அண்ணலாரின் அழகிய முன்மாதிரிகள்

சமத்துவம், சகோதரத்துவம் இப்பாரினிலே நிலைபெற வேண்டும் என்பதற்காக ஓயாது உழைத்த உத்தமரின் பேரால் நிகழ்த்தப்படும் வைபவங்களை மாத்திரம் நடத்திவிட்டால் மட்டும் அண்ணலாரைக் கௌரவித்ததாக, மரியாதை செய்ததாக அமையமாட்டாது. அவர்களின் வாழ்க்கை நெறி, அவர்களிடத்தில் காணப்பட்ட நற்பண்புகள், குணாதிசயங்கள் போன்றன எம்மிடத்தில் காணப்பட வேண்டும்.

இல்லையெனில், அன்னாரின் பேரால் நடாத்தப்படும் நிகழ்ச்சிகள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்படமாட்டா என்பது திண்ணம்.

இன்று உலகில் காணப்படும் இன்னல்கள் யாவும் பெருமானார் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகளைப் பின்பற்றத் தவறியதனால்தான். அன்று ஹஜ்ஜத்துல் விதாவில் நிகழ்த்திய பேருரையில்,

'நான் உங்களுக்கு இரண்டு விடயங்களை  விட்டுச் செல்கிறேன், அவைகளைப் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். அவைதான் அல்-குர்ஆன், அல்-ஹதீஸ்' என்றார்கள்  நபி (ஸல்) அவர்கள்.

எனவே, நாயகம் (ஸல்)  அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த அறுபத்துமூன்று ஆண்டுகளில் அவர் காட்டிச் சென்ற நல்வழி மனித குலத்துக்கு இன்று மிகவும் அவசியமாகும்.

ஏனெனில், இக்காலத்தில எங்கு பார்த்தாலும் பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்து காணப்படுகின்றன. பொறாமையும் சூதும் மக்களிடம் குடிகொண்டுள்ளன. நீதி நெறி தவறிவிட்டது. குழப்பங்கள், கலவரங்கள் தினசரி நிகழ்சிகளாகிவிட்டன.

உலகெங்கும் அமைதி, நிம்மதிக் குறைவு ஏற்பட்டுள்ளது. சத்தியமும், நேர்மையும் மறைந்துகொண்டு வருகின்றன. பகைமை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. மனநிறைவு எவரிடமும் காணோம். இவ்வனைத்துக்கும் அருமருந்து பெருமானாரின் வாழ்க்கை முறையே.

மிக உயர்வான பதவியை அடைந்திருந்தும் பெருமானார் (ஸல்) அவர்கள், தங்களை தங்களின் தோழர்களை விடப் பெருமையாகக் கருதியதே இல்லை. 'நானும் இறைவனின் ஓர் அடிமையே. எனவே, அடிமையைப் போன்றே உண்ணுகிறேன், உட்காருகிறேன்' என்று அடிக்கடி தோழர்கள் மத்தியில் கூறுவார்கள்.

மக்காவில் இருக்கும் போது எவ்விதமான ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கையை நடத்தினார்களோ, அதே போன்று மதீனாவிலும் தாங்கள் அரசராய், எல்லாவித பொருள் வசதி, பணியாள் வசதி, இருப்பிட வசதி போன்றன இருந்தும் எளிய வாழ்க்கை முறையைச் கைக்கொண்டார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் பாதையில் நடந்து செல்வாராயின், பார்வை தரையை நோக்கியே இருக்கும். யாரையாவது வழியில் சந்தித்தால் அவர்கள் 'ஸலாம்' கூறுவதில் முந்திக்கொள்வார்கள்.

மேலும், அவர்கள்தான் முதன்முதலில் 'முஸாபஹா' (கைலாகு) செய்வார்கள். மற்றவர் கையை எடுக்க முன் தங்களின் கையை எடுக்க மாட்டார்கள்.

அவர்களிடம் யார் வந்தாலும் நல்ல முறையில் உபசரிப்பார்கள். அவசியப்பட்டால் அல்லாது நாயகம் அவர்கள் பேசமாட்டார்கள். பேசினால் அது இனிமையானதாகவும் மனதை ஈர்க்கக் கூடியதாகவும் இருக்கும். யாரிடமும் முகமலர்ந்து மகிழ்ச்சியுடன் உரையாடுவார்கள்.

