ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அகதி முகாமில் இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை (03) நடத்திய பாரிய இராணுவ நடவடிக்கையை அடுத்து அந்த அகதி முகாமில் இருந்து ஆயிரக் கணக்கானோர் வெளியேறியுள்ளனர்.
பலஸ்தீன நகரான ஜெனினில் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தியும், நூற்றுக்கணக்கான துருப்பினர்களை அனுப்பியும் நடத்திய இந்த சுற்றிவளைப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதோடு 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை எதிர்த்து மேற்குக் கரையின் பல நகரங்களிலும் நேற்று (04) பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. சுமார் 14,000 மக்கள் வசிக்கும் ஜெனின் அகதி முகாமில் உள்ளவர்களுக்கு ஆதரவை வெளியிடும் வகையிலேயே இந்த வேலை நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.
இது இஸ்ரேல் இராணுவம் கடந்த 20 ஆண்டுகளில் மேற்குக் கரையில் நடத்திய தீவிர படை நடவடிக்கையாக இருந்ததோடு 2000களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற இரண்டாவது பலஸ்தீன எழுச்சிப் போராட்டத்தின்போது இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளை நினைவூட்டுவதாக இருந்தது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையிலான பதற்றம் அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த இராணுவ நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1.14 மணிக்கு ஐ.நா நிதியில் இயங்கும் பாடசாலைகளுக்கு நெருக்கமாக உள்ள ஜெனின் அகதி முகாமின் மையப்பகுதியை இலக்கு வைத்து வான் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது 1,000க்கும் அதிகமான இஸ்ரேலியப் படையினர் அந்த முகாமில் சுற்றிவளைப்பை நடத்தியது.
இந்நிலையில் ஜெனின் இராணுவ நடவடிக்கை நிறைவடையும் தறுவாயில் உள்ளது என்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் மூத்த உதவியாளர் ஒருவர் நேற்று (04) தெரிவித்தார். எனினும் அங்கு தொடர்ந்தும் இஸ்ரேலிய இராணுவம் சுற்றிவளைப்புகளை நடத்துவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் தமது போராளிகள் நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன போராட்ட அமைப்பான இஸ்லாமிய ஜிஹாத் தெரிவித்துள்ளது. மற்றொரு போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பின் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தவிர 17 தொடக்கம் 23 வயது கொண்ட கொல்லப்பட்டிருப்பும் மற்ற ஐவரும் போராளிகளா அல்லது பொதுமக்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் இந்த அகதி முகாமில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியுள்ளனர். “இந்த முகாமில் சுமார் 3,000 பேரே எஞ்சியுள்ளனர்” என்று ஜெனின் பிரதி ஆளுநர் கமால் அபூ அல் ரூப் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். வெளியேறியவர்கள் பாடசாலைகள் மற்றும் ஏனைய தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை பல நாட்கள் நீடிக்கும் என்ற அச்சத்துக்கு மத்தியில் அந்த அகதி முகாமில் இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதாக பலஸ்தீன செம்பிறை அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்குக் கரை நகரான ஜெனினின் வடக்கு புறநகர் பகுதியில் 1950களில் அமைக்கப்பட்ட இந்த அகதி முகாம் பலஸ்தீன போராட்ட அமைப்புகளின் மையமாக செயற்பட்டு வருகிறது.
ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாம், பத்தா உட்பட போராட்டக் குழுக்களின் நூற்றுக் கணக்கான போராளிகள் இந்த முகாமை தளமாகக் கொண்டே இயங்குகின்றனர். இஸ்ரேல் உருவாக்கப்படதை அடுத்து அகதியாக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகளே இங்கு வாழ்கின்றனர்.
இந்த தாக்குதலுடன் மேற்குக் கரையில் இந்த ஆண்டில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு பலஸ்தீனர்களுடன் 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் இஸ்ரேலுடன் உறவை பேணும் ஜோர்தான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அரபு நாடுகளும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை தாம் பாதுகாப்பதாகவும் மேற்குக் கரையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் அமைதி காக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவசரக் கூட்டத்தை நடத்திய பலஸ்தீன தலைமை, ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ள இஸ்ரேலுடனான தொடர்பை நிறுத்துவதாக அறித்துள்ளது. அமெரிக்காவுடனான உறவை மட்டுப்படுத்துவதற்கும் திட்டமிட்டிருப்பதாக பலஸ்தீன தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி பேசிய இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, “அண்மைய மாதங்களில் ஜெனின் பயங்கரவாதிகளுக்கான சொர்க்கபுரியாக மாறியுள்ளது. இதனை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்றார்.
இஸ்ரேலிய படை ஜெனினில் வான் மற்றும் தரை வழியாக தாக்குதல்களை நடத்தியது 2002 ஆம் ஆண்டுக்குப் பின் இது முதல்முறையாகும். அப்போது இந்த அகதி முகாமில் ஒரு வாரத்துக்கு மேல் இடம்பெற்ற மோதலில் 50க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் மற்றும் 23 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டனர்.
Add new comment