சுற்றுலாத் தலமாக மாறிய அறுகம்பை மீன்பிடிக் கிராமம்

 

அறுகம்பை பிரதேசம் மீன்பிடிக் கிராமங்களை அண்மித்தவாறானதொரு சிறந்த கடற்கரையாகும்.இது இலங்கையின் சிறந்த கடல் அலை விளையாட்டு இடமாகும் தென்கிழக்கு ஆசியாவில் 4 வது சிறந்த இடமாகவும் இனங்காணப்பட்டிருக்கின்றது.உலகின் பத்து சிறந்த கடலலை விளையாட்டு கடற்கரைகளுடன் சேர்ந்து வருகின்றது.

அண்மையிலுள்ள குமண பறவை சரணாலயத்துடன் சேர்ந்துள்ள அகலமான மணலான கடற்கரைகளும் அறுகம்பைக்கு பெறுமதி சேர்க்கின்றன. முகுது மகாவிகாரை,குடும்பிகல கோயில் (புத்தர் கோயில்), சஷ்டர்வெல புத்தர் கோயில்,உகந்​ைத இந்துக் கோயில்,அரும்பொருட் காட்சிசாலை போன்ற கலாசார மரபு வழி விழுமியங்கள் சேர்ந்த இடங்கள் இங்கு உள்ளன. கடற்கரைக்கு மேலதிகமாக வன ஜீவராசிகள்,கலாசார மரபுகள் மற்றும் ஆர்வமுள்ள இயற்கை இடங்கள் என்பன தனித்தன்மையுள்ள சுற்றுலா கவர்ச்சி இடமாக அறுகம்பேயை ஆக்குகின்றன.

இவ்வாறான அம்சங்கள் இப்பிரதேசத்தில் 'கபானா' விடுதிகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தன எனலாம். அவற்றின் வடிவமைப்பிலும் இவற்றின் தாக்கத்தினைக் கண்டு கொள்ள முடிகிறது.இங்கு பல விடுதிகள் அமைந்துள்ளதுடன் இவற்றில் கபானா விடுதிகள் அவற்றின் வடிவமைப்பிலும் கலைவெளிப்பாட்டிலும் சிறப்பாக உள்ளன.

சுனாமி அனர்த்தத்தின் பின்னரே கபானா விடுதிகளின் வளர்ச்சியினை இனம் காணக்கூடியதாக உள்ளது. கபானா விடுதிகள் மிகவும் சாதாரணமான வீட்டினை ஒத்த ஒரு அமைப்பு முறையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.அதாவது ஆரம்ப கால வீடுகள் போன்ற இந்த அமைப்பில் இரண்டு அறைகள் மாத்திரமே உள்ளன.

அறுகம்பையைப் பொறுத்தவரை ஒரு கடற்தொழில் பிரதேசமாகவே ஆரம்பத்தில் இருந்தது.அந்த நேரத்தில் கடலலை சறுக்கல்விளையாட்டில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மாத்திரமே அதிகளவில் வந்தனர்.சுனாமி அனர்த்தத்தின் பின்னரே அறுகம்பை ஒரு தனி சுற்றுலாத்துறை பிரதேசமாக மாறியது.சுனாமியின் தாக்கத்தினால் ஒவ்வொரு குடுபத்திலும் இரண்டு அல்லது மூன்றுக்கும் அதிகமான உறுபினர்கள் உயிரிழந்தனர்.இதனால் எஞ்சிய குடும்ப அங்கத்தவர் கடுமையான மனஅழுத்திற்கும் பாதிப்புக்கும் உள்ளகினர்.

சுனாமியால் துண்டிக்கப்பட்ட அறுகம்பை பாலத்திற்குப் பதிலீடாக இந்திய அரசாங்கத்தினால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.பின்னர் 2006 இல் புதிய பாலம் அமைக்கப்பட்டது.

இதேவேளை கடற்கரையை அண்டிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள் நிலப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து தங்களது குடியிருப்புகளை அமைந்துக் கொண்டனர்.இதன் காரணமாக கடற்கரையை அண்டிய பகுதிகளை வியாபார நோக்கு கொண்டவர்கள் அவர்களிடம் இருந்து வாங்கினர்.இதனால் அறுகம்பை அதிகம் மாற்றத்திற்குள்ளானது.ஆரம்பத்தில் அனைத்து அயலவர்களும் மீனவர்களாவே இருந்தனர்.சுனாமியின் பின்னரே அனைத்து பிரதேசமும் உல்லாச விடுதிகளாக மாறின. அலைச்சறுக்கல் விளையாட்டாளர்கள் அறுகம்பையில் வந்து இரண்டு,மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக தங்கிச் செல்பவர்களாக இருந்தனர்.இதனால் இவர்கள் அதிகம் பணத்தை சிக்கனமாக செலவு செய்பவர்களாக இருந்தனர்.ஆகையால் இதன் விளைவாகவே கபானா விடுதிகளின் தோற்றம் ஆரம்பமாகியது.வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகமாக குடிசை, கபானா தங்குமிடங்களையே விரும்பினர்.

