உயிரிழந்த குழந்தைக்கு உயிர் இருப்பதாக கூறி பரபரப்பு

உயிரிழந்த குழந்தைக்கு உயிர்  இருப்பதாக கூறி பரபரப்பு

 

யாழ். சங்குவேலியில் சம்பவம்

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாக உறவினர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நான்கு நாட்களின் பின் நேற்று முன்தினம் (09) குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுக் கடந்த புதன்கிழமை(06) இரவு பெற்றோர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறுநாள் வியாழக்கிழமை சங்குவேலியிலுள்ள குழந்தையின் வீட்டில் குழந்தைக்கு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்நிலையில் நண்பகல் -12 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்திலிருந்து திடீரென மலம், சிறுநீர் என்பன வெளியேறியுள்ளன. அத்துடன் குறித்த குழந்தையின் உடலில் இறந்த பின்னர் ஏற்படுவது போன்று எவ்வித மாற்றமுமின்றிக் காணப்பட்டமை அங்கு நின்ற பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் ஒருவித பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்துக் குழந்தை உயிருடனிருப்பதாகக் கருதப்பட்டு உரும்பிராயிலுள்ள விநாயகர் ஆலயமொன்றிற்கும், உடுவில் பகுதியிலுள்ள தேவாலயமொன்றுக்கும் உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் குறித்த குழந்தை இறக்கவில்லை எனப் பூசகரொருவரால் தெரிவிக்கப்பட்டமையால் குழந்தையின் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இக் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்து மீண்டும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இந்நிலையில் குழந்தையின் இறுதிக்கிரியைகள் இடம்பெறுவதாகக் கேள்விப்பட்டுச் சுயாதீன ஊடகவியலாளரொருவர் குழந்தையின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சென்ற சில நிமிடங்களில் குழந்தையின் வலது கையில் சூடு காணப்படுவதாக அவரது உறவினரான இளம் பெண்ணொருவர் குழந்தையின் கையைத் தொட்டுப் பார்த்து விட்டுத் தெரிவித்தமையால் மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் இவ்வாறு கூறிய சில நிமிடங்களில் குழந்தையின் கையில் நாடித் துடிப்புக் காணப்படுவதாகக் குழந்தையின் தந்தையார் கூறியமையால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் இறுதிக்கிரியை ஏற்பாடுகள் யாவும் நிறுத்தப்பட்டு மரணச் சடங்கிற்கு வந்தவர்கள் மத்தியிலிருந்து குழந்தை தனியாகத் தூக்கிச் செல்லப்பட்டு அருகிலிருந்த வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதன் போது குறித்த குழந்தையின் உடலில் அடிக்கடி நாடித் துடிப்பு உணரப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். அதுமாத்திரமன்றி உடலிலிருந்து வியர்வை, மூக்கிலிருந்து சளி என்பனவும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெளியேறியுள்ளன. இதனையடுத்துக் குழந்தை உயிரிழக்கவில்லை என நம்பிய உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இடைவிடாது வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சங்கானையிலுள்ள குழந்தையின் உறவினர் வீடொன்றில் பாதுகாக்கப்பட்டு நேற்று முன்தினம் காலை மீண்டும் குழந்தையின் சொந்த ஊரான சங்குவேலி கட்டுக்குளப்பிள்ளையார் கோயிலடியிலுள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

குழந்தை கண் விழிக்காத காரணத்தால் இறுதி அஞ்சலி செய்யும் நோக்குடன் குழந்தையைக் கொண்டு சென்ற போதும் குழந்தையின் உறவுக்காரப் பெண்ணொருவர் குழந்தை உயிருடன் இருக்கிறாள் என்பதை அங்குள்ளவர்கள் நம்ப வைப்பதற்காக வேதனை தாளாமல் குழந்தைக்குச் சுடுதண்ணீர் பருக்கியுள்ளார். இதன் போது குழந்தை நான்கு தேக்கரண்டி சுடுதண்ணீர் பருகியமையால் அப்பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியரொருவர் குழந்தையைப் பரிசோதித்து இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோயிலடியில் உயிரிழந்த குழந்தையின் இல்லத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை 09.30 மணியளவில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் கதறி அழ உயிரிழந்த குழந்தையின் உடலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மானிப்பாய் கட்டுடை பிப்பிலி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் இறுதி ஊர்வல நிகழ்வுகளில் குழந்தையின் தாய், தந்தை உட்படப் பெருமளவான ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த நான்கு நாட்களாக குறித்த குழந்தை உயிருடன் தானிருக்கிறது என உறவினர்கள், ஊரவர்கள் எனப் பலரும் நம்பியிருந்த நிலையில் குழந்தை உயிரிழந்து விட்டமையை ஜீரணிக்க முடியாமல் ஊர் இளைஞர்கள் உட்படப் பலரும் கதறி அழுது தமது ஆற்றோணாச் சோகத்தை வெளிப்படுத்தினர்.

செல்வநாயகம் ரவிசாந்

 


Add new comment

Or log in with...