பிக் போஸ் 63 ஆம் நாள்: வெளியேறினார் ரைஷா; விடைபெற்றவர்கள் வருகை

Part 01

Part 02

Part 03

Part 04

Part 05

கமலின் தலைமையில் நீதிமன்றக் காட்சிகள் முடிந்த பிறகு பிக்பாஸ் வீட்டில் என்ன நிகழ்ந்தது என்று காட்டப்பட்டது. 

ஆரவ் இரண்டு விஷயங்களுக்காக மிக கோபமாக இருக்கிறார். ஓவியா விஷயம் மற்றும் சிநேகனிடம் மன்னிப்பு கேட்ட விஷயம். அவருடைய பிம்பம் தொடர்ந்து தவறாக சித்தரிக்கப்படுகிறதோ என்கிற கவலையும் பதற்றமும் அவரைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. 

Bigg Boss

நேற்றைய கட்டுரையில் சொல்லப்பட்டதுபோல ஓவியா விஷயத்தில் ஆரவ்வை மறுபடி மறுபடி பஞ்சாயத்திற்கு இழுப்பது அதீதமானது. எனவே அதற்காக ஆரவ் கோபப்படுவது நியாயமே. இதில் இன்னொருவரும் (ஓவியா) சம்பந்தப்பட்டிருப்பதால் இதை கிளறிக் கொண்டேயிருப்பது இருவரையுமே பாதிக்கும். பிக்பாஸிற்கும் நமக்கும் மெல்ல அவல் வேண்டுமென்பதற்காக ஒருவரை தொடர்ந்து உளைச்சலாக்குவது அநீதி.

இது பற்றி புலம்பிக் கொண்டிருந்த ஆரவ்வை கணேஷ் ஆற்றுப்படுத்தினார். என்றாலும் ஆரவ்வின் கோபம் அடங்கவில்லை. ‘என்னை தொடர்ந்து அவமானப்படுத்துவது முறையல்ல, இங்கிருந்து வெளியேறவும் தயாராக இருக்கிறேன்’ என்று பிக்பாஸிடம் நேரடியாக கோபப்பட்டார். கொலையாளி task-ல் பிக்பாஸிற்கு மிக விசுவாசியாக இரண்டு நாட்கள் சிரமப்பட்டிருந்தும் இப்படி நடக்கிறதே என்று அவர் ஆதங்கப்பட்டிருக்கலாம். 

அடுத்த விஷயம் சிநேகனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு காயத்ரி மற்றும் ரைசாவிடம் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்று சொன்னது. இது ஒளிபரப்பாகும் போதே பலரும் கவனித்த விஷயம்தான். ஆரவ் இதுபற்றி தொடர்ந்து புகார் சொல்லிக் கொண்டிருந்ததால் ‘குறும்படம்’ மூலம் அவருடைய பிழையை நிரூபித்தார் கமல். 

இந்த விஷயத்தில் ஆரவ் மனதறிந்து பொய் சொன்னார் என்று சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். இது எல்லோருக்குமே நடக்கும். நாம் ஒருவர் மீது கோபமாக இருக்கும் போது அவர் சமாதானத்திற்கு அழைக்கும் போது நாகரிகத்திற்காகவும் சம்பிரதாயத்திற்காகவும் அவரது மன்னிப்பை ஏற்போம். ஆனால் மனதிற்குள் அந்த மன்னிப்பு உண்மையாக நிகழாது. 

Bigg Boss

எனவே, இந்தச் சம்பவத்தை மற்றவர்களிடம் பகிரும்போது தம்மை உயர்வாகவும் எதிர்தரப்பை ‘பணிந்து விட்டார்’ என்பது போலவும் சொல்லிக் கொள்வோம். தாம் சொன்ன மன்னிப்பு உண்மையானதல்ல என்பதால் மனதில் அது பதிந்திருக்காது. மட்டுமல்ல, பெண்களின் முன்னால் பேசும் போது ஆண்களின் தோரணையே வேறு விதமாக மாறி விடும். பெண்களின் எதிரில் அவமானப்பட ஆண்கள் விரும்புவதில்லை. காயத்ரி மற்றும் ரைசா எதிரில் தாம் பதிலுக்கு மன்னிப்பு கேட்ட விஷயத்தை ஆரவ் மறைக்க நினைத்திருக்கலாம். 