தங்களுக்கு இன்னல் புரிந்தவர்களைப் பெருமானார் (ஸல்) அவர்கள் மன்னித்து விடுவார்கள். அல்-குர்ஆனும் இதனையே வற்புறுத்துகின்றது. 'யாராவது உமக்கு அநியாயம் செய்து தொல்லை கொடுத்தால் அதைப் பாராட்டாமல் பொறுத்துக் கொள்ளும், நன்மையும் நற்காரியங்களுமே (மக்கள்) செய்யுமாறு நீர் ஏவும். அறிவில்லாதவர்களிடமிருந்து விட்டு விலகிக்கொள்ளும்' என திருமறை பகர்கின்றது.

பல சந்தர்ப்பங்களில் நாயகத் திருமேனி அவர்கள் தங்களைக் கொலை செய்ய வந்தவர்களையும் மன்னித்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலே இதனை நிரூபிக்கும் பல நிகழ்ச்சிகளை நாம் காண்கிறோம். நாயகத் திருமேனி அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரழி) அவர்களைக் கொன்ற வஹ்ஷியையும் நாயகமவர்கள் மன்னித்துள்ளார்கள்.

தங்களிடம் வரும் விருந்தினர்களையும் நாயகமவர்கள் பெரிதும் உபசரிப்பார்கள். முஸ்லிம் அல்லாதாரும் நபியவர்களிடம் விருந்தினர்களாக வருவதுண்டு. அவர்களையும் இன்முகத்துடன் உபசரித்து வந்தார்கள்.

அன்பு, பரிவு காட்டுவதில் நபியவர்கள் உதாரண புருஷராக விளங்கினார்கள். நாயகம் (ஸல்) அவர்களுக்கும் தோழர்களக்கும் யூதர்கள் பல்வேறு இடையூறுகள் செய்தும் அவர்கள் மீது அன்பு காட்டி, அவர்களில் நோயுற்றோரை நேரில் போய்ச் சந்தித்து ஆறுதல் கூறிய வரலாறு நிறையக் காணக் கிடைக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு காட்டாது எல்லோரையும் ஒரு முகமாகவே நோக்கி வந்தார்கள். எனினும் ஏழைகளிடம் மிகவும் பரிவு காண்பித்து வந்தார்கள்.

ஒரு சமயம் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களை நோக்கி, 'ஆயிஷாவே! உம்முடைய வாசலிலிருந்து ஓர் ஏழையை ஒன்றும் கொடுக்காமல் திருப்பி விடாதீர், ஒரு பேரீச்சம்பழத் துண்டு கொண்டாவது அவரைத் திருப்தி செய்யும்.

ஆயிஷாவே! ஏழைகளிடம் அன்பு வையும். நீர் அவர்களை உமக்கு அருகாமையில் ஆக்கினால் இறைவனும் உம்மை அவனுக்கு அருகாமையில் ஆக்குவான்' என்று சொன்னார்கள்.

பெண் இனத்தைக் கண்ணியப்படுத்தி ஆண்களுக்கு நன்மதிப்பை வழங்கியவர் நாயகம் (ஸல்) அவர்களே. இறுதி ஹஜ்ஜின்போது நிகழ்த்திய பேருரையில், 'உங்கள் மனைவிகள் மீது உங்களுக்கு உரிமைகள் இருப்பது போல் அவர்களுக்கு உங்கள் மீது உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவிகளை அன்புடனும் அமைதியுடனும் நடாத்துங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களின் உரிமைகளைக் கவனியுங்கள்' என்று கூறினார்கள்.

இறைவன் தனது திருமறையாம் அல்-குர்ஆனில் கட்டளையிட்ட பிரகாரமே நபி பெருமானார் (ஸல்) அவர்கள் போதித்தும் வாழ்ந்தும் வந்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் மனித இனத்துக்கு ஒப்பற்ற வழிகாட்டியாக இன்றும் இருந்து வருகிறார்கள். எனவே, நாம் நபிமணி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்தொடர்வோமாக!

மௌலவி எம்.யூ.எம். வாலிஹ் (அல் அஸ்ஹரி)
வெலிகம.  


Add new comment

Or log in with...