கபானா வடிவமைப்புக்களுக்கு மிகக் குறைந்தளவிலான பணமே தேவைப்பட்டதன் காரணமாக அறுகம்பையில் கபானா அமைப்புக்கள் அதிகளவில் தோற்றம் பெறத் தொடங்கின. அதில் அப்பிரதேச மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரம் என்பன வடிவமைப்புக்களுள் ஊடுருவி தோற்றம் பெற்றுள்ளதனைக் காணலாம்.

இம்மக்களின் பாவனைப் பொருட்கள், வீடு கட்டும் முறை மற்றும் பாரம்பரிய அலங்காரங்களைக் கொண்டு கபானா விடுதிகள் வடிவமைக்கப்படுவதன் மூலம் வெளிநாட்டவர்களை அழைக்கின்றது.

அறுகம்பையில் அமைந்துள்ள ஒரு கபானா விடுதியானது அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டதும் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததுமாகும். இதன் உரிமையாளரின் பெயர் கிருஷ்ணராஜன். இவரை எல்லோரும் ரங்கா என்று அழைப்பர். இவர் தனது விடுதியினை ஆரம்பத்தில் மிகவும் சிறிதாக ஆரம்பித்தார். ஒரு வர்த்தக நோக்குடன்தான் இந்தத் தொழிலை ஆரம்பிக்காது தனது பொழுதுபோக்காகவும் வாழ்க்கை நடைமுறையாகவும் முன்னெடுத்துக் கொண்டு சென்றதே வெற்றிக்குக் காரணம் என்று கூறினார்.

விடுதி அறைகளில் சுவர்களில் இந்துக்களின் பாரம்பரிய அலங்காரம் வரையப்பட்டுள்ளது. இது அவர்களின் கலாசாரத்தினை வெளிப்டுத்துவதாக உள்ளது. மரவீடுகள் இயற்கையான மரங்களின் மேலும் சில செயற்கையான நடப்பட்ட மரக்கால்களின் மேலும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மரவீடுகள் உயரமாக அமைக்கப்படுவதால் படிகள் ஏறிச்செல்வதற்காக நிர்மாணிக்கப்படுவது வழக்கமாகும். இவ்விடுதியினுடைய உட்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரு மர வீட்டினுடைய வடிவமைப்பினைப் பார்க்கும் போது அதனுடைய படிவரிசையின் கைப்பிடிக்காக இரு பக்கங்களிலும் மரத்தோணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இந்த வடிவமைப்பானது மிகவும் உன்னதமாகவும் சிறப்பாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அலங்காரத்துக்காக வைக்கப்பட்டுள்ள செடிகள் கூட ஒரு கலைரசனையுடையதாகவும் மிகவும் எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதிகளவில் மரங்கள் உயர்ந்து வளர்ந்த இந்த விடுதியில் இயற்கைச் சூழலானது வாடிக்கையாளர்களுக்கு மனதுக்கு இதமாகவும் ஓய்வு எடுப்பதற்கு சிறந்த இடமாகவும் அமைந்துள்ளது. கொடி வகையினைச் சேர்ந்த படர்ந்து செல்லும் ஒரு வகைத்தாவரமானது உயர்ந்த விடுதிகள் பந்தல்கள் என்று எங்கும் பரவலாக மேலே படர்ந்து செல்வது மேலும் மெருகூட்டும் வண்ணம் அமைந்துள்ளது.

அலங்காரத்துக்காக விடுதியில் பல இடங்களில் பாரம்பரிய கலைப்பொருட்களும் மேலும் ஏனைய விடயங்களும் அதிக அளவில் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இதில் மாட்டு வண்டி சில்லுகள் அதிகம் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சாதாரணமாக ஆங்காங்கே உள்ள இடைவெளிகளில் மாட்டு வண்டில் சில்லுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்பானதும் கவர்ச்சியானதுமான ஒரு வடிவமைப்பு உள்ளது.

ஆரம்பகால மக்கள் உபயோகம் செய்த பாவனைப் பொருட்கள் கூட இங்கு அலங்காரப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்கலாம். அரிசி போன்ற ஏனைய தானிய வகைகள் மற்றும் அரைக்கும் பொருட்கள் அரைப்பதற்காக ஆட்டுக்கல் எனப்படும் கருங்கல்லினால் ஆன இயந்திரம் தற்காலத்தில் நவீனத்தின் வளர்ச்சி காரணமாக இல்லாமல் போயுள்ள நிலையில் அந்தக்காலத்து மக்களின் வாழ்க்கை முறையினை நினைவுபடுத்தும் வண்ணமும் வெளிநாட்டவர்களுக்கு இவற்றின் மூலம் கவர்ச்சித்தன்மையை ஏற்படுத்தவும் அலங்காரப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. தற்காலத்து எமது நாட்டு தலைமுறையினர்களுக்குக் கூட இது ஒரு புதிய விடயமாகவே அமைந்துள்ளது.

உடைந்துபோன தோணி ஒன்றினை சுவரில் இறாக்கை போன்று பொருத்தி அதில் பாவனைக்கு உதவாத வீணை, கிட்டார், முகமூடி, மற்றும் மயிலிறகு போன்ற பொருட்களை வைத்து அதனை ஒரு அலங்கார வடிவமைப்பாக உருவாக்கியுள்ளனர்.