இது சிறிய விஷயம்தான். முதலில் இதற்கு விளக்கமளிக்க நினைத்தார் ஆரவ். ஓவியா விஷயத்தில் சிநேகன் தன்னைக் குறித்து விதம் விதமாக சொல்லிக் கொண்டிருக்கும் கோபம் ஆரவ்விற்கு இருக்கிறது. எனவேதான் மனதார பதில் மன்னிப்பை ஆரவ்வால் சொல்ல முடியவில்லை என்று யூகிக்கிறேன்.

ஆனால் ஆரவ் அளிக்க முற்பட்ட விளக்கத்தை கமல் ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட விஷயம் தெளிவுப்படுத்தப்பட்ட விட்டது என்றதோடு இந்தப் பஞ்சாயத்தை முடிக்க நினைத்தார். இல்லையெனில் அது சங்கிலித் தொடராக வெவ்வேறு புகார்களுக்கு இட்டுச் செல்லும். 

தன்னைப் பற்றி ஒருமையில் ஆரவ் சரமாரியாக திட்டிக் கொண்டிருந்ததை சிநேகன் சற்று திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால்தான் ஆரவ் மறுபடியும் வந்து மன்னிப்பு கேட்ட போதும் சலனமின்றி இருந்தார் போல. 

**

கமலின் நுழைவிற்கு முன்னால் காட்டப்பட்ட காட்சிகளில் சுஜா ஒருபுறம் தனிமையில் புலம்பிக் கொண்டிருந்தார். ‘என் வலியைப் பற்றி எவரிடமும் தெரிவிக்கவில்லை. பின்பு ஏன் நான் நடிக்கிறேன்’ என்று சொல்கிறார்கள் என்பது அவருடைய ஆதங்கம். இன்னொரு புறம் ‘அவர் நடிக்கிறாரோ’ என்கிற சந்தேகம் காஜலுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘அவளைப் பார்த்தா  கோவமாவும் இருக்கு, பாவமாவும் இருக்கு. அவளோட சொந்த விஷயங்களைக் கிளறிட்டோமோன்னு’ என்று வருந்துகிறார். 

Bigg Boss

கமல் நுழைந்ததும் நட்பின் உன்னதங்களைப் பற்றி அற்புதமாக பேசினார். சசிகுமார் திரைப்படங்களில் கூட நட்பைப் பற்றி இத்தனை பேசியிருக்க மாட்டார்கள். ‘குடும்பம், அரசு என்று அனைத்து நிறுவனங்களிலும் இருப்பது துரோகம். அவற்றை இணைக்கும் பசையாக இருப்பது நட்பு. ரத்த உறவுகள் பொதுவாக சொத்து உறவுகளாக இருக்கின்றன. சுத்த உறவென்பது நட்புதான் என்று அடுக்கு மொழியில் கலக்கினார். 

‘நேத்து கோர்ட்ல நிறைய விஷயம் பேசினோம். இது விஷயமா சொல்ல ஏதாவது இருக்கா? அதாவது appeal செய்ய விரும்பறீங்களா? என்றார் கமல். முன்பு கோபமாக கத்திக் கொண்டிருந்த ஆரவ், உடனடியாக எதிர்வினை செய்வார் என்று பார்த்தால்  என்ன காரணத்தினாலோ அமைதியாக இருந்தார்.

ஆச்சர்யகரமாக சுஜா ‘முறையீட்டு’ மனுவை முதலில் கொடுத்தார். ‘நான் ஓவியாவை நகல் எடுக்கறேன்னு சொல்லிட்டே இருக்காங்க. நான் நானாத்தான் இருக்கேன். என் நண்பர்களுக்குத் தெரியும். யாரும் இங்க என் கிட்ட சரியா பேசமாட்றாங்க. கண்ணாடி பார்த்து பேசறது எப்பவுமே என் பழக்கம்’ என்றார். 

