கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம்

கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம்-Karunanidhi's Health Condition Stable

 

95 வயதில் மீண்டு வந்தது அதிசயம்

கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஆச்சரியத்துடன் கவனித்து வருகின்றனர் மருத்துவர்கள். ' 94 வயதில் இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் நேற்று (29) மாலை அவர் மீண்டு வந்தது உண்மையிலேயே அதிசயம்தான்' என்கின்றனர் மருத்துவர்கள்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் கருணாநிதி. கடந்த 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

கடந்த இரண்டு நாள்களாக அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான விவரங்களை, அறிக்கையாக வெளியிட்டு வருகிறது காவேரி மருத்துவமனை நிர்வாகம்.

கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம்-Karunanidhi's Health Condition Stable

இந்நிலையில், நேற்று (29) மாலை 5.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக வெளியான தகவலால் பதற்றத்தில் ஆழ்ந்தனர் தொண்டர்கள். இதனையடுத்து, மருத்துவமனை வாயிலில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். `கருணாநிதி உடல்நிலை குறித்து விரைவில் அறிக்கை வெளியாகும்' எனவும் செய்தி பரவியதால், கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் கவலையில் ஆழ்ந்தனர். ' மீண்டு வா தலைவா...' எனப் பெரும் குரலெடுத்துக் கத்தத் தொடங்கினர். 

நேற்று இரவு 9.50 மணியளவில் மருத்துவமனை செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவருடைய உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது' எனத் தெரிவித்திருந்தார். இருப்பினும், தொண்டர்கள் மத்தியில் பதற்றம் நீடித்ததால், இதுதொடர்பாக பேட்டியளித்த ஆ.ராசா, ' உடல்நிலையில் சிறிது நேரம் தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டது. தற்போது டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக அந்த பின்னடைவு சீர்செய்யப்பட்டு நல்ல நிலையில் இருக்கிறார். எனவே, வதந்திகளை நம்பவேண்டாம். பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். டாக்டர்களின் தீவிர முயற்சியால் அது சீர்செய்யப்பட்டுவிட்டது' என்றார்.

கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம்-Karunanidhi's Health Condition Stable

கருணாநிதியின் உடல்நிலை குறித்து நம்மிடம் பேசிய குடும்ப உறுப்பினர் ஒருவர், `` நேற்று மாலை 5.30 மணியில் இருந்து 7 மணி வரையில் அவரது உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. நாடித் துடிப்பு நாற்பதுக்கும் கீழ் குறைந்துவிட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக 35 வரை சென்றுவிட்டது. இதனால், 'அவரைக் காப்பாற்றுவது கடினம்' என்ற தகவல் சொல்லப்பட்டது. இதனை ஏற்க முடியாமல் கனிமொழி, செல்வி உள்ளிட்டவர்கள் கதறி அழத் தொடங்கிவிட்டனர். செயல் தலைவர் ஸ்டாலின், கலங்கிய கண்களோடு அமர்ந்திருந்தார். சுவாசிப்பதிலும் கருணாநிதிக்குச் சிக்கல் நீடித்தது.

ஆனால், மருத்துவர்கள் கொடுத்த தொடர் சிகிச்சையின் காரணமாக, 8 மணியளவில் கலைஞரின் உடல்நிலையில் ஏற்றமான சூழல் ஏற்பட்டது. மருத்துவர்களே, ' உண்மையிலேயே இது அதிசயமான ஒன்றுதான். இத்தனை வயதில் அவரது உடல் ஒத்துழைப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது' எனக் கூறியுள்ளனர். இதன்பிறகே, அழகிரி உள்ளிட்டவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. இதன்பிறகே, ' நோ ரிஸ்க். தலைவர் ஆல் ரைட்' என்ற மெசேஜை, நட்பு வட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் ஒவ்வொருவராக வீட்டுக்குச் செல்லத் தொடங்கினர்.

நேற்று இரவு 10.30 மணியளவில் கருணாநிதியைச் சுற்றிலும் மருத்துவர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவருக்கு வெண்டிலேசன் வைக்கப்படவில்லை. 'ஏதாவது பின்னடைவு ஏற்படுகிறதா?' என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வீட்டில் இருந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போதே, ' தேவைப்பட்டால் வெண்டிலேசன் வைப்போம்' என முடிவெடுத்திருந்தனர். 

நேற்று மாலை கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக மாறுபட்ட தகவல் வெளியானதையடுத்து, இன்று (30) காலை 6.00 மணியளவில் இரண்டு குழந்தைகளோடு அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார் அழகிரி மகள் அஞ்சுகச் செல்வி. விடிய விடிய ஊடக உலகத்தினரும் தொண்டர்களும் மருத்துவமனை வாயிலில் காத்திருப்பதைக் கவனித்த கனிமொழி, அவர்கள் அனைவருக்கும் தண்ணீர் பாட்டிலை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, கணவர் அரவிந்தனுடன் மருத்துவமனைக்குள் சென்றுவிட்டார். தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் கலைஞர்" என்றார் விரிவாக.

தி.மு.க தலைவர் கருணாநிதியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு, குடும்ப உறவுகளுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது காவேரி மருத்துவமனை. அதில், ' குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் கருணாநிதி இருக்கும் அறைக்குள் இருக்க வேண்டாம். தொடர்ச்சியாகப் பார்வையாளர்கள் வருவது நல்லதல்ல. மிக முக்கியமான நிர்வாகிகள் வந்தால் மட்டும் அவரைச் சந்திக்கலாம். எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

'முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிகழ்ச்சிகள் ரத்து, காவல்துறையின் கெடுபிடிகள், தடியடி, மருத்துவமனை அறிக்கை' என நேற்று மாலை ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பதற்றத்துக்கு ஆட்படுத்திவிட்டது கருணாநிதியின் உடல்நிலை. ' நுரையீரல், சிறுநீரகம் தவிர அவரது உடல் உறுப்புகளில் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தா.பாண்டியன் கூறியதுபோல, ' கருணாநிதியோடு இயற்கை போராடிக் கொண்டிருக்கிறது' என்பதுதான் உண்மை.

இயல்பிலேயே அதிக மன வலிமை உள்ளவர் கருணாநிதி. அது மருத்துவ சிகிச்சையிலும் பிரதிபலிக்கிறது' என்கின்றனர் மருத்துவ உலகினர்.

(ஆ. விஜயானந்த்)

 


Add new comment

Or log in with...