விடுதியின் வெளிப்புறத்தில் ஒரு மரக்கம்பத்தின் மேல் தொங்கும் அலங்கார வடிவமைப்பு ஒன்று காணப்படுகின்றது. இந்த அமைப்பானது மீன்களினுடைய செதில்களினால் ஆக்கப்பட்டுள்ளது. இது பாரிய அளவிலான பெரிய மீன்களில் இருந்து கிடைக்கப்பெற்ற செதில்களினால் ஆக்கப்பட்டுள்ளது. மீன்களினுடைய தட்டையான என்பு ஒன்றில் துளைகள் இடப்பட்டு அதில் இருந்து செதில்கள் பல தொங்கும் வகையில் ஆக்கப்பட்டுள்ளன. செதில்கள் இயற்கையாகவே வட்ட வடிவைக் கொண்ட மீனில் இருந்து பெறப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு அழகாகவும் வர்ணங்கள் எதுவும் பயன்படுத்தப்படாது இயற்பண்பு தெரியும் வண்ணமும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பிரதேச மக்களின் தொழிலான மீன்பிடியை அடையாளப்படுத்துவதாக இந்த வடிவமைப்பு அமைகின்றது.

குத்துவிளக்கு சிங்கள மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்தில் மங்களகரமான நிகழ்வுகளின் போது ஆரம்பித்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருளாகும். இந்த விடுதியில் வாயில் பகுதியில் இந்த குத்துவிளக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம் பெறுகின்ற விஷேட நிகழ்வுகளின் போது இந்த விளக்கு ஏற்றப்படுகின்றது. இந்த செயற்பாட்டின் மூலம் வெளிநாட்டவர்களுக்கு எமது பாரம்பரியம் வெளிக்காட்டப்பட்டு அவர்களுக்கு அதில் ஒரு ஈர்ப்பும் விருப்பமும் ஏற்பட இது வழிவகுக்கின்றது.

இந்த விடுதியில் உட்புற அலங்காரங்கள் எனும் வகையில் மரச்செதுக்கல்கள் சில இடங்களிலும் முகமூடிகள், அலங்கார சட்டங்கள் என்பனவும் காணப்படுகின்றன.

கூரை அமைப்புக்களைப் பொறுத்தவரை இங்கு சாதாரணமாகவே ஓடுகளாலும், வைக்கோலினாலும் வேயப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. இதில் தனியாக அமைந்த ஒரு கூரையானது இரண்டு தென்னை மரங்களை இணைத்து நடுவில் தோணி ஒன்றினை தலைகீழாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் வித்தியாசமானதாகவும், கற்பனையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது. துண்டுகளாக ஓலைகள் போடப்பட்டு அதனுடைய ஓரங்களில் பல நிறங்களினாலான துணியினால் அலங்காரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின் விளக்குகள் ஒரு இருப்பிடத்திற்கு அத்தியவசியமான அம்சமாகும். இந்த விடுதியினுடைய மின் விளக்குகள் சற்று வித்தியாசமாகவும் பாரம்பரியத்தினை மறு கண்டுபிடிப்புச் செய்வதாகவும் அமைந்துள்ளன. மட்கூசாவிலான விளக்குகள் பாரம்பரிய மக்களின் மட்பாண்டக் கைத்தொழிலைக் காட்டுவதாக உள்ளது. புராதன காலம் தொட்டே இலங்கை மட்பாண்டக் கைத்தொழில் சிறந்து விளங்குகின்றது.

குளியலறை மற்றும் கழிவறைகள் ஓலைகளினால் வேயப்பட்ட புராதன மக்களின் குடிசைகளை காட்டும் விதத்தில் சாதாரணமாக அமைந்துள்ளன.இருந்தாலும் அதனுள் நவீன குளியலறை மற்றும் கழிவறை சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விடுதியில் பயன்படுத்தப்படுகின்ற தளபாடங்களை எடுத்துக் கொண்டால் அவை மரத்திலானவையாகவே அமைந்துள்ளன.

இந்த விடுதியினுடைய வரவேற்பிடமானது மிகவும் சாதாரணமாக ஒரு மர மேசை போடப்பட்டு அதில் கணக்குகளை எழுத ஒரு புத்தகமும் ஒருவர் அதில் இருப்பதற்கு ஒரு கதிரையும் போடப்பட்டுள்ளது.

இந்த விடுதியினுடைய பாரம்பரிய வடிவமைப்புக்களும் கலை வெளிப்பாடுகளும் இந்து மதத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளன. இந்துக்களின் பாரம்பரிய வடிவங்கள் மற்றும் அலங்காரங்கள் மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட்டும் உள்ளன. கீழைத்தேய அம்சங்கள் மேலைத்தேயர்களுக்கு ஏற்றாற் போல வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.

 

அப்துல் அஸீஸ் முஹம்மட் நாசிப்
BFA(Hons)
தற்காலிக விரிவுரையாளர்,
கிழக்குப் பல்கலைக்கழகம் 


Add new comment

Or log in with...