France 24 செய்தி சேவையில் ஜனாதிபதி தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்திலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் விஜயத்தின் போது France 24 செய்தி சேவை நடத்திய செவ்வியிலே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இந்திய வம்சாவளிகளான மலையக மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திடீரென நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள மக்கள் அங்கு சிறுபான்மையினராகியுள்ளனர்.
தமிழ் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களது சமூக முன்னேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே, அவர்களுக்கு அரசியலில் ஈடுபட முடிந்துள்ளது.மலையகப் பிரதிநிதிகள் சிலர், அரசாங்கத்தின் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கின்றனர். வட மாகாணத்திலுள்ள அரசியல் தலைவர்களும் மக்களும் அரசியலமைப்பிலுள்ள அதிகார பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றனர். அரசியலமைப்பிலுள்ள விடயங்கள் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அவ்விடயத்தில் அரசாங்கம் எந்த விதத்திலும் தலையிடப் போவதில்லை. இதற்கான உத்தரவாதமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய சில அதிகாரங்களையும் இவர்கள் கோருகின்றனர்.இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Add new comment