நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ரஞ்சன் ராமநாயக்கவின் ஆட்சேபனை; நீதிமன்று ஏற்பு

சாட்சிகள் பட்டியலில் ஜனாதிபதி உட்பட 41 பேரின் பெயர்

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி முன்வைத்த ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

ரஞ்சன் ராமநாயக்கவின் சார்பாக வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மேற்படி ஆட்சேபனையை முன்வைத்தார்.

1995 ன் 14 ஆம் இலக்க சாட்சி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 7 (1) (D) பிரிவின்படி செயற்பட மனுதாரர் தரப்பு தவறிவிட்டதாக சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டினார். விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு 45 நாட்கள் முன்னதாக அறிக்கை சமர்ப்பிக்க மனுதாரர் தரப்பு தவறிவிட்டதாக சட்டத்தரணி சுமந்திரன் கூறினார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்து வந்த 3 உறுப்பினர்களை கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் சிசிரடி ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித கே. மலல்கொட ஆகியோரைக்கொண்ட குழாம் மேலதிக விசாரணையை எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. அத்துடன் இந்த வழக்கின் சாட்சிகள் அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமுகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

கடந்த வருடம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் நீதித்துறை மற்றும் சட்டத்தரணிகளின் கௌரவத்துக்கு மாசு கற்பிக்கும் வகையில் கருத்துக்களை கூறியதாக வண. மாகஸ்கந்த சுதந்ததேரர் மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான ஆர். சுனில் பெரேரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அவரது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான சாட்சிகளின் பட்டியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 41 பேரின் பெயர்களை உள்ளடக்கியிருந்தார்.


Add new comment

Or log in with...