‘கண்ணாடி உங்கள் பிம்பத்தை மட்டுமே காட்டும். நண்பர்கள், எதிரிகளை கண்ணாடிகளாக வைத்துக் கொள்ளுங்கள்’  என்று சுஜாவின் பிரச்சினையை சரியாக சுட்டிக் காட்டினார் கமல்.

சுஜா தந்த துணிச்சலில், அதுவரை சொல்லலாமா வேண்டாமா என்று துடித்துக் கொண்டிருந்த ஆரவ் கைதூக்கினார். கமல் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ‘சொல்லுங்க. ஆரவ். உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்’

“ஓவியாவிற்கு இயன்ற அளவிற்கு ஆதரவா இருந்திருக்கேன். கடைசி சமயங்கள்ல ஏற்பட்ட சில குழப்பங்களால விலகி நிற்க வேண்டியதா இருந்தது. அவங்க வெளிய போறதுக்கு ஒருவகையில் நானும் காரணமோ என்கிற குற்றவுணர்ச்சி இருக்கு. அடுத்த விஷயம். சிநேகன் கிட்ட மன்னிப்பு கேட்டேன். ஆனால் இந்தப் பக்கம் வந்து நான் கேட்கலைன்னு சொல்லலை.’ என்றார் பிடிவாதமாக.

Bigg Boss

குறும்படம் காண்பிக்கப்பட்டது. ஏற்கெனவே குறிப்பிட்ட படி இது நினைவுப்பிசகு. காட்சிப்பிழை மாதிரி நினைவுப்பிழை. மனம் நிகழ்த்தும் விளையாட்டு. எனவே இந்த சந்தேகத்தின் பலனை ஆரவ்விற்குத் தரலாம்.

**

வெறும் கசப்புகளையே தர விரும்பாமல் இனிப்பையும் ஊட்ட விரும்பினார் கமல். ‘யார் கொலையாளி’ task-ல் ஆரவ், ஹரீஷ், வையாபுரி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதற்காக பாராட்டு தெரிவித்தார். பார்வையாளர்களையும் கைத்தட்டி ஊக்குவிக்கச் சொன்னார். ‘கைத்தட்டல்தான் ஒரு கலைஞனுக்கு அதிக சந்தோஷத்தை தரும்’ என்று அவர் சொன்னது பரிசுத்தமான உண்மை. 

 

வெளியேற்றப் படலம் இம்முறை வித்தியாசமாக நிகழ்ந்தது. பட்டியலில் இருந்தவர்களை தயாராக இருக்கச் சொல்லி விட்டு ரைசாவை மட்டும் வாக்குமூல அறைக்கு அழைத்தார். நுட்பக் கோளாறு காரணமாக கமல் பேசுவது ரைசாவிற்கு கேட்காததால் அதைப் பற்றி அவர் சைகையில் சொல்ல பதிலுக்கு கமலும் அப்படியே சைகையில் குறும்பு செய்தது ஜாலி கலாட்டா.

‘வெளியே வாம்மா மின்னல்’ என்று அழைக்கும் போதுதான்தான் வெளியேற்றப்பட்ட விஷயம் ரைசாவிற்கு உறைத்தது. இதர போட்டியாளர்களிடம் அவர் நேரடியாக விடைபெற முடியாதது ஒரு துரதிர்ஷ்டம்தான். 

ரைசா வந்து அமர்ந்ததும் ‘அந்த நாற்காலியை எடுத்துட்டு வாங்கப்பா’ என்றார் கமல். வேறு எவரோ வந்து அமரப் போகிறார்கள் என்று பார்த்தால் படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு நாய் பொம்மையை ICU-ல் இருந்து தூக்கி வந்தார்கள். இந்தக் குறும்பு எவருடைய யோசனை என்று தெரியவில்லை. ரகளையான கலாட்டா. ரைசா ரசித்து சிரித்தார்.

