்ட அதிகாரிகளை விசாரணை செய்த குழுக்களை விசாரணைக்குட்படுத்தி தண்டனைகளை சிபாரிசு செய்யும் அதிகாரத்தை கொண்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று விரைவில் ஏற்படுத்தப்படுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்க அதிகாரிகளை விசாரித்த விசாரணைக் குழுவில் இடம்பெற்ற அதிகாரிகளுக்கு மூன்றாம் தரப்பிலிருந்து தேவையற்ற அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது என்பது தொடர்பாக மேற்படி விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கவனத்தில்கொள்ளும்.

நிதிக் குற்றச்சாட்டுகள் விசாரணைப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி வைத்யலங்கார அவ்வாறான மூன்றாம் தரப்பு சக்திகள் பற்றி அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.

மேற்படி விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்களா? அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை மீறினார்களா? என்பதையும் மேற்படி ஆணைக்குழு கவனத்தில் எடுக்கும். அதேவேளை இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக தெரியவருமிடத்து அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகளையும் ஆணைக்குழு சிபாரிசு செய்யும்.

சாதாரண விசாரணை ஆணைக்குழுவை விட அதிகளவு அதிகாரங்களைக் கொண்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை, விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொள்வதற்கு அமைச்சரவை இவ்வாரம் அங்கீகாரம் வழங்கியது. மேற்படி அமைச்சரவை பத்திரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகள் உத்தியோகபூர்வ மட்டத்தில் தாம் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் வகையிலான சட்ட அதிகாரத்தை கொண்டுவருவது தொடர்பாகவும் அரசாங்கம் அக்கறை காட்டி வருகிறது.

கடந்த சில வருடங்களாக அரசாங்க அதிகாரிகள் தண்டனை பெறலாம் என்ற அச்ச உணர்வினால் தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கு தயக்கம் காட்டினர்.

எதிர்காலத்தில் அவ்வாறான நிலை ஏற்படுவதை புதிய சட்டம் தவிர்த்து விடும். எனினும் அதன் வரம்புகள் சட்ட மாஅதிபரினாலேயே தீர்மானிக்கப்படும்.

சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் பலர் கடந்த சில வருடங்களாக பல்வேறு விசாரணை குழுக்களினாலும் சில நேரங்களில் விசேட மேல் நீதிமன்றங்களினாலும் விசாரிக்கப்பட்டனர்.

எனினும் இறுதியில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

எவ்வாறெனினும் அவர்களது நற்பெயர், கௌரவம் மற்றும் சமூக அந்தஸ்து என்பவற்றுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்க அதிகாரிகள் தேவையான தீர்மானங்களை எடுக்க தயங்கும் போது அரச பொறிமுறை விரைவாக செயற்பட முடியாது என்றார்.


Add new comment

Or log in with...