சிறைச்சாலைகளின் கட்டுப்பாடுகள் 42 ஆண்டுகளுக்கு பின் மீளமைப்பு

குழப்பத்தில் ஈடுபட்ட பெண் கைதிகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

எஞ்சிய கைதிகளையும் இடமாற்ற தயங்க மாட்டேன்-

அமைச்சர் தலதா

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்படுத்திய சேதம் தொடர்பில் கைதிகளுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்தது. அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தல், கடமைக்கு இடையூறு செய்தல், அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துதல், சிறைச்சாலைக்குள் குழப்பம் ஏற்படுத்தல் என்பன தொடர்பில் இவர்களுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் விசாரணை இடம்பெறுவதோடு சில பெண் கைதிகள்,சிறை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை பேச்சாளர் துசார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

கடந்த 20 ஆம் திகதி பிற்பகல் சிறைச்சாலைக்குள் குழப்பம் ஏற்படுத்திய பெண் கைதிகள் சிலர் சிறைக்கூண்டுகளின் கதவுகளை உடைத்தும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியும் கலகம் செய்திருந்தனர்.இதனால் 8 சிறை அதிகாரிகள் காயமடைந்தனர்.இதற்கு முன்னரும் பெண் கைதிகள் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்கள் என்றார்.

எஞ்சிய பெண் கைதிகளையும் இடமாற்ற தயங்க மாட்டேன்.

விசேட மேல் நீதிமன்ற திறப்பு விழாவில் பெண் கைதிகளின் போராட்டம் தொடர்பாக நீதி அமைச்சர் தலதா அதுகோரள கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

இவை திடீரென நடப்பவையல்ல. சிறைச்சாலையினுள் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறோம். 42 வருடங்களின் பின்னர் இவ்வாறான முன்னெடுப்பு இடம்பெறுகிறது. சிறைச்சாலைக்குள் இருந்து போதைப் பொருள் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பில் எமக்கு கடுமையான முடிவு எடுக்க வேண்டியுள்ளது. சிறைக்குள் இருந்து கொண்டு சிறு குழுவொன்று செய்யும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கைதிகளும் பொறுப்பு கிடையாது.

பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வெளியில் இருந்து போதைப்பொருட்கள் எடுத்து வரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. வெளியில் இருந்து போதைப்பொருள் வருவதை தடுக்க எமக்கு சில முடிவுகள் எடுக்க நேரிட்டது.

முன்னாள் அதிகாரிகள் தொடர்பில் சில முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது. அவ்வப் போது வந்து செல்லும் சில கைதிகள் தான் கூரை மேல் ஏறி காரணமின்றி கோசம் எழுப்புகின்றனர். இப்பொழுது தான் வழக்கு தாமதம் பற்றி பேசுகிறார்கள்.

எமது அமைச்சின் கீழ் இருக்கும் பகுப்பாய்வு திணைக்கள பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நீதிமன்றம் தான் அவர்களின் பிணை தொடர்பில் முடிவு எடுக்கும். தொடர்ந்தும் இவ்வாறான போதை வர்த்த்கத்தில் ஈடுபடுவதால் பிணை வழங்கி பயனில்லை என கருதி பிணை வழங்கப்படாதுள்ளதோ தெரியாது என்றார்.

முன்னறிவித்தல் இன்றி கைதிகளை மாற்ற முடியுமா என வினவப்பட்டதற்கு பதிலளித்த அமைச்சர், எந்த ஒரு கைதியையும் வேறு சிறைக்கு மாற்ற அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இவ்வாறு கைதிகளை இடமாற்ற இருக்கிறோம்.

இந்த செயற்பாடுகளை யார் என்ன சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை. பிரபலமாவதற்கு அன்றி பிரச்சினைக்கு தீர்வு காணவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தொடர்ந்தும் போதையுடன் தொடர்புள்ளவர்கள் இவ்வாறு நடந்து கொண்டால் எஞ்சியுள்ளவர்களையும் வேறு இடத்துக்கு மாற்றுவோம் என்றார்.

நேற்றைய குழப்பத்தின் போது எத்தனை பேர் மாற்றப்பட்டார்கள் என வினவப்பட்டதற்கு பதிலளித் அமைச்சர்,

இந்த குழுப்பத்திற்கு தலைமை தாங்கிய 52 பேரை சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் வேறு சிறைக்கு மாற்றியுள்ளார் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து கைதிகளை மாற்றுவதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா என வினவப்பட்டதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த குழப்பத்திற்கு வெலிக்கடையில் இருக்கும் போதைப் பொருளுடன் தொடர்புள்ள சிறு குழுதான் காரணம். இதற்குத் தலைமை வகிக்கும் சிறு குழுவே மாற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.(பா)

எம்.எஸ்.பாஹிம் 


Add new comment

Or log in with...