கொழும்பில் முடங்கும் குப்பைகளால் பெரும் அவலம்

தலைநகர் கொழும்பிலும் அண்டிய நகர்ப்புறங்களிலும் மீண்டும் குப்பை அகற்றப்படாத பிரச்சினை தலைதூக்கியுள்ளது. கொலன்னாவையில் அன்று நடந்தது போன்றதொரு சம்பவம் மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. கொலன்னாவையில் குப்பை மேடு சரிந்ததால் விபரீதம் ஏற்பட்டது. ஆனால் இன்று முற்றிலும் மாறுபட்ட விடயம் தலையெடுத்துள்ளது. கடந்த ஐந்து தினங்களுக்கும் மேலாக கொழும்பில் குப்பைகள் அகற்றப்படாமலேயே குவிந்து கிடக்கின்றது. பிரதான வீதிகள், குடியிருப்புகள் உள்ள பகுதிகள் எங்கும் மலைபோன்று குப்பை கொட்டப்பட்டிருப்பதை காணமுடிகின்றது.

காணி மறுசீரமைப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான வத்தளை கெரவலப்பிட்டியில் உள்ள குப்பைக் கிடங்கில் இடவசதி இல்லாமை காரணமாக பொறுப்புதாரிகள் அங்கு குப்பை கொட்டுவதற்கு தடைவிதித்துள்ளனர். இதன் காரணமாக ஐந்து தினங்களாக நகர் முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதை காண முடிகிறது. இந்த நிலையால் கொழும்பு நாற்றமெடுத்துள்ளது. நாளாந்தம் கடமைகளுக்கும், தொழில் நடவடிக்கைகளுக்கும் வரும் மக்களும், நகரில் குடியிருக்கும் குடும்பங்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த குப்பை வீதிகள் பூராவும் குவிந்து கிடக்கும் நிலையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக நாட்டில் பரவலாக மழைபெய்யத் தொடங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம் அதிகரித்துக் காணப்படுகின்றது. கடைத்தொகுதிகள், அடுக்கு மாடி வீட்டுத் திட்டங்கள் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். கடைகள், வீடுகளுக்கு முன்பாக வாசல்களிலேயே குப்பை கொட்டப்பட்டிருப்பதால் அன்றாடச் செயற்பாடுகள் கூட முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமான பல வீதிகளில் மக்களால் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற துரித நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மோசமான விளைவுகளை மக்கள் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்ற அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

வத்தளை கெரவலப்பிட்டி குப்பை சேமிக்கும் கிடங்கு அதன் கொள்ளளவுக்கு மேலதிகமாக குப்பைகளை ஏற்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால் மேலதிக குப்பைகளை ஏற்பதால் அதன் சுற்று வட்டத்தில் வாழும் மக்களின் எதிர்ப்புக்கு முகம்கொடுக்க முடியாத நிலை ஏற்படலாமென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாகவே கடந்த ஆறாம் திகதி முதல் குப்பைகளை ஏற்க முடியாதென அறிவித்துள்ளனர்.

மாற்றுக் காணியொன்று தேடிக்கொள்ளும் வரை கொழும்பிலுள்ள குப்பைகள் ஏற்பதை இடைநிறுத்தியுள்ளதால் கொழும்பு மாநகர சபை பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நகர சபை குப்பை அள்ளும் ஊழியர்கள் குப்பை அள்ளுவதை இடைநிறுத்தி தத்தமது அலுவலகங்களில் முடங்கி இருக்கின்றனர்.

கொழும்பில் சனநெரிசல் மிக்க பகுதிகளான புறக்கோட்டை, மருதானை, பஸ் நிலையப் பகுதி, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ், புளூமெண்டல் வீதி, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பயணிக்கும் வீதியோரங்களில் குப்பை மலை போல் குவிக்கப்பட்டிருப்பதையே காணக்கூடியதாக உள்ளது.

கொழும்பிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களை புத்தளம் அறுவாக்காட்டில் அமைக்கப்படும் குப்பைக் கிடங்கில் சேமிப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அங்கும் சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைக்கு பெருநகர அபிவிருத்தி அமைச்சு தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க திட்டத்தை துரிதப்படுத்துவதில் அக்கறை காட்டி வருகின்றார். இவ்வாரத்துக்குள் அறுவாக்காட்டு கிடங்குக்கு குப்பைகளை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை அறிவித்திருக்கின்றது.

கொழும்பிலிருந்து குப்பையை புத்தளம் அறுவாக்காட்டுக்குக் கொண்டுசெல்ல போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிய வருகின்றது. அதற்கு ஏற்றவாறு புகையிரதப் பாதை சீரமைக்கப்படும் வரை பெருந்தெரு வழியாகவே அவை கொண்டுசெல்லப்பட வேண்டும். இது நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை சீரமைப்பு 2020 மார்ச் மாதமளவிலேயே நிறைவடையும் எனவும் அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சவால்களுக்கு கொழும்பு மாநகரசபையும், பெருநகர அபிவிருத்தி அமைச்சும் முகம் கொடுத்துவரும் அதேசமயம் கொழும்பு வாழ் மக்களின் எதிர்ப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையும் காணப்படுகின்றது. அடுத்து வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்த நெருக்கடியான பிரச்சினைக்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அறுவாக்காடு குப்பை கிடங்கு பணிகளை ஆரம்பிக்கத் தயாராக உள்ளது. பொறியியலாளர்கள் கூட அங்கு தங்கியுள்ளனர். குப்பையை அனுப்புவதில்தான் தாமதமேற்பட்டுள்ளது. இது விடயத்தில் அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...