‘உங்களுக்காக குரைச்சு குரைச்சு.. இந்த நாய் படுத்த படுக்கையா ஆயிடுச்சு” என்று ரைசா பெரும்பாலும் தூங்கிக் கொண்டிருந்ததை கிண்டலாக இடித்துரைத்தார் கமல்.

Bigg Boss

‘பிக்பாஸ் வீட்டில் இருந்ததின் மூலம் கற்றுக்கொண்ட அனுபவம் என்ன?’ என்ற கேள்விக்கு ரைசா அளித்த பதில் முக்கியமானது. ‘வெளியே இருந்த போது நிறைய பொருட்களை வீணாக்குவேன். ஆனால் வீட்டின் உள்ளே, இருக்கிற பொருட்களை வைத்துத்தான் சமாளிக்க வேண்டும் என்கிற நெருக்கடியினால் சிக்கனமாகவும் கவனமாகவும் பொருட்களை கையாள்வேன்’ என்பதில் நமக்கு பாடம் உள்ளது. 

‘இந்த வீட்டில் அதிகார தலைமையாக யார் இருக்கிறார்கள்?’ என்கிற கேள்விக்கு ‘சிநேகன்’ என்று பதிலளித்தார். அதற்கு முன்னால் ‘சக்தி’. இந்தப் போட்டியில் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ள போட்டியாளராக கணேஷை யூகித்தது ரைசாவின் சரியான தேர்வு. ‘ஜூலி முன்னே fake-ஆ இருந்தாங்க. இப்ப சுஜா’.  ஒப்பனையில் அதிக நேரத்தை செலவிடும் ரைசாவின் பழக்கத்தை சுட்டிக்காட்டிய கமல் ‘இயல்பான அழகுதான் உண்மையான அழகு’ என்றார். 

‘உள்ளே போன பொண்ணுக்கு என்ன ஆச்சோ?’ என்று இதர போட்டியாளர்கள் உண்மையாகவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘கட்டி வெச்சு உதைக்கறாங்களோ’ என்று அந்த நிலையிலும் தன் குறும்பை வெளிப்படுத்தினார் வையாபுரி.

அவர்களுக்கு வியப்பளிக்கும் வகையில் ரைசாவின் வெளியேற்ற அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது. அனைவரும் முதலில் திகைப்படைந்தார்கள். பிறகு நெகிழ்வுடன் விடைதந்தார்கள். ‘என்னை prank செஞ்சதுக்கு இப்பவாவது வருந்தறீங்களா?’ என்று தம் கணக்கை முடித்துக் கொண்டார் சுஜா. ‘என்னாலதான் நீ வெளில போற’ என்று காஜல் சம்பந்தமில்லாமல் கலங்கினார்.

‘நாயகன்’ திரைப்படத்தில் கமல் சரண்யாவை திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியில் இருக்கும் போது கூட இருக்கும் ஜனகராஜூம் தொடர்பில்லாமல் கமலின் தோளில் சாய்ந்து நெகிழ்வார். ‘என்னடா’ என்கிற மாதிரி கமல் பார்ப்பார். அவ்வாறே ரைசாவும் உணர்ந்தார் போலிருக்கிறது. ‘இவங்க வேற டிராக்ல போயிட்டிருக்காங்க’ என்றவர் ‘ஃபீல் பண்ணாதீங்க. It’s a game. ரொம்ப சீரியஸா இருக்காங்க. ஜாலியா விளையாடுங்க’ என்று உபதேசம் தந்தார்.

