ரஞ்சனுக்கு எதிரான வழக்கு டிசம்பரில்

 

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான, நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்படும் வழக்கை, எதிர்வரும் டிசம்பரில் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, இன்றையதினம் (05) பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், விஜித மலல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய ஆயிக மூரடங்கிய நீதிபதிகள் குழாமின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இவ்வாறு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கை, ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாமின் முன்னிலையில், எதிர்வரும் டிசம்பர் 10, 11, 12 ஆகிய தினங்களில் விசாரணை செய்யவுள்ளதாக, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் (2017) ஓகஸ்ட் 21 இல் இடம்பெற்ற, ஊடகவியலாளர் மாநாட்டின்போது, நீதிமன்றங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து நீதிமன்றங்களை அவமதிப்பதாக தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையிலேயே குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் என, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்ததாகவும் இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும் தெரிவித்து,  ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேரா மற்றும் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் ஆகியோரினால் உச்ச நீதிமன்றத்தில், இரு வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...