ரைசா பற்றிய குறும்படம் காண்பிக்கப்பட்டது. உண்மையிலேயே அதைப் பார்த்து நெகிழ்ந்து போனார் ரைசா. பார்வையாளர்களும் ரைசாவின் பிரிவை அழுத்தமாக உணரும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது அந்தக் காணொளி. குறிப்பாக ரைசா தலைவியாக இருந்த சமயத்தில் ‘பகல்ல தூங்கக்கூடாது’ என்று மற்றவர்களை எழுப்பிய காட்சி காண்பிக்கப்பட்ட உடனேயே ‘ரைசா’ விதம் விதமாக தூங்கும் காட்சிகளை சேர்த்தது பயங்கர குறும்பு. விழுந்து விழுந்து சிரித்தார் ரைசா. 

**

ரைசாவின் வெளியேற்றப் படலத்தையொட்டி அவருடைய இதுவரையான சித்திரத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போது அவர் யாரென்றெ பலருக்குத் தெரியவில்லை. அவர் பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்திருந்த விஷயமெல்லாம் பிறகுதான் தோண்டி பார்க்கப்பட்டது. ‘வேலையில்லா பட்டதாரி 2’ல் அவர் தோன்றிய முதல் காட்சியில் ‘ரைசா’ என்று பார்வையாளர்கள் கத்தி மகிழ்ந்தார்கள். 

Bigg Boss

ஆக… மாடல் என்கிற பொதுவான அடையாளத்தைத்தாண்டி ரைசா விரும்பிய படி அவருக்கான தனி அடையாளத்தை பெற்று விட்டார். பிக்பாஸ் வீட்டின் ஆரம்பக் காலக்கட்டத்தில் ரைசா பெரும்பாலும் தலையாட்டி பொம்மையாகவே இருந்தார். எவர் தரப்பிற்கும் ஆதரவாக இல்லாமல் பாதுகாப்பாக இந்த விளையாட்டை விளையாடினார். அதனாலேயே வெளியேற்றப்படும் பட்டியலில் அதிகம் இடம்பிடிக்காமல் இருந்தார். 

பிறகு நடந்து மாற்றங்களினால் சர்ச்சைகள் அவரை மெல்ல உள்ளிழுத்துக் கொண்டது. குறிப்பாக ஓவியாவின் வெளியேற்றம் அவரை மிகவும் பாதித்தது. இனிமேலும் தலையாட்டி பொம்மையாக இல்லாமல் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டும் என்கிற மாற்றத்திற்கு வந்தார். இதனால் காயத்ரியுடன் மோதல் ஏற்பட்டது. தலைவி பொறுப்பை அவர் ஏற்றிருந்ததும் ஒரு காரணம். தலைவியாக இருந்த சமயத்தில் பொறுப்பாக செயல்பட்டார். 

தலைவி பதவி போனதும் மறுபடியும் சோம்பலுக்குள் விழுந்தார். காயத்ரி உடனான சர்ச்சைகள் அவரை பாதித்தன. பிறகு சிநேகனுடன் கருத்து வேறுபாடு. பல சமயங்களில் பிக்பாஸூடன் சண்டை போட்டார். குறிப்பாக பகல் நேரங்களில் தூங்குவதற்காக.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரைசா ஒரு முக்கியமான போட்டியாளராக இதுவரை இருந்திருக்கிறார். ஹரீஷ் குறிப்பிட்டதுபடி ரைசாவின் அந்த பிரத்யேகமான தோரணைகளை நாம் இனி காண முடியாது என்பது சோகம்தான். துவக்கத்தில் எரிச்சலையூட்டிய அந்த தோரணைகள் பிறகு பிடித்துப் போக ஆரம்பித்து விட்டது. ‘அடப்போங்கய்யா’.

Good bye ரைசா.

**

அடுத்து ஒரு கலந்துரையாடல். இனிய ஆச்சர்யம் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற தாரக மந்திரத்தை நிரூபித்து விட்டார் பிக்பாஸ்.

Bigg Boss

ஜூலி, ஆரத்தி, சக்தி, காயத்ரி, பரணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். பரணிக்கு பிரத்யேகமான வரவேற்பை தந்தனர் பார்வையாளர்கள். ‘உங்க மூலமா உலக வெளிச்சம் என் மேலயும் பட்டு விட்டது சார்’ என்று கமலை நோக்கி நெகிழந்தார் பரணி.

‘விருமாண்டி கமலாக உள்ளே வந்த நான் பாபநாசம் கமல் போல என்னை உணர்ந்து வெளியே சென்றேன்’ என்று கமல் நடித்த சினிமா பாத்திரங்களையே மேற்கோள் காட்டி நெகிழ்ந்தார் சக்தி. ‘இனிமே கோபத்தைக் குறைச்சுப்பேன்”

புற்றுநோய் மையத்திற்காக தன் தலைமுடியை ஆரத்தி தியாகம் செய்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ‘தலைமுடிதான் அழகு என நினைக்காமல் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே வாருங்கள்’ என்ற ஆரத்தியின் முன்னுதாரணச் செயல் சிறப்பு. “நான் வீட்டுக்குப் போனவுடனே அப்பாதான் அழுதார். ‘நான் ஏதாவது தப்பா பேசிட்டனான்னு கேட்டேன். ‘நீ சொன்ன விஷயங்கள் தப்பில்லம்மா. ஆனா சொன்ன விதம்தான் தப்பு’ என்று சுட்டிக்காட்டினார். இனி என்னை மாற்றிக் கொள்ள முயல்வேன்’ என்றார் ஆரத்தி. தலைக்கனம் இருக்கக்கூடாது என்பதற்காக முடியை இழந்து விட்டேன் என்று தன் மொட்டைத்தலையை காட்டினார். 

Bigg Boss

முகம் தெரியாது என்கிற செளகரியத்தில் சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக திட்டுகிறவர்களை கமல் கண்டித்தார். ‘விமர்சனங்கள் தேவை. ஆனால் அவற்றில் தரம் குறையக்கூடாது’ என்பதை மீண்டும் நினைவுப்படுத்தினார். 

காயத்ரியிடம் அதிக மாற்றம் இருப்பது போல் தெரியவில்லை. ‘இனிமெல் என்னை எவராவது தூண்டினால், கோபப்படுத்தினால் எதிர்வினையாற்றாமல் புன்னகைக்க முயல்வேன்’ என்று அவர் சொன்னது சம்பிதாயமாகத் தெரிந்தது. இந்த நிகழ்ச்சியினால் உண்மையிலேயே அவர் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டிருந்தால் மகிழ்ச்சி. 

‘எங்க வீட்டுப் பிள்ளையா நெனச்சுதாம்மா உன்னை அனுப்பினோம். இப்படி பொய் சொல்லிட்டியே’ என்று மக்கள் நினைத்தார்கள் – தாம் செய்த தவறுகளைப் பற்றி ஜூலி சொன்ன விதம் இவ்வாறு இருந்தது. 

பரணிக்கும் ஓவியாவிற்கும் தான் இழைத்த சறுக்கல்களைப் பற்றி மனப்பூர்வமான முறையில் மன்னிப்பு தெரிவித்தார் ஜூலி. ஓவியாவிடமும் தொலைபேசியில் மன்னிப்பு கேட்டிருந்ததாக சொல்லியது சிறப்பு. 

“இவர்கள் சாதாரணமானவர்கள். இவர்கள் செய்தது சாதாரணமான எளிய பிழைகள். இவர்களை இப்படி போட்டு வாங்குகிறீர்கள். இதைவிடவும் பெரிய அயோக்கியத்தனங்கள் செய்யும் அரசியல்வாதிகளை விட்டு வைத்திருக்கிறீர்களே” என்று கமல் வெடித்தார். நியாயமான கோபம். 

‘இந்தக் கோபங்களை அப்படியே பாதுகாப்பாக வைத்திருங்கள். அதைச் சரியான முறையில் உபயோகிக்க வேண்டிய காலம் ஒன்று வரும். மேடை கிடைத்து விட்டது என்பதற்காக அறிவுரை சொல்லவில்லை. ஆம். இது அறிவுரைதான். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள். மன்னியுங்கள். அவசியமான இடத்தில் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள்’ என்று கமல் பொங்கியது நியாயமானதொன்று. 

Bigg Boss

**
மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் மறுபடி யார் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வீர்கள்? என்ற கேள்விக்கு காயத்ரி உடனேயே மறுத்து விட்டார். ‘சில பேரை trigger பண்றதுக்கு வேணா போவேன்’ என்று சக்தி குழப்பமாக பதிலளித்தார்.  பரணியின் சில தனிப்பட்ட பிரச்சினைகளால் இப்போது அவர் செல்ல முடியாத சூழலில் இருக்கிறார். அது சரியான பிறகு வருவதற்கு தயாராக இருக்கிறார். 

‘இது நாங்க உருவாக்கின வீடு. இப்ப யார் யாரோ கிரகப்பிரவேசம் நடத்திட்டிருக்காங்க. மேல இருந்து வந்து குதிக்கறாங்க’ அதனால வாய்ப்பு கிடைத்தால் நான் செல்வேன்’ என்றார் ஆரத்தி. ஆரத்தியின் தலைக்கனம் அப்படியொன்றும் குறைந்தது போல் தெரியவில்லை. 

‘மக்கள் விருப்பப்பட்டு அனுப்பினால் தாம் செல்லத் தயார்’ என்றார் ஜூலி.

வெளியேறிய போட்டியாளர்கள் சிலர் மறுபடியும் உள்ளே சென்றால் அந்தக் கலவையின் வெளிப்பாடு சுவாரசியமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. ஆரத்தியும் ஜூலியும் மாறியிருக்கிறார்களா, அப்படியேதான் இருக்கிறார்களா என்று தெரிந்து விடும். இந்த இருவரும்தான் மறுபடியும் செல்வார்கள் என்று தெரிகிறது. 

அந்தக் கலந்துரையாடலில் ஓவியா இல்லாத குறையைப் போக்க, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சமூகத்திற்கு ஓவியா அளித்த செல்ஃபி வீடியோவை சுருக்கி ஒளிபரப்பினார்கள்.

‘நான் ரொம்ப நல்லா இருக்கேன். திரும்பவும் பிக்பாஸ் போட்டியாளராக வர மாட்டேன். நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்கு’ போன்ற விஷயங்களோடு வீடியோவை நிறுத்திக் கொண்டார்கள். ‘இந்த நிகழ்ச்சியை ஏணியாக பயன்படுத்திக் கொண்டார் ஓவியா. ஏணியிலேயே தொடர்ந்து நிற்க முடியாது. அவர் மேலும் உயர வாழ்த்துகள்’ என்றார் கமல்.

‘பிக்பாஸால் ஓவியாவிற்கு அல்ல, ஓவியாவினால்தான் பிக்பாஸிற்கு புகழ்’ என்கிற மீம் நினைவிற்கு வந்தது. ஆனால் அதை ஏற்க பிக்பாஸ் தரப்பு தயாராக இல்லை போலிருக்கிறது.

அந்த வீடியோவை பலரும் பார்த்திருப்பார்கள்தான் என்றாலும் இணைய வசதி இல்லாதவர்களுக்காக அதை முழுமையாக ஒளிபரப்பியிருக்கலாம். ‘எனக்காக எவரையும் திட்டாதீர்கள். ஒருவகையில் அவர்களும் பாவம்தான்.’என்பது உள்ளிட்டு ஆரத்தியைப் போன்று ஓவியாவும் புற்றுநோய் நோயாளிகளுக்காக தன் தலைமுடியை தியாகம் செய்த பகுதியையும் இணைத்து ஒளிபரப்பியிருக்கலாம். 

எவர் புதிய போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டில் தங்களின் மீள்வருகையை நிகழ்த்தப் போகிறார்கள் என்பது இன்று தெரிந்து விடும்.

- சுரேஷ் கண்ணன்

 


Add new comment

Or log in with...